சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் துடைப்பதற்கான ஒரு கருவி கல்வி மட்டும்தான். சமத்துவமற்ற சாதிய படிநிலையை பாரம்பரியமாகக் கொண்ட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் மேம்பாடு அடைவதற்கான முதல் புள்ளி கல்வி என்பதை ஆழமாக நம்பினார் அண்ணல் அம்பேத்கர். ஆனால் இன்றைய பாஜக அரசு ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி உதவித் தொகையை மறுக்கிறது.
பாஜக, ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா சித்தாந்தவாதிகள் தாங்கள்தான் இந்துக்களின் பாதுகாவலன் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர். அவர்கள் சொல்லும் இந்து என்கிற சொல் உயர் சாதியினரை மட்டும் பாதுகாப்பதாக இருக்கிறது. பெரும்பான்மையாக வாழும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் சமூகத்தினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பொருட்படுத்தாமல் உயர் சாதியினரின் நலனை மையமாக வைத்து தனது திட்டங்களை வகுத்து வருகிறது.
மத்திய அரசு அலுவலகங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினரின் நிலை
ஏற்கனவே நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டை ஒரு முற்றுப்புள்ளிக்கு கொண்டுவருவது குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் வெளிப்படையாக பேசிவருகின்றனர். ஆனால் 2019 கணக்கீட்டின்படி பார்த்தால் இடஒதுக்கீட்டு முறை அதன் இலக்கை எட்ட போராடிக் கொண்டிருப்பது தெரியவருகிறது.
- மத்திய அரசு அலுவலகத்தில் உள்ள 89 செயலாளர்களில் ஒரே ஒருவர் மட்டும் எஸ்.சி பிரிவைச் சார்ந்தவர். மூன்று பேர் எஸ்.டி பிரிவைச் சார்ந்தவர்கள். மேலும் OBC பிரிவைச் சார்ந்தவர்கள் யாரும் இடம் பெறவில்லை.
- மத்திய அரசின் Class I jobs என்றழைக்கப்டும் முதல்நிலை பணியாளர்களில் 13.4% பேர் SC வகுப்பைச் சார்ந்தவர்கள், 6% ST வகுப்பைச் சார்ந்தவர்கள், மேலும் 27% இடஒதுக்கீடு இருந்தும் OBC பிரிவைச் சார்ந்தவர்கள் 13% பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
- அதேபோல் Class II jobs என்றழைக்கப்படும் இரண்டாம் நிலை பணியாளர்களில் SC வகுப்பைச் சார்ந்தவர்கள் 16%. ST வகுப்பை சார்ந்தவர்கள் 7%. மேலும் OBC பிரிவைச் சார்ந்தவர்கள் 14.77%.
- மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைபார்க்கும் 1125 பேராசிரியர்களில், SC வகுப்பைச் சார்ந்தவர்கள் 39 பேர் மட்டும்தான். மொத்த பேராசிரியர்களில் இது வெறும் 3.47% மட்டும். அதேபோல் ST வகுப்பைச் சார்ந்தவர்கள் 0.7% மட்டுமே இருக்கின்றனர். இந்த தரவரிசையில் OBC பிரிவைச் சார்ந்தவர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2620 இணை பேராசிரியர்களில் வெறும் 130 பேர் மட்டுமே SC வகுப்பைச் சார்ந்தவர்கள், 34 பேர் ST வகுப்பைச் சார்ந்தவர்கள்.
- இன்றைய சூழ்நிலையில் எஸ்.சி/எஸ்.டி. வகுப்பைச் சார்ந்த ஒருவர் கூட உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக இல்லை.
இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே நமக்குப் புரிந்து விடும். இந்துத்துவா சக்திகள் குறிப்பிடும் இந்துக்கள் யார் என்பது பாபர் மசூதி இடிப்பு துவங்கி இன்று பசு பாதுகாப்பு வரை நடக்கும் அனைத்து கலவரங்களிலும் ஈடுபட்டு கைதான இந்துக்கள் யாரும் முன்னேறிய உயர்சாதியினர் கிடையாது.
