இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை பிறழ்வு அடைந்த புதிய வகை கொரோனா நுண்கிருமி மிக வேகமாக பரவி வருகின்றது. வட இந்திய மாநிலங்களில் மனித உயிர்களை வேட்டையாடி வருகின்றது. கடந்த ஐந்து நாட்களாக தினசரி கொரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சங்களை கடந்து பதிவாகி வருகின்றது. அமெரிக்காவிற்கு அடுத்து கொரோனா நோயாளிகள் அதிகம் பாதித்த இரண்டாவது நாடு என்னும் மோசமான சாதனையை அடைந்திருக்கிறது இந்தியா.
கதறும் குஜராத் மற்றும் உத்திரப்பிரதேச மக்கள்
ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி முன்வைக்கும் ‘குஜராத் மாடல்’ என்னும் மாயத்திரை கிழிந்து சிதிலமாய் போயிருக்கின்றது. இதுவரை மேலாண்மையின் அடையாளமாய் முன்வைத்த பொய்கள் எல்லாம் அடித்தளமே இல்லாமல் அழிந்து போயிருக்கிறது. குறிப்பாக குஜராத், உத்திரப்பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அங்கிருக்கும் மக்கள் மருத்துவ அடிப்படை வசதிகளை வேண்டி கதறும் பதிவுகள் குலைநடுங்க வைக்கின்றன.
குஜராத்தின் மோசமான மருத்துவக் கட்டமைப்பு
குஜராத்திலிருக்கும் 33 மாவட்டங்களில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளில் வெறும் 16 CT ஸ்கேன் கருவிகளும், 5 MRI ஸ்கேன் கருவிகளும் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது. (தமிழகத்தில் 38 மாவட்டங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் 116 CT ஸ்கேன் கருவிகளும், 40 MRI ஸ்கேன் கருவிகளும் இருக்கின்றன). இவை அந்த மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்புகளின் தோல்வியையும் மருத்துவத்திற்கு அம்மாநில அரசு கொடுக்கத் தவறிய முக்கியத்துவத்தையும் பறைசாற்றுகின்றன.
இன்னொரு ஊரடங்கை எதிர்கொள்ள மக்கள் தயாராய் இல்லை
இன்று புதுதில்லியில் இருந்து அங்கு வேலைபார்க்கும் வெளிமாநில தொழிலாளர்கள் அலை அலையாய் தங்களது சொந்த மாநிலங்களுக்கு போவதற்கு பேருந்து நிலையத்தில் பேரலையாய் திரண்டிருக்கிறார்கள். கடந்த ஊரடங்கு நாட்களில் அவர்கள் நடந்த கால்தடத்தின் இரத்தத் தடங்கள் மீண்டும் அவர்களுக்கு நேராதிருக்க சொந்த ஊரை நோக்கி விரைகிறார்கள். சில மாநிலங்கள் ஒரு வாரம், பதினைந்து நாட்கள் என்று ஊரடங்கு நாட்களை அறிவித்திருக்கின்றன. தமிழகம் இரவுநேர ஊரடங்கை அறிவித்திருக்கிறது. உண்மையில் இன்னொரு முழு ஊரடங்கு நாட்களை எதிர்கொள்ள எளிய மக்கள் தயாராகவில்லை.
இன்னொரு முழு ஊரடங்கு வந்தால் பட்டினி மரணங்கள் அதிகரிக்கலாம்
பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என்று ஏற்கனவே அவர்களின் பொருளாதாரம் மோசமான நிலையை சந்தித்திருந்தபோது, கடந்த வருடம் நீடித்த ஊரடங்கு அவர்களை முழுவதுமாக அழிவின் விளிம்பில் நிறுத்தியிருக்கிறது. இன்னொரு ஊரடங்கு அறிவிக்கப்பட்டால் கொரோனா நுண்கிருமியால் இறப்பவர்களை விட பட்டினியால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற எண்ணமும் எழுகிறது. சாலையெங்கும் கடை பரப்பிய எளிய வணிகர்கள் தங்களது வாழ்வை இழந்து நிர்கதியாய் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மருந்துக்கு கூட ஜி.எஸ்.டி
கொரோனா மருத்துவத்திற்கு அடிப்படையாய் விளங்கும் ஆக்ஸிஜன், ரெம்டெசிவர் ஆகிய மிக முக்கிய உயிர்காக்கும் மருந்துகளுக்கு கூட ஜி.எஸ்.டி வரியை விலக்காமல் அதிலும் தங்களது வருமானத்தை உற்று நோக்குகிறது அரசு. இவை எளிய மக்கள் மீது அரசு தொடுக்கும் போராகவே தெரிகிறது. வடமாநிலமெங்கும் கடந்த சில நாட்களாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள். சமூக வலைத்தளங்கள் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றில் அவர்களின் அழுகுரல், மரணஓலங்கள் அனைவரையும் உறைய வைக்கின்றன.

