1.கிரா கொண்டாட்டத்தில் நாஞ்சிலின் வன்மக்காழ்ப்பு வாய்க்கொழுப்பு
“புதுமைப்பித்தன் குறித்துப் பேசுகிறீர்கள். திருநெல்வேலியில் அவருக்கு ஒரு சிலைவைக்க முடியலையா? எந்தப் பேருந்து நிலையம் என்றாலும் எவனாவது ஒருவன் கையைத் தூக்கிக்கொண்டு நிற்கிறான். அவர்கள் செய்ததைவிடக் குறைவான பணிகளையா புதுமைப்பித்தன் செய்திருக்கிறார்?”
– நாஞ்சில் நாடன்
1. புதுமைப்பித்தனை மேம்படுத்த அம்பேத்கரையும், அண்ணாவையும், எம்ஜிஆரையும் சிறுமைப்படுத்துவதா? நாஞ்சிலின் மொழியே அவரைக் காட்டிக் கொடுத்து விட்டதே. வன்மையான கண்டனத்துக்குரியதே.
2. ‘அத்தனையும் வேண்டாம் அடியேனை விட்டுவிடும் ‘எனும் பித்தனவன் பாடலே நாஞ்சிலின் முகத்தில் அறையும்.
3. பித்தனின் படைப்பின் அரசியல் நாஞ்சில் வகையறா அரசியலை முகத்திரை கிழிப்பதே.
4. முச்சந்தியில் கையைக்காட்டிக் கொண்டே இருப்பவர்தரப்பில்தான் நாஞ்சிலின் மகளுக்கான மருத்துவக் கல்லூரி அனுமதிக்குத் தமிழறிஞர் கோட்டாவில் பரிந்துரைத்தார் அப்துல் ரகுமான்.
5. வெங்கட் சாமிநாதன் வாரிசே பாசிச ஆசான் கூட்டுக்களவாணியே நாஞ்சில்.
2. குறிக்குப் பூண்போடக் கேட்ட குரங்கின் கதையும்; குறிக்குப் பூண்போட வேட்ட ஏனைக் குரங்குகளும்
“பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதும்மே”
என்று மனோன்மணிய நாடகத்தின் பாயிரத்தில் அவர் பாடுகின்றார். இந்தியாவிலேயே தேசியக்குரல் எழுவதற்கு முன் அவர் எழுப்பிய தமிழ்த்தேசியக்குரல் இது. அதில் தமிழ்த்தேசியத்தின் பழங்கால வரலாறும், அவர் வருங்கால முன்னறிவும், நம் வருங்கால ஆக்கமும் செறிந்து பொதிந்துள்ளன”
பழ.நெடுமாறன் (‘வள்ளலார் மூட்டிய புரட்சி’)
இவ்வாறு கால்டுவெல்லின் முடிவைச் சுந்தரனார் கவிதை வடிவில் தெரிவித்தார் என்பார்.
இந்தியாவிலேயே தேசியக்குரல் எழுவதற்கு முன் எழுப்பப்பட்ட தமிழ்த்தேசியக்குரலாக தமிழ்த்தேசியப்போராளி நெடுமாறனாரால் இனங்காணப்படும் இப்பாடலே; கலைஞரால் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவிக்கப்பட்ட இப்பாடலே சற்சூத்திர நாஞ்சிலாரின் சனாதன அகமல வெளிப்பாடாக எவ்வாறு சித்திரிக்கப்படலாகின்றதென இனிக் காண்போம்:
“பக்கத்து வீட்டுக்காரியைப்போல் பக்கவாதத்தில் விழாமல் ஓடியாடித் திரிவாயாக என எங்காவது வாழ்த்துவார்களா? முன்னர் அரசியல் செல்வாக்கோடு வாழ்ந்த இரண்டு சதமானம் பார்ப்பனரிடம் எழுந்த விரோதம் செம்மையானதோர் வரலாறு போலக் காண்கிறோம் நாம்”
“ஊரில் பழமொழிகள் சொல்வார்கள் வேலையற்ற நாவிதன் கழுதையைப் போட்டுச் சிரைத்தான் என்று மரத்தடியில் பட்டறை போட்டுத் தொழில் இல்லாமல் வாடி இருந்த கொல்லனிடம் குரங்கு சொன்னதாம் தன்குறிக்கு ஒரு பூண் போடென”
“இரண்டுசதம் பார்ப்பனரை அஞ்சி இன்றும் படுக்கையில் மூத்திரம் பெய்வது ஆரோக்கியமான நிலைப்பாடு அல்ல, யாம் எஞ்ஞான்றும் பார்ப்பனரை அஞ்சியவரும் அல்ல. எனது இந்த மொழிதல் என்மீது எம் முத்திரையைக் கொண்டுவந்து சேர்க்கும் என்பதை யோசிக்காமல் நானிதை எழுதவில்லை. வையாபுரிப் பிள்ளைக்கும், தெபொமீக்கும் கிடைத்த பட்டங்களை நாம் அறியமாட்டோமா?”
– நாஞ்சில் நாடன் (‘தமிழினி’ டிச. 2008)
என்ன ஒரு ‘தர்மாவேசம்’.? பார்ப்பனரைக் காட்டிலும் இப்படிப் பொங்குவதே சற்சூத்திரச் சம்பிரதாயமாம்.
இலக்கணக்கொத்து சாமிநாததேசிகர் போல் ‘யானும் அதுவே அறிக’ எனத் தனைப் பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லையா என்ன? மேற்படியார் உச்சிகுளிர மெச்சித்தமை உச்சிமோந்து அரவணைக்கச் சற்சூத்திரர் கையாளும் உத்தியீதே!
விஷ்ணுபுரம் இலக்கிய விருது; விஜயா பதிப்பக ஏற்பாட்டிலான ஜெயகாந்தன் விருது (தீர்மானிக்கும் சக்தியாக நாஞ்சில்); புதுமைப்பித்தன் பேரிலான விளக்கு விருது (‘வார்த்தை’ கோ. ராசாராம்);’ஆத்மாநாம் விருது’ ( சீனிவாசன் நடராஜன்) என்றெலாம் விருதுக்கான வாய்ப்பை எல்லாம்; ஜெமோவையும் நாஞ்சிலையும் கோ.ராசாராமையும் சீனிவாசன் நடராஜனையும் வீணாகப் பகைத்தே கெடுத்துக்கொள்வானேன் எனக் கள்ளமௌனமே சாதித்துக் கிடக்கும் தத்தம் குறிக்கும் பூண்போட வேட்ட ஏனைக் குரங்குகளுமே!
3. அறச்சீற்ற பாவனையில் நபுஞ்சகக் கோபங்களும் பயனனில பாராட்டலும்…
“நமது எழுத்தாளர்கள், குறிப்பாக மூத்த எழுத்தாளர்கள் எப்படி சமூக மாற்றம் குறித்த புரிதல் இல்லாத அரைவேக்காடுகளாக இருக்கிறார்கள் என்பதற்கான உதாரணம், நாஞ்சில்நாடனின் சமீபத்திய பேட்டியில் உள்ள கீழ்க்கண்ட வரிகள்:
“தவசிப்பிள்ளை“ அப்படி ஏன் எழுதனும்? ‘பாலியல் தொழிலாளி’ அப்படினு வந்திடுஞ்சி இல்லையா. நீர் ஏன் கொழுப்பு எடுத்து தேவடியானு எழுதுறீர்” என்று கேட்பார். கும்பமுனி பதில் சொல்வார், “திருவள்ளுவர் நண்ணேன் பரத்த நின் மார்பு என்று சொல்கிறார் அப்பா ஒரு பாட்டில். நீ கண்டவளோடு படுத்துவிட்டு வந்திருக்கிறாய். அவள் மார்புச் சந்தனம் உன் மார்பில் படிந்திருக்கு; அதனால் உன் மார்பை நண்ண மாட்டேன்’ எனப் பொருள். ‘பரத்த’ என்ற சொல்லை என்னப்பா செய்கிறது?” விலைமுலையாட்டி, இருமனப்பெண்டிர், பொருட் பெண்டிர், தாசி, தேவடியாள், வேசி, பொது மகளிர், விபச்சாரி எனப் பல சொற்கள் இரண்டாயிரம் வருட இலக்கியத்தில் இருக்கு. உன் சௌகரியத்துக்கு நீ பாலியல் தொழிலாளி என மாற்றிவிட்டுக் கோபம் வந்து திட்டுகிறபோது “ஏய்… பாலியல் தொழிலாளி மகனே” எனத் திட்டுகிற காலம் வரைக்கும் அந்தப் பழைய சொல் இருக்கும்தானே?”
அதிகாரம் செயற்படும் களங்களில் ஒன்று மொழி. இன்னும் சொல்லப்போனால் மொழிதான் முதன்மையான களம். அதனால் அதிகாரத்துக்கு எதிரான செயற்பாடுகளை மொழியில் முதன்மையாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சாதிய, ஆணாதிக்கக் கறைபடிந்த மொழியில் மாற்றுச்சொற்களை உருவாக்குவது என்பதும் அரசியல் பணிதான். அப்படித்தான் விபச்சாரி என்பது ‘பாலியல் தொழிலாளர்’ ஆகவும் கூன், குருடு, முடம், செவிடு, ஊனமுற்றவர்கள் என்பது ‘மாற்றுத்திறனாளிகள்’ ஆகவும் அலி, ஒம்போது, பொட்டை என்பது ‘திருநங்கை’ ஆகவும் மாறியது.
‘பாலியல் தொழிலாளர்’ என்ற வார்த்தையே சரியான வார்த்தையில்லை. அந்தப் பெண்ணுடன் பாலுறவை மேற்கொள்ளும் ஆண் என்ன பாலியல் முதலாளியா? ‘வேசி’ என்றழைக்கப்பட்ட பெண்ணுக்குத்தான் நாம் ‘பாலியல் தொழிலாளர்’ என்ற வார்த்தையை உருவாக்கியிருக்கிறோம். இன்னும் ஆணுக்கான வார்த்தையையே உருவாக்கவில்லை. ஆனால் இந்தக் குறைந்தபட்ச மாற்றத்தைக்கூட புரிந்துகொள்ளாத அளவுக்கு மரத்தும் உறைந்தும் போயிருக்கிறார் நாஞ்சில்நாடன்.”
“வசவுச்சொற்கள் எல்லாம் பெண்ணின் ஒழுக்கத்தையும் உறுப்புகளையும் மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டன என்று சிந்திக்கக்கூட தயாராக இல்லாத நாஞ்சில்நாடன் ‘அறச்சீற்றம்’ கொண்டு ‘சமூகக்கருத்துகள்’ சொல்வது நம் காலத்தின் துயரம். ஷங்கர், விஜயகாந்த் படங்களில் உதிர்க்கப்படும் கருத்துக்களின் தரத்தைத் தாண்டி நாஞ்சில்நாடனின் ‘சமூகக் கருத்துகள்’ அமைந்ததில்லை. ஆனால் அதை அறச்சீற்றமாக அவரே நினைத்துக்கொள்வதன் விளைவுதான் இத்தகைய அபத்த உளறல்கள். இந்த மாதிரியான அரைவேக்காட்டுத்தனமான புரிதல்கள் இருப்பதால்தான் நாஞ்சில்நாடனால் எம்.ஜி.ஆர் முதல் அம்பேத்கர் வரையுள்ள சிலைகளை ஏகவசனத்தில் வசைபாட முடிகிறது.”
– சுகுணா திவாகர்
சுகுணா திவாகர் சொல்லுமாப் போல கும்பமுனி நாஞ்சிலின் குதர்க்கமான குறுக்குச்சால்கள் அரைவேக்காட்டு அபத்த உளறல்கள் மட்டுமே அல்ல. திராவிட இயக்க ஒவ்வாமையால் நீலம்பாரித்த நச்சுக்கடுப்போடு மேனிலையாக்கப் போக்கில் மீதூரும், சனாதன தேவதா விஸ்வாசமான சற்சூத்திர வெளிப்பாடுகளே.
“மொழி எங்கு தன்னைப் புரட்டிப்போட்டது என்பதற்குள் திராவிட இயக்கத்தின் உள்முகமான சமூக இயக்கம் இருக்கிறது. மாற்றுத்திறானாளி, திருநங்கை போன்ற குடிமை சார்ந்த சொல்லாடால்களை வந்தடையும் இடத்தில் கருணாநிதி தன்னை வைத்திருந்தார் என்பது முக்கியம்.”
– பிரவீன் பஃறுளி (‘இடைவெளி’:4 – ஆகஸ்ட் 2018)
இத்தகு திராவிட இயக்க உள்முகச் சமூக இயக்க மீதான வன்மக்காழ்ப்பே குதமெரியும் கும்பமுனி கூற்றாக நாஞ்சிலைக் கூடுபாய வைக்கின்றது.