சிறுபான்மையிருடனான மோதலுக்கு தயார்படுத்துவதில் மட்டும்தான் இங்கு பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், பாஜக – ஆர்.எஸ்.எஸ்-சால் பட்டியல் இனத்தவர்களுக்கும், முன்னுரிமை கொடுக்கப்படுவது தூண்டுதலுடன் மாறாக வேலைவாய்ப்புகளில் இல்லை.
பகிர்ந்தளிப்பதில் தொடரும் வர்ணமுறை
இந்தியத் துணைக்கண்டத்தின் வளங்கள், அதிகாரம் மற்றும் ஆளுகை ஆகியவற்றைப் பகிர்ந்தளிப்பதில் வர்ணமுறை இன்றும் தொடர்கிறது. குறுகிய எண்ணிக்கை உடைய உயர்சாதியினர் அதிகாரவர்க்கத்தின் பெரும்பான்மையாகவும் நிரந்தரமான ஆளும் வர்க்கமாகவும் வீற்றிருக்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பிற்கு ஒருவரைத் தவிர இதுவரை எஸ்.சி / எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினரை அனுமதித்தது கிடையாது. பார்ப்பனர்களின் இறுகிய இடமாக நாக்பூர் உள்ளது. அங்கு முடிவெடுக்கும் சக்திகள் அவர்களாகவே இருக்கிறார்கள். எந்தவித ஜனநாயகமும் இல்லாத ஒரு அமைப்பு உருவாக்கிய சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படும் பாஜக அரசு எப்படி அரசியலமைப்புச் சட்டம் பரிந்துரைக்கும் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றும்.
அம்பேத்கரின் உருவ பொம்மையை எரித்த ஆர்.எஸ்.எஸ்-காரர்கள்
டிசம்பர் 11, 1948 அன்று புதுதில்லியின் ராம்லீலா மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் ஒரு பெரிய கூட்டத்தை ஏற்பாடு செய்து டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் உருவ பொம்மையை எரித்தனர். அவர்கள் துவக்கத்தில் இருந்ததே இந்துக்களுக்குள் சமத்துவத்திற்கும், சகோதரத்துவத்திற்கும் எதிரானவர்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒருபோதும் மூவர்ணக் கொடியையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் ஏற்றுக்கொண்டது கிடையாது.
இந்திய அரசியலமைப்பு பிராமண மேலாதிக்க சமூக வரிசை முறையை ஏற்கவில்லை. அது வர்ணாசிரமத்தைப் பொருட்படுத்தவில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ் அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கான அவர்களின் எதிர்ப்பு இன்றுவரை உறுதியானது.
அரசியலமைப்பை வடிவமைக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் நேரடியாக மனுஸ்மிருதியை ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.
மண்டல் கமிசனுக்கும், ஓ.பி.சி இடஒதுக்கீட்டுக்கும் எதிரான ஆர்.எஸ்.எஸ்
மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்துவதாக வி.பி.சிங் அறிவித்தபோது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரகசிய நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் சலசலப்புக்கு வழிவகுத்தது. மேலும் எல்.கே.அத்வானியின் தலைமையில் நாடு தழுவிய ரத அணிவகுப்பைத் தொடங்க வாய்பளித்தது.
2006-ம் ஆண்டில் அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஓ.பி.சி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்புத் திருத்தம் செய்தபோது ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் ஆர்பாட்டங்களை நடத்தினார்கள்.
காலம்காலமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பெரும்பான்மை இந்துக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. சமீபத்திய ஆய்வுகள் இந்தியாவின் செல்வத்தில் 41% பங்குகளை உயர்சாதியினர் வைத்திருக்கின்றனர் என்று சொல்கிறது.
இன்றைய பாஜகவின் கேபினெட் மந்திரி சபையில் பெரும்பான்மையானோர் பார்ப்பன சமூகத்தைச் சார்ந்தவர்களே. இந்த போக்கு அவர்கள் கூறும் இந்துக்கள் யார் என்பதை வெளிப்படுத்துகிறது. பின்தங்கிய மக்களின் சமூக, கலாச்சார, கல்வி மற்றும் நிதி நலன்களுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு அவர்களை ‘இந்துக்களாக ஒன்று சேருங்கள்’ என்று அடையாளப்படுத்துவதினூடாக யாருக்கு லாபம்?