நிரம்பி வழியும் மயானங்கள்
உத்திரப்பிரதேச மாநிலத்தின் மிக முக்கிய நகரமான லக்னோ நகரத்தில் மயானங்கள் நிரம்பி வழிகின்றது. அங்கு இடமில்லாமல் சாலையோரம் நடைபாதைகளில் இறந்தவர்களை தகனம் செய்கிறார்கள். மருத்துவமனைகளில் ஒருவர் அனுமதிக்கப்பட்டு அவருக்கு படுக்கை வேண்டுமென்றால் முதல்வர் அலுவலகத்தின் பரிந்துரைக் கடிதம் அவசியம் என்ற கொடுமை உத்திரப்பிரதேசத்தில் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் வி.கே.சிங் தனது சகோதரருக்கு மருத்துவமனையில் படுக்கை வேண்டி ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றே போதும் அங்கு என்னவிதமான சூழ்நிலை நிலவுகின்றது என்பதற்கு.
கொரோனா நோயாளியை ”செத்து போ” என சொன்ன அலுவலர்
இதில் உச்சமாக கொரோனா மருத்துவ உதவி மையத்திற்கு தொலைபேசியில் அழைத்து உதவி கேட்ட நோயாளி ஒருவருக்கு மையத்திலிருந்து கொடுக்கப்பட்ட பதில் ” இறந்து போ” என்பதாக இருந்தது என்றால் எப்படிப்பட்ட சேவையை அந்த மாநில அரசு தன்னுடைய மக்களுக்கு தருகின்றது என்ற கேள்வி எழுகின்றது.
கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு
இதில் இன்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அனைத்து மாநிலங்களிலும் ஆக்சிஜன் விநியோகம் தேவையான அளவிற்கு அதிகமாகவே இருப்பதாகவும், நோயாளிகள் ஆக்சிஜனை அதிகமாக பயன்படுத்தி வீணாக்காமல் தேவையான அளவிற்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று கூறிய அறிக்கை மீண்டும் சமூக வலைத்தளங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில் கதறும் மக்கள்
வடமாநிலங்களில் எங்குமே ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் அதிக ஆக்சிஜன் இருப்பதாக அமைச்சர் தெரிவித்த கருத்துக்களை #ToomuchOxygen என்று கருத்துக்குறிகள் இட்டு வலைதளவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அவற்றில் இங்கு சில சமூக வலைதள பதிவுகளை உங்கள் பார்வைக்கு தருகிறோம். நிலைமை மிக மோசமாக வடமாநிலங்களில் நிலவுகிறது , மரணத்தின் வாசனையில் நகர் முழுவதும் கதறி அழுகின்றது.
1. கொரோனா மருத்துவ உதவி மையத்திற்கு தொலைபேசியில் அழைத்து பேசிய நோயாளி ஒருவருக்கு மையத்திலிருந்து கொடுக்கப்பட்ட ” இறந்து போ” பதில் பற்றிய பதிவு.
2. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உறவினர் ஒருவருக்கு உட்கார இருக்கை வேண்டி பதிவிடப்பட்ட பதிவு.
3.104.6 டிகிரி அளவில் காய்ச்சல் கண்டிருக்கும் தந்தைக்கு ஏதாவதொரு மருத்துவமனையில் அனுமதி வேண்டி பதிவிடப்பட்ட பதிவு.
4.ஆக்ஸிஜன் சிலிண்டர் எங்குமே கிடைக்கவில்லை என்றும் அவை தங்கள் உறவினர்களுக்கு அவரசமாக தேவை என்று பதிவிடப்பட்ட பதிவுகள்

5. ருபாய் 1200 மதிப்புள்ள ஒரு பேபி ஃப்ளு மாத்திரை அட்டையை 3500 ரூபாய்க்கு விற்பதாகவும் அப்படியிருந்தும் மக்கள் அவற்றை வாங்குவதற்கு வரிசையில் முண்டியடிப்பதால், இது நிச்சயமாக ஒரு பேரழிவு என்று பதிவிட்டவரின் பதிவு.

6. கொரோனா மருத்துவ உதவி மையத்தின் எந்தவொரு எண்களும் வேலை செய்யவில்லை என்றும் அதிகாரிகள் அனைவரின் எண்களும் அனைத்து வைக்கப்பட்டிருக்கின்றன என்றும் சொல்கிறது இந்த பதிவு.

7.ஒருவர் தன்னுடைய இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 31 என்ற அபாயகரமான அளவிற்கு குறைந்திருப்பதாகவும் ஏதாவதொரு விதத்தில் யாரவது உதவவும் என்று பதிவிட்ட பதிவு.

8. நடைபாதையில் இறந்தவர்களை தகனம் செய்யும் காட்சி

மேலே குறிப்பிட்டவை சமூக வலைத்தளத்தில் மருத்துவ உதவி வேண்டி பதிவிட்ட வடஇந்திய மக்களின் கடல் போன்ற பதிவுகளில் சில துளிகள் தான். மரணத்தின் பாதையை மிகுந்த துயரத்தோடு கடந்து கொண்டிருக்கின்றனர் அவர்கள். இன்று கசியாபாத் நகரத்தில் ஒரு குடும்பத்தில் மொத்தம் நான்கு பேரென்றும் கடந்த மூன்று நாட்களில் இதுவரை ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொருவராக இதுவரை மூன்று பேர் இறந்திருக்கின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவை அங்குதான் நடக்கின்றன என்று அலட்சியமாக இருக்கவேண்டாம் என்று தமிழக மக்களை ‘மெட்ராஸ் ரிவியூ’ கேட்டுக்கொள்கிறது. ஏனென்றால் நாளொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேலாக பரிசோதிக்கப்படும் மக்களில் கொரோனா பாதித்தவர்களின் சதவிகிதமானது 10% சதவிகிதத்தில் தமிழகத்தில் பதிவாகிறது. இது வரவிருக்கும் கடும் சோதனைகளை பரிசளிக்கும் நாட்களை முன்னறிவிக்கின்றது. மிகுந்த எச்சரிக்கையோடு பாதுகாப்பாக இந்த நுண்கிருமியை அணுக மக்களை கேட்டுக்கொள்கிறோம்.
துயரதாமரை நாடெங்கும் படர்கிறது. அதை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கியெறிய வேண்டிய கடமை நமக்குள்ளது.
-Madras Review