ஜி.ஆர்.ரவீந்திரநாத்

தடுப்பூசி போட்ட பிறகு மரணம் ஏற்பட்டால் உடற்கூராய்வு கண்டிப்பாக செய்ய வேண்டும் – கோரிக்கை வைத்த மருத்துவர்கள்

கொரோனாவின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. கொரோனாவை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு  நடவடிக்கைகள் போதாது. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு ஒருவருக்கு மரணம் ஏற்பட்டால், அதற்கான காரணங்களைக் கண்டறிய உடற்கூறாய்வு அவசியம் செய்திட வேண்டும். தடுப்பூசிகள் பிரச்சினையில் வெளிப்படையாக செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் பேசும்போது,

கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இந்த உக்கிரமான இரண்டாவது அலையை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள  நடவடிக்கைகள் மற்றும் அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் போதாது. தொற்று அதிவேகமாக பரவும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யத் தேவையான பொருளாதார உதவிகளை செய்து முழு முடக்கத்தை அறிவிக்க வேண்டும்.

பொருளாதார ரீதியான உதவிகளை செய்யும் பொறுப்பை தட்டிக்கழிக்கும் நோக்கில், பொதுமுடக்கத்தை அறிவிக்கத் தயங்குவதுடன், மறைமுகமான முடக்கத்தை அறிவித்து வருவது மக்களின் பொருளாதார நலன்களை பாதிக்கும்.கொரோனா தடுப்பிலும் உரிய பயனைத் தராது.

கொரோனாவை தடுத்திட கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

முகக்கவசம், பாதுகாப்புக் கவசம், வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ சாதனங்கள் மற்றும் கருவிகளுக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அவற்றை பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்திட வேண்டும். 

கை நுண்ணியிரி நீக்கி திரவங்களில் கலப்படம் செய்வது அதிகரித்து வருகிறது. இத்தகைய கலப்படங்களை 80-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்  செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இத்தகைய கலப்பட நடவடிக்கைகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பாதிப்பை உருவாக்கும். கலப்படத்தை ஒழித்திட தீவிரமான நடவடிக்கைகள் அவசியம்.

மருந்துகள், மருத்துவக் கருவிகள் மற்றும் சாதனங்களில் ஏற்பட்டுள்ள பதுக்கலை தடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

ரெம்டிசிவிர் மருந்து தட்டுப்பாட்டையும், விலை உயர்வையும் போக்க வேண்டும்

ரெம்டிசிவிர் மருந்துகள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன் உற்பத்திக்கு கட்டாய லைசென்ஸ் கொடுத்து பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தியை அதிகரித்து, குறைந்த விலையில் மக்கள் மருந்தகங்கள் மூலம் வழங்க வேண்டும். மருந்து உற்பத்தி நிறுவனங்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். மருந்து மற்றும் தடுப்பூசி விநியோகத்தில் பாரபட்ச போக்குகளை கடைபிடிக்கக் கூடாது.

ரெம்டிசிவிர், கொரோனா தடுப்பூசிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். தடுப்பூசிகளின் தட்டுப்பாட்டை போக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தியை தொடங்கிட வேண்டும்.

ரெம்டிசிவிர் உள்ளிட்ட மருந்துகள், முகக் கவசம், கிருமி நாசினி, கை சுத்திகரிப்பான் உள்ளிட்ட கொரோனா தடுப்புக்குத் தேவையானவற்றை மக்கள் மருந்தகம் மற்றும் அம்மா மருந்தகம்  மூலம் விநியோகிக்க வேண்டும்.

அமெரிக்காவின் தடையை நீக்கக் கோர வேண்டும்

கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்க தடை விதித்துள்ளது. அதனால் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்தடையை நீக்கக் கோரி உடனே மத்திய அரசு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டும். 

வெளிநாட்டு நிறுவனங்களில் தடுப்பூசிகளை அவசர கோலத்தில் அனுமதிக்கக் கூடாது

வெளிநாட்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளை இந்திய மக்களிடம் முறையான பரிசோதனைகளை செய்து பார்க்காமல், அவசர கோலத்தில் அனுமதிப்பது சரியல்ல. அது தடுப்பூசிகளின் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும்.

மத நிகழ்ச்சிகள், கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்

கும்பமேளா உள்ளிட்ட மத நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்க வேண்டும். மக்கள் பெருந்திரளாக கூடும் கூட்டங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்.

மேற்கு வங்கத் தேர்தலை ஒரே கட்டத்தோடு முடிக்க வேண்டும். தேர்தல் நடைபெற்றுள்ள மாநிலங்களில் உடனடியாக வாக்கு எண்ணிக்கையை முடித்து ,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசுகளை உருவாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும். மக்கள் நலனைவிட தனது கட்சி நலனை பெரிதாக பாஜக கருதுவது கண்டனத்திற்குரியது.

தடுப்பூசிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்திட வேண்டும்.