காலகதியில் நாஞ்சிலின் குரல் மாறி மாறி ஒலிக்கக்கூடியதே: “கலை ஒருபோதும் சகமனிதனுக்குத் தீங்கு நினையாதது. தனிமனித சமூகப் பொறுப்பற்ற எந்த எழுத்தும் கலை அல்ல. மனிதனையும் சக ஜீவராசிகளையும் புல்பூண்டு செடிகொடி மரங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாத, அவற்றுக்கு அனுசரணையாகச் செயல்படாத எதுவும் கலை அல்ல. எல்லாவற்றுக்குள்ளும் அரசியல் என்பது இருக்கிறது. சமகால எழுத்தாளர்களுக்கு ஓர் அரசியல் பார்வை இருக்கிறதா என்பதில் எனக்குச் சந்தேகம் இருக்கிறது.”
“என் அளவுகோல் ரசனை சார்ந்ததது. கலைவெற்றி, மொழிஆளுமை, படைப்பாளுமை என நான் மதிப்பிடுவதைச் சார்ந்தது. படைப்பாளியின் தனிப்பட்ட தொழில், செவ்வநிலை,பால், சமயம்,இனம்,சாதி, அரசியற் கொள்கை எனக்கு முக்கியம் இல்லை. ஆனால் அவரது சுயதர்மம் என்பதில் அவர் நேர்மையில் தீவிர கவனம் கொள்வேன். நான் இடதுசாரியும் இல்லை, வலதுசாரியும் இல்லை என்பதால் இரண்டுங் கெட்டான் சாரியும் இல்லை.”
– நாஞ்சில் நாடன் (‘உயிர் எழுத்து’)
கமலின் மையமான பேச்சைக் கேட்ட மாதிரியே தலைசுத்துதா இல்லியா? கலைடாஸ்கோப்புல பார்க்கிற மாதிரியே கோலமாறி ஜால விசித்திரங்களாகும், அட்டகாசமா!
பிறிதொரு சந்தர்ப்பத்தில் நாஞ்சில் கருத்துச் சுதந்தரத்தைக் காப்பாத்துன லெட்சணத்தைக் காண்போம்:
“மோடி ஒரு புரட்சியாளர். தொலைநோக்குப் பார்வை கொண்டவர். அடுத்த தேர்தல் குறித்து அல்லாமல் அடுத்த தலைமுறை குறித்துச் சிந்திப்பவர். அரசியல் நலனுக்கு அப்பாற்பட்டுத் தேசநலனைப் பற்றிச் சிந்திக்கும் மோடியே இன்றைய தேவை” – ஜோ.டி.குரூஸ்
இப்படி குரூஸ் காவி அவதாரம் எடுத்த சூழ்நிலையில்,
“மோடியை ஆதரித்த காரணத்தால் ஜோ.டி.குரூஸ் என்கிற தமிழின் சிறந்த படைப்பாளியைக் கழுவேற்றச் சிலர் தயாரான போது அவரை ஆதரித்து நான் பேசினேன். எழுத்தாளனின் கருத்துச்சுதந்தரத்தை மறுக்காதீர்கள், அவன் குரல்வளையை நெறிக்காதீர்கள் என்பதே என் நிலைப்பாடு. அது ஓர் எழுத்தாளனை மற்றோர் எழுத்தாளன் பாதுகாப்பது சார்ந்தது.”
– நாஞ்சில் நாடன் (‘ஆனந்த விகடன் 25 -6- 2014)
எல்லாவற்றுக்கு உள்ளும் இருக்கிற அரசியல் குரூஸின் மோடி ஆதரவு நிலைப்பாட்டில் இல்லையா? நேற்று வரையில் மீனவர் உரிமைக்காகவும் அணுஉலைக்காகவும் குரல் கொடுத்த குரூஸ்ஸின் சுதர்மப்படி அவர் அவ்விரு பிரச்சினைகளிலும் சமராடிக் களத்தில் நிற்கும் சுப.உதயகுமாரை அல்லவா ஆதரித்திருக்க வேண்டும்? ஆனாலவர் குமரிக் கத்தோலிக்க மீனவர்கள் மோடிஅணிக்கேன் வாக்களிக்குமாறு தடமாறினார்? இத்தொடர்பில் கருத்துச்சுதந்தரம் எதனைச்சார்ந்து பாவிக்கப்பட வேண்டும் என எதிர்கொண்ட தரப்பையும் காண்போம்:
“தனிமனிதனுக்கான கருத்துச் சுதந்தரம் என்று வாதிடும் குரல் கேட்கிறது. இவ்வகையில் ஜோ.டி. குரூஸ்க்கான சுதந்தரத்தில் தலையிடக் கூடாது என்கிறார்கள். கருத்துரிமையைப் பற்றிய இடதுசாரிகளின் போதாமையைக் காட்டுகிறது என்கிறார்கள். கருத்துச் சுதந்தரம் என்பது தனியாக இல்லை மக்களின் நலன் சார்ந்து கருத்துரைக்கும் உரிமை என்னும் அர்த்தத்தில் தான் இது பயன்படுத்தப்பட வேண்டும்.’
– பா. செயப்பிரகாசம்
கருத்துரிமைப் பாதுகாப்புக்கு ஏழாவது அச்சுறுத்தலாக அடிமை எழுத்தாளர்களைக் குறிப்பிடுவார் ராமச்சந்திர குஹா. (‘இந்துத் தமிழ்த்திசை 25 -2 -2015). அந்த வகையறாதான் ஜெயமோகன், நாஞ்சில், குரூஸ் இன்னும் குடியரசு தின டிராக்டர் உலா வேளாண் போராட்டத்தில் அரசாங்கத்தின் ஆசனவாயாகக் கழிந்த லக்ஷ்மி மணிவண்ணன், யதார்த்தா பெண்ணேஸ்வரன் இத்தியாதி இத்தியாதி யாவுமே.
மோடிஜோதியில் ஐக்கியமான தேவாலயங்களை நாறடித்தவரெனச் சாதிய மதாவாதிகளால் கொண்டாடட்பட்ட குரூஸ் தேவாலயங்கள் தாக்கப்பட்ட. போதும் எழுத்தாளர்கள் அடக்குமுறைக்கு ஆளான போதுஞ் சாதித்தது கள்ளமௌனமே. மட்டுமல்லாமால் சுஷ்மா சுவராஜ் ஆணைக்கிணங்க பாக் வளைகுடா மீனவர் சிக்கல் குறித்து பாஜகவின் குரலையும், இலங்கையின் குரலையுமே எதிரொலிக்கும் ஆய்வறிக்கை(?!) சமர்ப்பித்தவர்.
“தன்னிலைகள் மீது கட்டி எழுப்பப்பட்ட பிம்பங்கள் சாதாரணங்களை வழிநடத்துகிற துன்பியலில், இந்த பிம்ப உருவாக்கத்துக்குக் கற்றறிந்த சிந்திப்பாளர்களும் கையாளாவது சாதாரண மக்களுக்குப் படித்தவர்க்கம் செய்கிற துரோகமாகத் தோன்றவில்லையா?”
– பா. செயப்பிரகாசம் (‘உயிர் எழுத்து’ ஜூலை -2014)
இத்தொடர்பில் அடையாளப்படுத்திக் கொள்ளும் பிம்பஏற்பு குறித்த ஃபூக்கோவிய அணுகுமுறைக்கூடாக இதுபற்றிக் காண்போம்: “அடையாளப்படுத்திக் கொள்ளல் (idenitfication) பற்றி லெக்கானின் கூற்றை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். ஒரு பிம்பத்தை ஏற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு தன்னிலை ஒரு பிம்பத்தை ஏற்றுக் கொள்ளும் போது தன்னிலையில் ஏற்படும் நிலைமாற்றமாகும். ஏற்பது ((To assume) என்றால் ஒரு பிம்பத்தில் தன்னையே உணர்வது. பிம்பத்தைதத் தனதாகவே கைக்கொள்ளுவது மாற்றிக்கொள்வதாகும் “
– ‘மற்றமை’ : 4 (செப். 2013)
“எல்லா அதிகார பிம்பங்களிலும் (அரசர், தந்தை, தணிக்கையாளர், குரு) அதிகாரம் நீதியின் வடிவத்தில் அமைந்திருக்கிறது. கீழ்ப்படிந்து என்ற செயலினைக் கொண்டு இதன் விளைவுகள் வரையறுக்கப்படுகின்றன. அதிகாரத்தின் முன்னிலையில் அதாவது சட்டத்தின் முன்னால் கீழ்ப்படியும் தன்னிலை (Subject) தன்னிலையாகக் கட்டமைக்கப் படுகிறது.”
“கீழ்ப்படிந்துவிட்ட கீழ்ப்படிய வைக்கப்பட்டவன், எவனொருவனின் கீழ்ப்படிகிறானோ அவனே (Subjected Subjectified) என்றெழுதும் ஃபூக்கோ இதையே தன்னிலையின் பிறப்பு(Birth of the subject) என்று குறிப்பிடுகின்றார்.”
– எம்.டி.முத்துக்குமாரசாமி (‘பிற்கால அமைப்பியலும் குறியியலும்’)
4.ஆசானும் தாசானுதாசனும்
ஒரு மாணவி கேட்டார்: ‘‘விவேகானந்தர் நூறு இளைஞர்களைக் கேட்டார்,இந்த தேசத்தைச் செம்மைப்படுத்திக் காட்ட! நாங்கள் இன்று கோடிப்பேர் இருக்கிறோம், உங்களிடையே ஒரு விவேகானந்தரைக் காட்டுங்கள்’’ என்று. மிகச் சரியான கேள்வி. என் கேள்வியும் அதுதான். இன்று, இளைஞர்கள் நம்பிப் பின்தொடர்ந்து போவதற்கு நம்மிடையே தலைவர் உண்டா? பிள்ளை பிடிப்பவர்கள் தானே தலைவர் போலத் தோற்றம் தருகிறார்கள்! இதை மாணவர் அறிந்திருக்கிறார்கள் என்பதே பெருமிதத்தின் காரணம்!”
– நாஞ்சில் நாடன்
இந்தக்கூற்று எத்தருணத்தில்? எவரிடம்? எவ்வாறு? ஏன் கூறப்பட்டது என நாஞ்சிலால் இடஞ்சுட்டிப் பொருள் விளக்க இயலுமா? என்னால் இயலும்!:
சிக்காகோ உலக சமய மாநாட்டில் விவேகானாந்தர் பங்கேற்று மீண்ட பின்னர் சேதுபதி ராஜா ஒரு சமயச் சொற்போருக்கு ஏற்பாடு செய்தார். அவருடைய குலகுருவும், மறைமலை அடிகளாருக்கும் குருவுமான ‘பரசமய கோளரி’, சைவசமய சண்டமாருதம்’ சூளை சோமசுந்தர நாயகர்க்கும் விவேகானந்தர்க்கும் இடையிலான சித்தாந்த × வேதாந்தச் சொற்சமரே அந்நிகழ்வாகும். அதில் சோமசுந்தர நாயகரிடம் வாதில் தோற்ற விவேகானந்தர் அவரிடந் தம் தோல்வியைத் தாம் தோற்றுவிட்டதாக மும்முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபின் அத்தருணத்தில் கூறியதே இக்கூற்றாம்:
“உங்களைப்போல் நூறு மதராஸிகள் எனக்குக் கிடைப்பார்களானால் உலகத்தை மாற்றிக்காட்டுவேன்.”
இக்கூற்றே சனாதனிகளால் தமக்கு வசதியாக, ‘நூறு இளைஞர்கள்’ எனக் கத்தரித்தே சித்திரிக்கப்படல் ஆயிற்று. இதற்கான ஆதாரமாக இராமேஸ்வரம் சிவன்கோயில் கல்வெட்டைக் குறிப்பிடுகின்றார் வினோத்குமார் ராஜேந்திரன்.
[(‘தமிழ்மொழியின் சிறப்பு/ தமிழர் வரலாறு ‘ குழு ஆளுகையாளர் (அட்மின்) தம் 20/1/88, 3/3/2017 தேதியினவானவற்றின் அண்மைய மீள் பகிர்வுகளில்]
நாஞ்சில் நம்பிப் பின்தொடரப் பரிந்துரைக்கும் வீரத்துறவியின் வாக்குமூலத்தையும் அது எதன் எதிரொலி என்பதனையும் காண்க:
மனு சொல்கிறான், விவேகானாந்தர் வழிமொழிகின்றார்!
விவேகானந்தரின் கோத்திரக்கேள்வி
“உவப்போடு என்னுடன் பேசிமகிழும் உத்தம நண்பர் விவேகானந்தர் தங்கள் கோத்திரம் என்ன என்று வினா எழுப்பினார். வேறு ஒரு தினமாகில் வினாவைக் கேட்ட நான் வெகுண்டிருப்பேன். உறவென விருந்துக்கு வந்த அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில் எனக்கும் கோத்திரத்திற்கும் சம்பந்தம் ஒன்றும் கிடையாது. தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என ஆத்திரமின்றிக் கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்.”
– மனோன்மணியம் சுந்தரனார் (‘ரசனை’ – அக். 2008)
‘சமஸ்கிருதம்தான் இந்தியாவின் அதிகாரம்’
“பார்ப்பனரால்லாத சாதிகளுக்கு நான் சொல்கிறேன். அவசரம் வேண்டாம். உங்கள் சொந்தத் தவறுகளால் நீங்கள் துயரப்படுகிறீர்கள். ஆன்மிகத்தையும் சமஸ்கிருதத்தையும் கற்றலைப் புறக்கணிக்கச் சொல்லி உங்களுக்கு யார் சொன்னது? இப்போது எவருக்கு அதிகமூளை, அதிகசக்தி, அதிகத்துணிவு இருக்கிறதென்று ஏன் பதற்றம் அடைகிறீர்கள்.சண்டைகளில் வீணாக்குவதற்குப் பதிலாகப் பிராமணனின் கலாச்சாரத்தை அடைய உங்கள் எல்லாச்சக்திகளையும் பயன்படுத்துங்கள். அவ்வளவுதான் முடிந்தது. ஏன் சமஸ்கிருதப் புலவராக மறுக்கிறீர்கள்? சமஸ்கிருதக்கல்வியை எல்லாச்சாதிகளுக்கும் தருவதற்குக் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடலாம், செலவிட ஏன் மறுக்கிறீர்கள். சமஸ்கிருதம்தான் இந்தியாவின் அதிகாரம். சமஸ்கிருதமும் கௌரவமும் இந்தியாவில் ஒன்றாகச் செல்கின்றன. மனு சொல்கிறார், பிராமணர்க்கு எல்லா முன்னுரிமைகளையும் கௌரவங்களையும் தரவேண்டும் என்று. ஏனெனில் அவனிடம்தான் நற்பண்புகளின் களஞ்சியம் உள்ளது.”
– விவேகானந்தர் (ஆதாரம்: க.பூரணச்சந்திரன் முகநூற் பதிவு – சூலை 7, 2018)
5. சிறுகதையில் கும்பமுனிக்குசும்பு
“அண்ணாவை பற்றி ஒரு சிறுகதையில் கிண்டலடித்து நாஞ்சில் நாடன் அந்தக் காலத்திலேயே எழுதியிருக்கிறார். அக்கதையில் வரும் பேருந்து நிலையத்தில் இரு சிலைகள். ஒன்று அந்தப் பகுதியில் ஒரு காலத்தில் ராஜாவாக இருந்தவருடையது – மற்றது அண்ணாவுடையது – சீட்டுக் கம்பெனி வசூலுக்கு போகிற ஆளாம் (கையில் ஒரு பையோடு இருக்கும் புகழ் பெற்ற படம். )
பணப்பிரிவுக்குப் (வசூலுக்கு)போகிற சீட்டுக் கம்பெனி ஊழியன் போல கையில் ஒரு பையோடு, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் போல் கைக்கிடையில் இடுக்கிய பையோடு, கல்லூரிப் பேராசிரியர் போல கையில் புத்தகங்களோடு, இப்போதே ஒரு சொற்பொழிவு தொடங்கி விடுவேன் என்ற அச்சுறுத்தலோடு, கொன்று போடுவேன் அல்லது அவசரமாய் ஒன்றுக்குப் போக வேண்டும் என்பது போல் விரலை உயர்த்திக் கொண்டு, சட்டையில்லாமல் சம்மணம் போட்டு அமர்ந்து …. தமிழ்நாட்டையே அவர்தான் கண்டுபிடித்தார் என நாளை வரலாற்றாசிர்யர்கள் பதிவு செய்யச் சான்றாக….
கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் கோவில்பட்டியிலோ எங்கோ இவர் தமிழ்நாட்டில் புதுமைப்பித்தனுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பும் போது, “ஊருக்குள்ள ஒத்த விரலையும், ரெட்டை விரலையும் காட்டிட்டு எவனெவனோ நிக்கறானுங்க” என்ற தொனியில் பேசியிருந்தார். திராவிட தலைவர்கள் மீதான வெறுப்பு அக்காலத்திலேயே இருந்திருக்கிறது என அச்சிறுகதையில் காட்டி விட்டார்.
(‘ராஜாக்களும் சீட்டுக் கம்பெனிக்காரர்களும்”’ கேரளத்தமிழ்.’, 1979, ‘நாஞ்சில் நாடன் கதைகள்’ -‘தமிழினி.’)
– நாகு. அன்பழகன்
நாஞ்சில் அண்ணாவைப் பற்றிப் பண்ணிப்பண்ணிப் பகடியாடும் வன்மக்காழ்ப்புச் சித்திரிப்பு யாவுமே நயனிலர் நாஞ்சில் என நமக்குக் காட்டிவிடும் பயனில பாரித்துரைப்பே!
கும்பமுனி நாஞ்சில் குதமெரியும் நச்சுக்கடுப்போடு வழமையாக வச்சுசெய்ய முற்படும் அதே வீதிகளில் விரல்காட்டி நிற்கும் சிலைகளைப் படைத்தவர்களின் வழிவந்த முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினின் இற்றைத் தமிழ்நாடு தமிழ்நாட்டரசுதானே கரிசக்காட்டு நாய்னா கிராவுக்குக்குச் சிலையெடுக்கவும் அவர் ஏழாப்புவரை போய்வந்த (படிச்ச அல்ல) பள்ளியை அவர் நினைவுச் சின்னமாக்கவும் அறிவித்துள்ளது. இத்தொடர்பிலேனும் இந்த கும்பமுனி நாஞ்சிலுக்கு வெப்ராள ஆவலாதி தணிஞ்சு ஒத்தவார்த்தை பாராட்டத் தோணிச்சா?
6.தொபவின் தகவல்பிழைகளும் நெல்லை கண்ணன் நாஞ்சில் கட்டுக்கதைகளும்
‘சங்க இலக்கியத்தில் தெங்கு’ அ.கார்த்திக் புகழேந்தி தரப்புகள்
“நெல்லை கண்ணன் அவர்களுக்கும், தொபவுக்கும் ஒரு சின்ன முரசல் உண்டு. தனது ‘பண்பாட்டு அசைவுகள்’ நூலில் (முந்தைய அச்சில்). சங்கஇலக்கியத்தில் தேங்காய் பற்றிய பதிவுகள் இல்லை என்று குறிப்பிட்டுவிட்டார் தொப. சங்க இலக்கியத்தில் தெங்கு எனக் குறிப்பிடப்படுவது தேங்காயைத்தான் என்பதால் அந்த சொற்குற்றத்தைத் தேங்காயை உடைப்பது போல் உடைத்துப்போட்டார் ஐயா நெல்லை கண்ணன்.”
“இந்த இடத்தில், நான் நெல்லைகண்ணன் அவர்களிடமும் நெருக்கமாக இருக்கும் வாய்ப்பைப் பெற்றவன். ஒரு தந்தையின் இடத்தில் இருந்து என் திருமணத்தை நடத்திவைத்ததும் அவர்தான். ஆக, இரண்டு பேர் அருகிலும் போய்நிற்கிற எனக்கு இந்த விஷயம் ஒரு சங்கடமாக இருந்தது. ஒருநாள் தொபவிடமே கேட்டுவிட்டேன்.
‘ஆம், அது என் பிழைதான். திருத்திக்கொண்டேன். நெல்லை கண்ணனும், நாஞ்சில் நாடனுமா அந்த அடி அடுச்சுட்டாங்க அந்த விஷயத்தை. கொஞ்சம் சங்கடமாத்தான் போயிடுச்சு.’ என்று முடித்துக்கொண்டார்.
மறுதடவை நெல்லை கண்ணன் அவர்களைச் சந்தித்தபோது, நான் இப்படிக் கேட்டதையும் தொப சொன்ன பதிலையும் சொன்னேன். ‘வருத்தப்பட்டானோ….. பின்ன அவன் ஒரு பேராசிரியன் சொல்லலாமால, அதான் ஐயா திட்டிட்டேன்…’
என்றார். பிறகொருநாள் நாஞ்சில் நாடனின் பதச்சோறு கட்டுரையையும் வாசித்தேன். அவர் கணக்கில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.” – கார்த்திக் புகழேந்தி (‘சீர்’:1, மார்ச் – 2021)
“இந்த விவகாரத்தின் பின்புலமான அந்த முரசல் உரசலின் மறுபக்கத்தைக் கார்த்திக் அறியார். அப்போது தொப பல்கலைப்பணியில் இருந்த போது பல்கலையில் உரையாற்றத் தம்மை அழைக்கவில்லை என்கிற ஆவலாதிப் புலம்பலை நெல்லை கண்ணன் பலரிடமும் முன்வைத்ததுண்டு. அந்த வன்மத்தை இந்த விவகாரத்தில் இப்படி அந்த அடி அடித்தார்கள் என தொபவே முன்பொருகால் தெரிவித்துள்ளார். பிழை சுட்டலைக் குறைகூறவில்லை அதை இப்படியாக வெளிப்படுத்திய முறை குறித்தே அப்போதும் சங்கடப்பட்டார் அவர். தொபவின் அரசியலோடு அவர்கள் முரண்பட்டோரே. நெல்லை கண்ணன் அதிமுகவிலும் இருந்தவர். கலைஞரை எதிர்த்தும் தேர்தலில் நின்றவர். நாஞ்சில் நச்சுக்கடுப்பான திராவிட இயக்க ஒவ்வாமையில் நீலம்பாரித்தவர்.
‘நாஞ்சில் கணக்கில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ எனப் புகழேந்தி புகழுமாப்போல் எல்லாம் அத்தகு அருகதை படைத்தவர் அல்லர். வெங்கட் சாமிநாதன் வகையறாவே, ஜெயமோகனின் கூட்டுக்களவாணியே நாஞ்சில். அதுபற்றி இதற்குமேற் பேச இங்கே இடமில்லை”
– பொதியவெற்பன் ( ‘சீர்’:3. – மே 2021)
நாஞ்சில் நாடன் தரப்புகள்
இத்தொடர்பிலான நாஞ்சில் நாடன் கட்டுரைகள் ‘திகம்பரம்’ நூலிலும்; ‘தமிழினி’, ‘உயிர் எழுத்து’ இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன.
“இத்தகைய சிறப்பு வாய்ந்த இப்பயிர்பற்றிய குறிப்புகள் தொல்காப்பியதிலும் சங்க இலக்கியத்திலும் ஒன்றுகூட இல்லை என்பதுதான் வியப்புக்குரியது.” -தொ.பரமசிவன் (‘அறியப்படாத தமிழகம்’)
இத்தொடர்பில் தெங்கு, மார்க்கச்சை, சம்பளம், உளுந்தங்களியும் திருவாதிரைக்களியும், சிறுதெய்வ வழிபாட்டாளர் அனைவரும் அசைவரே, பானக்காரம் நீருணவு, புன்னைக்காய் எண்ணெய் அடித்தளமக்கள் பயன்பாடு என தொப கட்டுரைகளின் ஏழு தகவற் பிழைகளை நிறையவே சான்றாதாரங்களுடன் நாஞ்சில் எடுத்துரைத்துள்ளார். அவற்றில் ஒன்றைக்கூட மறுக்க இயலாது.
இத்தொடர்பில் மேலதிகமாக. என்னாலுங்கூட இன்னுஞ்சில தரவுகளை முன்வைக்கவும் இயலும். அவை யாவும் நாஞ்சில் தரப்புகளுக்கு மேலும் வலுக்கூட்ட வல்லனவே. எமக்கிடையிலான முரண்பாடுகளுக்கு எல்லாம் அப்பாலாக நாஞ்சில், கி.ராஜ நாராயணன், கண்மணி
குணசேகரன் மூவருக்குள்ளும் இருக்கும் ஓர் அகராதியியலாளனை (Lexgicographer) எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் என்னுள்ளும் இருப்பதனாலேயே. இத்தொடர்பில் இதற்குமேல் பேசிட இது இடமன்று.
தொபவுக்கு அடிசறுக்கிய இடங்களே இத்தகவல் பிழைகளென இவற்றைச் சுட்டிக்காட்டிய வகையில் நாஞ்சில் பாராட்டுக்கு உரியவர்தாம். ஆனால் இதேமூச்சில் இவற்றைச் சுட்டிக்காட்டும் தொனியிலும், இவற்றிற்கவர் உள்நோக்கங் கற்பிக்க முனைவதும் இத்துடன் அவற்றிற்கான கண்டனங்களுடன் ஒருசேரவே முன்வைக்கப்பட வேண்டியனதாம்:
“பொய்களைவிட அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை”
“அறிஞர் தொபாவின் நூலில் அரைகுறை உண்மைகள் பலவும் நிரம்பி வழிகின்றன”
– இதுவும் அரைகுறை உண்மையான மிகைப்படுத்திக் காட்டலே.
“தொப ஆய்வுக்கட்டுரைகளை அறியாமல் எழுதுகிறாரா? உண்மைக்குப் புறம்பான முடிவுகளைத் தீர்த்துக் கூறுவது மிகுந்த ஆயாசம் அளிக்கிறது”
“புன்னைக்காய் எண்ணெயினை அடித்தளத்து மக்கள் நிறையப் பயன்படுத்தி இருக்கவேண்டும் என்று தெரிகிறது”
இக்கூற்றில் ‘அடித்தளத்து மக்கள்’ என்று தொபகூறுவதில் நோக்கம் இருப்பதாகத் தமக்குப்படுவதாக நாஞ்சில் உள்நோக்கம் கற்பிக்கின்றார்:
“கீழ்த்தட்டு மக்களே அதிகம் பயன்படுத்தினார்கள் என்றால் முற்போக்கு முகாமில் ஒரு இருக்கை தேடிக் கொள்ளலாம்”
இப்படி எல்லாம் எடுத்துரைத்துத் தம் பிற்போக்கு முகாமை ‘குஷிப்படுத்தித் தம் யதாஸ்தானம் ததாஸ்து’வெனத் தக்கவைத்துக் கொள்கின்றார்.
தகவல் பிழைகள்தாம் நாஞ்சில் சுட்டிய யாவுமே, எவருமே மறுப்பதற்கும் இல்லைதான், ஆனால் இவற்றில் நாஞ்சில் கற்பிக்கும் உள்நோக்கம் என்பன யாவும் நாஞ்சிலின் தற்குறிப்பேற்றங்களே. இவை வழமையான சங்கிகள்பாணித் தகடு செருகி உருவும் செப்பிடுவித்தைகளே. [(‘தமிழினி’ யூலை- ஆக,2010) – (‘பருக்கைப்பதம்’ – ‘திகம்பரம்’)]
“இன்று தமிழ்ப்பேரறிஞர் என்று கொண்டாடப்படுகிறவர் எழுதிய நூலொன்றின் தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டிக் கட்டுரை ஒன்றெழுதினேன்.பத்தாண்டுகள் இருக்கும். தமிழ்நாட்டுக்குத் தென்னைமரம் பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகே வந்தது என்றும், தமிழ்ப்பெண்டிர் சீவக சிந்தாமணி காலத்துக்குப் பிறகே கச்சணிந்தனர் என்பன போன்ற ஏராளமான தகவல் பிழைகள். வாசகர், மாணவர் தவறாக வழிநடத்தப்படக் கூடாதே என்பதுவே நம் அக்கறை.
மேலும் ஒரு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் அரைகுறை அறிவோடு நூலாக்கும்போது, நாமதைக் கண்டுங் காணாமற்போவது சரியா?
என்னுடைய அந்தக்கட்டுரை வெளியான பிறகு, மரணம்வரை அந்தப் பேராசிரியர் என்னோடு உரையாடுவதை நிறுத்திவிட்டார். மூன்று முறை, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சி செய்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது.”
“என்னுடைய வருத்தம், அடுத்தடுத்து வந்த பதிப்புகளில் அப்பிழைகள் களையப்படவில்லை. பெரியாரியப் புயற்காற்று, மார்க்சியக் கொடுங்கனல் என்மனார்புலவ.”
” எழுத்தில், சொற்பொழிவில், உரையாடலில் ஏற்படும் தவறுகளை எவரும் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வதே பெருந்தன்மை. திருத்திக்கொள்வதும் வருத்தம் தெரிவிக்காததும் அடம்.திருத்தியவர் மீது பகைபாராட்டுவது மூடம்.”
– நாஞ்சில் நாடன் [(‘ பின்னை நின்று எண்ணுதல்பிழை’) – (‘உயிர் எழுத்து’, மே – 2021)]
இத்தொடர்பில் அது தவறென ஒப்புக்கொண்ட தொப அதை நாஞ்சிலும் நெல்லை கண்ணனும் வெளிப்படுத்திய விதமும் தொனியும் குறித்தே சங்கடப்பட்டார் என ஏலவே சுட்டியுள்ளேன். இப்படியாகத் திராவிட இயக்க ஒவ்வாமையின் நச்சுக்கடுப்போடு நாஞ்சிலின் ‘தெக்குத்தி வக்கணையான தின்னேலிக்குசும்பு’ வெளிப்பாடுகளை எதிர்கொள்ள நேரும் ஒரு சுயமரியாதை இயக்கத்தவர் அதன்பின் அவரிடங் கோபிக்காமல் கொஞ்சவா முடியும்?
“அவரைச் செல்லங் கொஞ்சித் திரிந்த அவருடைய மாணவர் சிலர் எனக்கு வெள்ளாளத்திமிர் என்றனர்”
– நாஞ்சில் நாடன் (மேலது)
எதனால் அசோகமித்திர வகையறாவிடம் வெளிப்படும் ஊமைக்குசும்புக்குப் பார்ப்பனக்குசும்பு எனும் பெயரீடோ ; அதனாலேயே நாஞ்சில் வகையறாவிடம் வெளிப்படும் ஊமைக்குசும்புக்கும் வெள்ளாளக்குசும்பு எனத்தான் பெயரீடுமாகும்! நாஞ்சில் புள்ளயையுங் கிள்ளிவிட்டுத் தொட்டுலயும் நல்லாத்தேன் ஆட்டியேவிடுகின்றார்
மீள்பதிப்புகளில் தகவல்பிழைகளைத் திருத்திக் கொண்டிருக்கலாம் என்பதுவரை சரிதான்! அது எழுத்தாளர் பதிப்பாளர் கூட்டுச்செயல்பாடே என்கிற வகையில் இத்தகு தவறுகளுக்குத் தொப நூல்களின் பதிப்பாளர்களும் பொறுப்பாளர்தாமே? (நாஞ்சில் ‘அறியப்படாத தமிழகம்’ நூற்பதிப்பாளரிடமும் அறிவுறுத்தியிருக்கலாமே? அவர்கள் செம்பதிப்புச் செம்மல் அல்லரோ?)
இவற்றிற்கெல்லாம் அப்பாலாக தகவல் பிழைகளைப் பற்றிப் பன்னிப்பன்னிப் பேசும் நாஞ்சிலுக்கோ ; அவர் செல்லங் கொஞ்சிக் கிடக்கும் நெல்லை கண்ணனுக்கோ என்ன அருகதை இருக்கின்றது என்பதே என் வினா?
தொபவின் தகவல் பிழைகளேனும் அவர் காணத்தவறிய பக்கங்களே. அவருடைய ஊகங்களுங்கூட பிழையாகவும் இருக்கலாந்தான். மாறாக, நாஞ்சில் தமக்கு ஐயமென்றால் அதனை எந்த அண்ணாச்சியிடங் கேட்டுத் தெளிவாரோ, யாரையவர் ‘தமிழ்க்கடல்’ என தலைமேல் வைத்துக் கொண்டாடுவாரோ அப்பெருமகனார் நெல்லை கண்ணன் பற்றிய மற்றொரு தரப்பையுங் காண்போம்:
“1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம். ஜி.ஆர் அமோக வெற்றி பெற்ற போது, காமராஜர் வெறுத்துப்போய் தனிப்பட்ட பேச்சில் இப்படி சொன்னாரா?’ போங்க.. நாட்ட கூத்தாடி கிட்ட கொடுங்க…அவன் கூத்தியா கிட்ட கொடுத்துட்டு போவான்’
எம். ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி நடந்து விட்ட விஷயம். 1991 – இல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டார். நடந்த விஷயத்தை வைத்து அதன் பின்னர் காமராஜர் மேல் இப்படி இட்டுக் கட்டப்பட்ட வசனமாய் இருக்கலாம். காமராஜர் இப்படிச் சொன்னார் என்று கட்டி விட முடியும் தானே?
இப்படி நிறைய கதை நெல்லை கண்ணன் கட்டி விட்டதாக கூறப்படுகிறது. நானே இன்னொரு விஷயத்தில் நெல்லை கண்ணன் பேச்சை நம்பி எழுத நேர்ந்து விட்டது.
தகவல் பிழை ஏற்படவே கூடாது என்பதில் நான் மிகவும் பிரமாணிக்கமாக இருப்பேன். But.. Even Homer nods. “
– ராஜநாயஹம் ஆர்.பி.
சொல்லின் சுனைதரப் பேசவல்ல சொல்வலை வேட்டுவனே நெல்லை கண்ணன். என்றாலும் இப்படியாகச் சுவைகூட்டுமுகமாக ஊடேஊடே கதைகட்டி விடுவதும் அவர் சுபாவமே என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. இளவேனில் மீதும் இத்தகு குற்றஞ் சாட்டப்பட்டதுண்டு. இதுவுங் குற்றமே எனினும் இதில் உள்நோக்கம் இல்லாதவரை பெரிதுபடுத்தத் தேவையில்லை. இதுவும் ஒருவகையில் ‘கிசுகிசு லெவலே’! இதற்கப்பால் நெல்லை கண்ணன் இந்துத்துவத்திற்கு எதிராகக் குரலெழுப்பும் வேத எதிர்வழக்குக் காபாலிகச் சைவரே. மாறாக நாஞ்சிலோ திராவிட இயக்க ஒவ்வாமை நீலம்பாரிக்கக் கதைகட்டி விடுபவர் தாமே?
*
நாஞ்சிலின் மணிவிழாவை நடாத்திக் கொண்டாடியோர் ஜெயமோகனும், நெல்லை கண்ணனுமே!( தனித்தனியே) ஜெயமோகன் அயலகப்பயணங்களின் சகபயணி நாஞ்சிலே! அயலகப் பயணங்களில் மட்டுந்தானா அவர்க்கிவர் சகபயணி?
“எனக்கு நவீன இலக்கியத்தின் மீது ஈர்ப்பு வரக் காரணமே நாஞ்சில் நாடனின் ‘மிதவை’ நாவல்தான். ஆனால் அவருடைய பேச்சை முதல் முறை கேட்டதிலிருந்தே அவருடைய முகத்திரை கிழிந்துபோனது.
“பார்ப்பான், பார்ப்பான் என்கிறீர்களே, அவன் ஒங்கள என்ன செஞ்சான்? அவனே அஞ்சுக்கும் பத்துக்கும் கோயில்ல கஷ்டப்பட்டிட்ருக்கான். திராவிட ஆட்சி இந்த நாட்ட சீரழிச்சிடுச்சு என்று தொடர்ந்து பேசிக்கொண்டே சென்றார். (திருவண்ணாமலையில் பேரா. வே.நெடுஞ்செழியன் அவர்கள் ஒருங்கிணைத்த ‘முச்சந்தி’ நிகழ்வு)
அவர்மீது இருந்த பிம்பம் நொறுங்கிப் போனது. சாகித்ய அகாடமி விருது வாங்கிய பின் ஜெயமோகனுடன் தொடர்ந்து அவர் ஏறிய மேடைகள் அனைத்திலும் இதே தொனியில்தான் பேசினார். கி.ரா.வை வாழ்த்திய நிகழ்வில் புதுமைப்பித்தனைப் போற்றுவதாக நினைத்து இங்கே இருக்கும் ஆளுமைகளின் சிலைகளை கேலி செய்கிறார். காவிக் காரியவாதிகள் இங்கே வள்ளுவர் குறித்து புகழ்ந்து விட்டு உத்தரகாண்டிற்கு கொண்டு சென்று சிலையைக் கட்டி கீழே போட்டார்கள். அப்போதெல்லம் ஏதும் வாய் திறந்தார்களா?” – Krishna
“நான் சுதந்தரமான தமிழ் இலக்கிய வாசகன் மட்டுமே.என் பார்வை, கருத்து, தகவல், ஏதும் பிழைபட்டதாக இருப்பின் எவரும் சுட்டிக்காட்டலாம். எனதார்வம் அறிந்து கொள்வதில், எவரையும் சிறுமைப்படுத்துவதில் அல்ல.” – நாஞ்சில் நாடன் (‘திகம்பரம்’)
குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் தொபவை மட்டுமல்ல; அண்ணாவையும், ‘மனோன்மணியம்’ சுந்தரனாரையும் நாஞ்சில் சிறுமைப்படுத்திய அளவிற்கு ஜெமோகூட சிறுமைப்படுத்திடவில்லை என்பதுங் கண்கூடே! இப்புன்மைதான் சற்சூத்திரம் என்பதற்கான நற்சூத்திரமே!
நாஞ்சிலின் இந்த வேண்டுகோளை ஏற்று அவரது பார்வை, கருத்து, தகவல் பிழைகளையும்; எவரெவரை எவ்வெவ்வாறெல்லாம் சிறுமைப்படுத்தி உள்ளார் என்பதையும் எடுத்துரைத்துள்ளேன். அடுத்தடுத்து வரும் பதிப்புகளில தொப செய்யத்தவறியது போலின்றி முறையே திருத்திக்கொள்வார் என்றே நம்புவோமாக!
– வே.மு.பொதியவெற்பன்
(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)
(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)
பொதியவெற்பன் கட்டுரைகளைப் படிக்க