கொரோனா பெருந்தோற்று பரவத் துவங்கியதில் இருந்து பொதுத்துறை நிறுவனங்களும், அரசு பொது மருத்துவமனைகளுமே மக்களுக்கு பெரும் பாதுகாப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பெருந்தோற்றுக்கான தடுப்பூசி தயாரிப்புக்கென்று ஒன்றிய அரசின் 2021-22ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 4517 கோடி
இதிலிருந்து 4517 கோடி ரூபாயை இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு முன்பணமாக மோடி அரசு கொடுத்துள்ளது. மேலும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு 3000 கோடி ரூபாயும், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு 1567 கோடி ரூபாயும் எந்தவித உத்தரவாதமும் பெறாமல் அரசு கொடுத்துள்ளது.
நிதி ஒதுக்கப்படாத செங்கல்பட்டு அரசு இந்துஸ்தான் பயோடெக் நிறுவனம்
தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் இயங்கி வரும் அரசுத் துறை நிறுவனமாக இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், தடுப்பூசி தயாரிப்பில் பொதுத்துறை நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுவாகி வருகிறது.
பொதுத்துறை நிறுவனங்களை தடுப்பூசி தயாரிப்பிற்கு பயன்படுத்த வேண்டும்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தடுப்பூசிக்காக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபாய் 35,000 கோடியை உடனடியாக தடுப்பூசி தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும். பொதுத்துறையில் தடுப்பூசி தயாரிப்புக்கான வாய்ப்புள்ள அனைத்து வசதிகளும் பயன்படுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் ரூபாய் 600 கோடி செலவில் உருவாக்கப்பட்டு பயன்படாமல் உள்ள Integrated Vaccine Complex-ஐ உடனடியாக தடுப்பூசி தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் தடுப்பூசி மற்றும் மருந்துகள் விநியோகம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். மருந்து பதுக்கலை இரும்புக் கரம் கொண்டு தடுக்க வேண்டும். தடுப்பூசி தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களை தருவதாக வாக்குறுதி அளித்த அமெரிக்க நிர்வாகம் அதனைத் தருவதை மத்திய அரசாங்கம் உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு நிறுவனத்தை பயன்படுத்துக – டி.கே.ரங்கராஜன் மோடிக்கு எழுதியுள்ள கடிதம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
நம் நாட்டில் இன்று நிலவிவரும் கடுமையான கோவிட் தொற்று குறித்து தாங்கள் அறிவீர்கள். இதைத் தடுப்பதற்கான தடுப்பூசியை தயாரிக்கவும் கிடைக்கும் இடங்களில் இருந்து எல்லாம் தடுப்பூசி வாங்கிடவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வைரஸ் சம்பந்தமாக கருத்து தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் ஒரு குறிப்பிட்ட காலம் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். இந்த தடுப்பூசியை மக்கள் மூன்றாவது தவணையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை நமது நாட்டிலேயே தயாரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றக் கருத்தில் தாங்கள் உடன்படுவீர்கள் என்று கருதுகிறேன். இந்த பிரம்மாண்டமான பணியில் மேலே குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமல்லாது ஏனைய நான்கு பொதுத்துறை தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கச் செய்கிறது.
உலகத்தரம் வாய்ந்த எந்திரங்கள்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தங்களை நேரில் சந்தித்து செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்து, இந்த பொதுத்துறை நிறுவனத்திற்கு போதுமான நிதிஒதுக்கீடு செய்து சீரமைக்க வேண்டும் என்று தங்களைக் கேட்டுக்கொண்டேன். சமீபத்தில், ஜனவரி 8-ஆம் தேதி மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இந்த தொழிற்சாலையை பார்வையிட்டபோது நானும் அங்கு சென்று அவரை சந்தித்தேன். தொழிற்சாலையை முழுமையாக பார்வையிட்ட அமைச்சர், உலகத்தரம் வாய்ந்த எந்திரங்கள் அங்கு நிறுவப்பட்டு இருப்பதைக் கண்டார். இந்த தொழிற்சாலைக்குத் தேவையான நிதியை தருவதாக வாக்குறுதி அளித்தார்.
தடுப்பூசி தயாரிக்கும் திறன் பெற்றுள்ளது
கோவிட் தடுப்பூசி தயாரிக்கும் பிரம்மாண்டமான பணியினை அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் மேற்கொள்ளத்தக்க வகையில் அவற்றின் உற்பத்தித் திறனை மேம்படுத்த வேண்டும் என்று கருதுகிறேன். இதுதான் மிகப் பிரதானமான கடமை என்றும் கருதுகிறேன். இந்தச் சூழ்நிலையில் செங்கற்பட்டு பொதுத்துறை நிறுவனம் தடுப்பூசி தயாரிக்கத் தக்க அனைத்து திறனையும் பெற்றுள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். தங்களுக்கு உள்ள கடுமையான பணிகளுக்கு மத்தியில் இந்த விஷயத்தில் உங்கள் கவனத்தை செலுத்தி செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட உதவிட வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
உலகத் தரம் வாய்ந்த இயந்திரங்களுடன் பொதுத்துறை நிறுவனம் தயாராக இருக்கும்போது, நிதிநிலை அறிக்கையில் தடுப்பூசி தயாரிக்க என்று ஒதுக்கிய பணத்தை, எந்த உத்தரவாதமும் இல்லாமல் இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்திருப்பது இந்த பேரிடரில் கூட அரசு எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுப்பதில் முனைப்பு காட்டுகிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
-Madras Review