தற்பொழுது பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும், அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி (Emergency  Use Approval) என்ற அடிப்படையிலேயே பயன்படுத்தப்படுகிறது. எனவே, தடுப்பூசிகளால் ஏற்படும் பக்க விளைவுகள் (AEFI – Adverse Events Following Immunisation) குறித்து நடுநிலையான, சுதந்திரமான மருத்துவ நிபுணர்குழு கண்காணிக்க வேண்டும். ஆய்வு செய்ய வேண்டும். அதற்கான ஏற்பாட்டை மத்திய, மாநில அரசுகள் செய்திட வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு குறைந்தபட்சம் 14 நாட்களுக்குள் ஏற்படும் அனைத்து மரணங்கள் குறித்தும் முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். உடற்கூறாய்வுகள் நடத்தப்பட வேண்டும். 

விவேக் உடலை உடற்கூராய்வுக்கு உட்படுத்தியிருக்க வேண்டும்

நடிகர் திரு.விவேக் அவர்களின் உடலையும், உடற்கூறாய்வுக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். அவரது மரணம் தடுப்பூசியால் ஏற்பட்டத்தல்ல என்ற தமிழக அரசின் கருத்தை அறிவியல் ரீதியாக  நிரூபிக்க உடற்கூறாய்வு உதவிகரமாக இருந்திருக்கும். மருத்துவ அறிவியலில் ஊகங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் இடமில்லை. அறிவியல் கருத்துக்கள், கோட்பாடுகள் அனைத்தும் நடைமுறையில் நிரூபிக்கப்பட வேண்டும். நிரூபணம் சார்ந்ததாக (Evidence Based) இருக்க வேண்டும். அப்போது தான் மக்களின் நம்பிக்கையை பெற முடியும். தடுப்பூசிகளின் சாதக பாதகங்களை விளக்கி, தடுப்பூசிகளின் அவசியம் குறித்து மக்களிடம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். 

தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்பதை மக்கள் உணர வேண்டும்

அமெரிக்கா, இஸ்ரேல், இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களிடையே, கொரோனா தொற்று ஏற்பட்டவர்களிடம் இறப்பு விகிதம் மிக மிகக் குறைவாகவே ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை வெறும் 0.0009% மட்டுமே. கொரோனா தடுப்பூசி தொடர்பான மரணங்கள் இந்தியாவில் 0.0002% விழுக்காடு மட்டுமே. எனவே கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்பதையும், கொரோனா மரணங்களை தடுப்பதில் அது மிகச் சிறந்த ஆயுதம் என்பதையும் மக்கள் உணர வேண்டும்.

நவீன அறிவியல் மருத்துவத்திற்கு எதிராகவும் தடுப்பூசிகளுக்கு எதிராகவும் தவறான கருத்துக்களை மக்களிடம் பரப்புவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் , இலவசமாக கொரானா தடுப்பூசியை  குறுகிய காலத்திற்குள் வழங்க வேண்டும். அதுவே மந்தை எதிர்ப்பாற்றலை ( Herd Immunity) உருவாக்கி, கொரோனா பரவலை தடுத்திட உதவும்.

முதுகலை நுழைவுத் தேர்வை தள்ளிவைத்தது தவறு

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் (NEET PG) நுழைவுத் தேர்வை தள்ளிவைத்தது தவறான முடிவு. மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள நேரத்தில் நீட் நுழைவுத் தேர்வை தள்ளிவைத்தது மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் மருத்துவர்களை கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபடுத்தும் வாய்ப்பு போய்விட்டது. எனவே உடனடியாக நீட் (NEET PG) நுழைவுத் தேர்வை நடத்தி , முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும். இது மருத்துவர்கள் பற்றாக்குறையைக் குறைக்க உதவும்.

மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும்

போதிய மருத்துவர்களையும், செவிலியர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் உடனடியாக நியமித்திட வேண்டும்.

முதுநிலை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் ஊதியத்தை இரண்டு மடங்கு உயர்த்திட வேண்டும். அனைத்து தற்காலிக ஊழியர்களுக்கும் பணிநிரந்தரம் வழங்கிட வேண்டும்.

அண்மையில் பயிற்சி மருத்துவத்தை முடித்த மருத்துவர்களையும், வேலை வாய்ப்பின்றி இருக்கும் மருத்துவர்களையும் உடனடியாக ரூ 60,000 க்கும் குறைவில்லாத தொகுப்பூதியத்துடன் பணியில் அமர்த்திட வேண்டும்.இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்களின் தேர்வை விரைவாக முடித்து,முடிவுகளை உடனடியாக அறிவித்து அவர்களை கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபடுத்த வேண்டும். எம்ஆர்பி தேர்வை எழுதி சான்றிதழ் சரிபார்ப்பையும் நிறைவு செய்த  அனைத்து மருத்துவர்களுக்கும் உடனடியாக வேலை வழங்கிட வேண்டும். அவசியப்படின்  மருத்துவ மாணவர்களையும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு  மையங்களில், உதவித் தொகை வழங்கி பணி அமர்த்த வேண்டும்.

ஏராளமான ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் கையுறைகள் பற்றாக்குறை நிலவுகிறது. அதைப் போக்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்”  என்று   கூறினார் 

இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, பாராமெடிக்கல் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் பி. காளிதாஸ், மாநில துணைத் தலைவர் எஸ்.தனவந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

-Madras Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *