1. தேசங் குறித்த வரையறைகள்
தேசியம் ஒரு கற்பிதமே எனப் பொத்தாம் பொதுவில் சுட்டிச் செல்லாமல் அத்தொடர்பிலான பல்வேறு வரையறைகளை முதலில் தொகுத்துக் காண்போம்:
“தேசம் என்பது இனம், மதம், மொழி போன்றவற்றின் தீர்மானகரமான உற்பத்தி என்று கூறாமல் ஒரு கருத்து (imagined to existence) அது என்று கூறுகிறார் ஆண்டர்சன் என்கிறார் சட்டர்ஜி”.
“பெனடிக்ட் ஆண்டர்சன் ஒற்றை மனநிலையிலிருந்து தேசச்சிந்தனை வருகிறதென்கிறார். இதனை விமர்சித்த ஹோமிபாபா பன்மைச் சிந்தனையில் இருந்து தேசம் என்ற எண்ணம் வருகிறது என்கிறார். தமிழைப் பொறுத்தவரை இவ்விரண்டும் காரணங்கள் என்று அறிகிறோம்”
“ஹோமிபாபாவையும் பெனடிக்ட் ஆண்டர்சனையும் இணைத்துச் சிந்திப்பதில் தப்பில்லை. ஆண்டர்சன் அச்சு முதலாளியத்தையும் தேசஉருவாக்கத்தையும் இணைத்துச் சிந்தித்தவர். ஹோமிபாபா கதை உருவாக்கத்தையும், தேச உருவாக்கத்தையும் இணைத்துச் சிந்தித்தவர்.”
– தமிழவன் (“திராவிடம்,தமிழ்த்தேசம், கதையாடல்’)
தமிழ்ச்சூழலைப் பொறுத்தவரை ஒற்றை மனநிலை, பன்மைச் சிந்தை இரண்டில் இருந்துமே தேசச்சிந்தனை வருகின்றதென்னுந் தமிழவன் கணிப்பு ஏற்புடையதே!.
தமிழ்த்தேசிய அடையாள மீட்பு என வருங்கால் அதில் ஒற்றை மனநிலை பாசிசமயமாகும் அபாயக் கூறுகளையும், பன்மைச் சிந்தனை ஆக்கக்கூறுகளையும் விதந்தோதி இனங்காண வேண்டும். தேசத்தை சனநாயகத்தோடு இணைத்துச் சிந்திப்பது பன்மைச் சிந்தனையின் ஆக்கக்கூறுகளின் பாற்படுத்தும். தேசத்தைச் சர்வாதிகாரத்தோடு இணைத்துச் சிந்திப்பது ஒற்றைச்சிந்தனையின் பாசிசசமயமாகும் அபாயக்கூறுகளின் பாற்படுத்திவிடும்.
“தேசங்கள் கவிஞர்களின் இதயங்களில் இருந்து பிறக்கின்றன. அரசியல்வாதிகளின் கையில் இறந்து விடுகின்றன “- அல்லாமா இக்பால் (‘டெக்கான் ஹேரால்டு’, 3-11-2010)
தமக்குத் தேசாபிமானமோ, மதாபிமானமோ, பாஷாபிமானமோ கிடையாதெனப் பிரகடனப்படுத்திக் கொண்டவரே பெரியார்.
“வேறு எந்தக் காரணத்தாலும் பிழைக்க முடியாதவர்களும் ஒழுக்கமும் நாணயமும் அற்றவர்களும், மக்களை ஏமாற்றி வாழும் மோசக்காரர்களும் கடைசியாய்ப்போய் அடைக்கலம் புகுவதற்கு இன்று தேசிய வியாபாரத்தை விடச் சுலபமான வழி வேறு இல்லை” என 1935 வாக்கில் ‘குடிஅரசில்’ தலையங்கமே தீட்டினார் பெரியார். ஏன்?அன்றைய சூழல் எவ்வாறு இருந்தது?
2. தேசபக்தியும் சர்வாதிகாரமும்
தேசபக்தியின் அடையாளமாக நாசிசமும் பாசிசமும் கொண்டாடப்பட்ட காலக்கட்டமது. ஆயனுக்குக் கட்டுப்பட்ட ஆட்டுமந்தை மனோபாவத்திற்கு ‘பூஹ்ரர் பிரின்ஸிப்’ என்றே பெயர். இத்தாலியில்’பாசிமியாக் கட்டுப்பாடு’ என்றே பெயர்.
பிரபஞ்ச ஜோதி பிரசுராலய வெளியீடுகளாக வெ.சாமிநாத சர்மாவின் ‘முஸோலினி’, ’ஹிட்லர்’, ‘அபிசீனிய சக்கரவர்த்தி’, ‘ஸ்பெயின் குழப்பம்’ ஆகிய நான்கு நூல்களும் 1936-ல் தொடங்கி வெளிவரலாயின. எவ்வாறு இவை திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்டன என அதன் உரிமையாளர் எழுதுகிறார் :
“அந்நிய ஆட்சியில் அல்லலுற்றிருக்கும் நமக்கு ஆட்சி செலுத்தும் நாடு அந்த ஜனநாயகத்தின் பேரால்தான் நாம் அழுத்தப்பட்டிருக்கிறோம் என்ற ஒரு எரிச்சலும் ஏற்பட்டிருந்தது. சுயராஜ்ஜியம் கிடைத்ததும் அராஜகமும் தலைக்கனமும் ஏற்பட்டு எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்ற பாணியில் ஜனங்கள் வளர்ந்து விடாமலிருக்க ஒரு சில ஆண்டுகளாவது நம் நாடு ஒரு சிறந்த தேசபக்த சர்வாதிகார ஆட்சியிலிருந்து வருவது நலமென்றும் சிந்திக்க(?) ஆரம்பித்தோம். அதன் முடிவுதான் முதன்முதலாக முஸோலினியின் வாழ்க்கையை எழுதி வெளியிட எங்களைத் தூண்டியது. அவன் ஆட்சியின் நல்ல அம்சங்களை மட்டும் சித்திரித்து வெளியிட்டோம்.”
– அரு.சொக்கலிங்கம் செட்டியார்.
இத்தகைய மனோபாவமே அன்றைய ‘சுதேசமித்திரனி’லும்; உவேசா, திருவிக ஆகியோர்க்கும் ஊடாகவும் வெளிப்பட்டதனைத் தம் ‘சாமிநாத சர்மாவின் தமிழ்ப்பணி’ நூலில் பெ.சு.மணி எடுத்துரைப்பார். முஸோலினி ‘சரித்திர நாயகனாக’ச் சாமிநாத சர்மாவுக்கும், ஹிட்லர் ‘யுகபுருஷனாக’ ராமரத்தனத்திற்கும் அன்று காட்சியளித்தனர்.
இதே காலகட்டத்தில் தான் புதுமைப்பித்தனின் ‘அதிகாரம் யாருக்கு?’, ‘பாசிஸ்ட் ஜடாமுனி’, ‘கப்சிப் தர்பார்’, ‘ஸ்டாலினுக்குத் தெரியும்’ ஆகிய நூல்களும் வெளியாகின. அன்றைய ஹிட்லர் ஆதரவு மனோபாவத்துக்கு மாறாக, ஹிட்லர் எதிர்ப்பு மனோபாவத்துடன் தனித்து வீற்றிருந்தோர் புதுமைப்பித்தனும் , மணிக்கொடி சீனிவாசனும் மட்டுமே. ஹிட்லரின் வரலாறான ‘கப்சிப் தர்பாரில்’ முதல் 9 அத்தியாயங்களில் ஹிட்லரை விமர்சித்துப் புதுமைப்பித்தனும், இறுதி 9 அத்தியாயங்களில் அவரைப் போற்றி ராமரத்தனமும் எழுதியிருந்தனர்.
எம் சிலிக்குயில் வெளியீடாக புதுமைப்பித்தனின் 9 அத்தியாயங்களை மட்டும் வெளிக்கொணர்ந்தோம். அன்றைய இந்தியச் சூழலில் தேசபக்தி என்பது மதவாதத்துடனும் சங்கமித்திருந்த. சூழலில்தான் பெரியார் அவ்வாறு கூறிட நேர்ந்தது.
3. தேசியமும் சனநாயகமும்
திராவிட தேசியம் எனப்பட்டது சாராம்சத்தில் தமிழ்த்தேசியமாகவும், தமிழ்த்தேசியம் எனப்பட்டது பார்ப்பனிய தேசியமாகவும் இருப்பதே உண்மை. இது அ.மார்க்ஸ் சுட்டுமாப் போல எதனை உள்ளடக்கி, எதனை வெளிநிறுத்துகின்றது என்பதைப் பொறுத்தே தகவமையக் கூடியதுதானே?
“ஒவ்வொரு தேசியஇயக்கத்திற்கும் ஒரு சனநாயக உள்ளடக்கம் உண்டு என்று லெனின் சொன்னார்” -தியாகு.
“தேசியம் என்ற கருத்தாக்கத்தின் வயது சற்றேறக்குறைய 350 ஆண்டுகள்தான்.”
“ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு குழுவோ மட்டும் ஒரு ஒட்டுமொத்தச் சமூகத்தின் வாழ்வைத் தீர்மானிப்பதற்கு மாறாக பெருந்திரள் மக்கள் அரசியல் முடிவுகளில் பங்கேற்கும் ஏற்பாடே சனநாயகம் ஆகும். தேசியமும் சனநாயகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்ககளாகக் காட்சி அளிக்கின்றன. 19 மற்றும்20 ஆம் நூற்றாண்டு காலனியாதிக்கத்துக்கு எதிராகச் சனநாயகத்தைச் சுமந்து செல்லும் வாகனமாக தேசியம் இருந்தது. இங்கு சாதிநாயகத்திற்கு எதிராக சனநாயகத்தைப் பிரசவிப்பதே தமிழ்த்தேசியத்தின் பணியாகும்.”
“தேசியம் என்பது முதலில் சுயம் பற்றியது. தேசியம் எல்லாவிடத்தும் சுயம்பற்றிக் கூறும். சுயகௌரவம் (சுயமரியாதை) சுயாட்சி, சுயநிர்ணய உரிமை எனத் தனிமனித உரிமையில் தொடங்கி இனம், நாடு என்று சுட்டுச்சுயம் வரை அது விரிந்து பரந்த ஒன்றாகியது.” (‘பெரியாரும் தமிழ்த்தேசியமும்’).
சனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியத்தின் பேரால், சர்வாதிகார அடிப்படையிலான இனக்குழுமவாதம் இங்கியங்குவதை விளங்கிக் கொண்டாலன்றி உண்மைகள் புலப்படா!
4. தேசியவாதமும் X இனக்குழுமவாதமும்
தேசியவாதம்(Nationalism), இனக்குழுமவாதம் (Racism), இனக்குழுவாதம்(Castism), இவை விதந்தோதி இனங்காணப்பட வேண்டியனவாம். தமிழ்ச்சூழலில் தேசிய வாதத்தின் பெயரால் இனக்குழுமவாதமும், மதவாதமும்; மறைமுகமாக இனக்குழு (சாதிய)வாதமும் கைகோத்துக் கிடப்பதே அபாயக் கூறாகும்.
“தேசியவாதத்திற்கும் இனக்குழுமவாதத்திற்கும் இடைய உள்ள வேறுபாட்டைஅறியாதது தான் இன்று பெருஞ்சிக்கலாக இருக்கிறது. ஓர் இனக்குழுவானது ஏற்றத்தாழ்வுகளையும்; அடிமைத்தனங்களையும் எசமானத்துவங்களையும் தன்னகத்தே பேணிக்கொண்டு இனக்குழு அடையாளத்தின் அடிப்படையில் இன்னொரு இனக்குழுவோடு போட்டியிடும், பொருதும், பெருமை பேசும். ஆனால் தேசிய இன உணர்வு அப்படியானதல்ல. அது தன்னகத்தே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளையும், ஆண்டான் அடிமை நிலைகளையும் களைந்து அரசியல் பண்பாட்டளவில் சமத்துவத்தைக் கோரிநிற்கும். தேசியஅடையாளம் என்பது இங்கு போட்டி அல்ல, ஒரு யதார்த்தம் என்பதும் அந்த அடையாளம் ஒரு தற்காப்புவரம்புதான். அதுவும் ஓர் இயற்கையே தவிர வீம்பல்ல. அடுத்து அந்த தேசியவரம்புக்குள் வாழும் மக்களது சமூக மாற்றம் பற்றியது. இது இனக்குழுமவாதத்தில் கிடையாது.”
“இந்திய தேசியம் கீதைக்குள்ளும் வேதங்களுக்குள்ளும் தேடப்பட்டு அரச தேசியமாக வளர்ந்து நிற்கிறது. விதிவிலக்கின்றி ஆசியாவில் பிறப்பெடுத்த அனைத்து தேசியத்திற்குள்ளும் இனக்குழும உணர்வு இருந்துகொண்டே இருக்கிறது.”
– பெரியாரும் தமிழ்த்தேசியமும் நிகழ்வுக்கான துண்டறிக்கை (‘பெரியாருந் தமிழ்த் தேசியமும்’)
ஆண்டபரம்பரை மீண்டுமொருமுறை ஆளநினைப்பது என்ன குறை என்ற காசி ஆனந்தன் இன்று என்னவாகிச் சீரழிந்துள்ளார்? அகரமுதல்வன் ஜெயமோகனோடு கூட்டணி வகுத்தாற்போல் அர்ஜுன் சம்பத்துடன் காசி ஆனந்தன் சங்பரிவாரங்களோடு சங்கமித்தாயிற்று. தீபச்செல்வன் கதையும் இதுவேதான். ஈழத்தின் காசி ஆனந்தன் இனக்குழுமவாதமும் மோடி புகழ்பாடி பாஜகவின் மதவாதப்பாசிசத்துடன் சங்கமித்தாயிற்று.
பெரியாரையும் திராவிடத்தையும் எதிர்ப்போர் பார்ப்பனியத்துடனும் மதவாதப் பாசிசத்துடனும் கைகோர்ப்பதுதான் வரலாறு. நேற்று மபொசி, இன்று சீமான், மணியரசன், குணா எனவாங்கும் அதுவே தொடர்கதையாகின்றது.
மணியரசன் அமைப்பு பெயரிலும் மார்க்சியத்தைக் கைநெகிழ்த்தே விட்டது. சீமானின் மேடையில் இட்லர் படம், உத்தவ் தாக்கரே மேடையில் சீமான் என நாதக குணாவை முன்னிறுத்தும் உதக என்றிவை யாவுமே இவர்தம் இனக்குழுமவாதம் மதவாதப்பாசத்துடன் கைகோர்க்கின்றது. சீமான் முருகனே எம் முப்பாட்டன் என்றால், மணியரசன் மைந்தர் ம.செந்தமிழனோ தமிழர் மெய்யியலே சமயவியல் மட்டுமே என 16 அடி பாய்கின்றார்.
பெங்களூர் குணாவின்’,திராவிடத்தால் வீழ்ந்தோம்’ குறுநூல் பாமக மாநாட்டில் வாசிக்குமுகமாக எழுதப்பட்டதே. குணாவின் நூல்களைத் தொடக்கத்தில் ‘ஆய்வரண்’ என்னும் கிறித்துவத் தன்னார்வக் குழுவே வெளியிட்டது. அவர் சமண பவுத்தங்களை வந்தேறிச் சமயங்கள் என்றார். பாசிச ஞானசம்பந்தனை இன்றளவுங் கொண்டாடி நிற்போரே குணாவும் அறிவுறுவோனும். குணா ‘வந்தேறி வடுகச்சூழ்ச்சி என்றே ‘தலித்தியத்’தையும் பாவிக்கின்றார்.
5. இனவாதத் தமிழ்த் தேசியர் நோக்கிலும்; காத்திரமான பிரமிள் நோக்கிலும் தலித்தியம்
அ.குணாவின் நோக்கில் தலித்தியம்
குணாவை நிறுவனத் தலைவராகக் கொண்ட, ‘தமிழின எழுத்தாளர் பாசறை’ 20-09-2015 இல் நிறைவேற்றியுள்ள இரண்டாவது தீர்மானத்தில் கீழ்க்காணும் பகுதி இடம்பெற்றுள்ளது:
“தலித் என்ற போலிமுத்திரையைக் குத்தி மறையர் (பறையர்)களிடமும் சாதிவெறிக்குக் கொம்புசீவி விடுவதும் அவ்வடுகத்தின் எதிர்வினை உத்தியாகும்.
தமிழரில் எழுத்தாளர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். ‘தலித்’, ‘தலித்தியம்’ போன்ற போலிச் சொல்லாட்சிகளை அவர்கள் தவிர்க்கவேண்டும்” – ‘முதன்மொழி’ (செப்.நவ.2015). (‘இது ‘உலகத்தமிழ்க்கழக’ இதழாகும்)
பெயரீடென்பதே ஒருவகையில் அரசியல்நடவடிக்கையாக உருவாவதுதானே? ‘ஆதிதிராவிடர்’ என அயோத்திதாசப் பண்டிதராலும், அப்புறமாகப் பெரியாராலும்; ‘ஹரிஜன்’ எனக் காந்தியாராலும் (தெலுங்கில் ‘மாலவாடு’- மாலவர்) சூட்டப்பட்ட பெயரீடுகளை நிராகரித்துத்தானே அவர்களே ‘தலித்’என முன்னெடுக்கலாயினர்?
இவ்வாறிருக்கையில் தலித்தெனும் பெயரீடு எவ்வாறு போலிமுத்திரை குத்தலாகும்? ‘தலித்தியம்’ எவ்வாறு போலிச்சொல்லாட்சியாகும்? எவ்வாறிதெல்லாம் வடுக எதிர்வினை உத்தியாகும்?
பன்மியப் பாய்வாக அல்லாமல் எதற்கெடுத்தாலும் தமிழ்த்தேசியம் X வடுக வல்லாண்மை எனும் இருமை எதிர்விற்கு ஊடாகவே அணுகத் தலைப்படுவதே குணாவின் இனவாதப் பாசிச அணுகுமுறையாம்!
ஆ. தங்கத்தின் ‘நாற்கருத்தியல் பெருமுரண்கள்’ கதை
“2009 ஆம் ஆண்டு நான்காம் ஈழப்போரின் முள்ளிவாய்க்கால்ப் போர்க்களத்தில் ஒன்றரை லட்சம் தமிழ்க்குடி அழிக்கப்பட்டதற்குப் பின்னர் தமிழ்நாட்டில்,’திராவிடம் Vs தமி்ழ்த்தேசியம்’ என்று இருமுனைக் கருத்தியல் போர் நடந்து கொண்டிருக்கிறது. ‘திராவிடம்’ என்ற கருத்தியலுக்குப் பக்கத்துணையாக, ‘தலித்தியம்’ என்ற கருத்தியல் ஒத்திசைக்கிறது. இவ்விரண்டு கருத்தியல்களும் இணைந்து ‘தமிழியம்’ என்ற கருத்தியலைச் சமருக்கு அழைக்கின்றன. இந்தியதேசியம், திராவிடதேசியம் ஆகிய கருத்தியல்களும்; தலித்தியம் என்கிற சமூகநீதிக் கருத்தியலும் ஒருங்கிணைந்து தமிழ்த்தேசியக் கருத்தியலோடு பொருதுகின்றன. இந்த நான்கு கருத்தியல்களே இன்றைய தமிழக அரசியல் சொல்லாடல்களை உற்பவிக்கின்ற பெருமுரண்களாகத் தொழிற்படுகின்றன. இந்தப் பெருமுரண்கள் முதன்மையாய முரண்களாக உரசிக்கொள்ள புதிது புதிதாய்க் கருக்கொள்கின்றன துணைமுரண்கள். பின்னர் ‘அரசியற்கால’ நகர்வின் திருப்புமுனைக் கட்டங்களின் போது இந்தத் துணைமுரண்கள் பிறப்பிக்கப்படுகின்றன. இந்த நச்சுக்குட்டிகள் நடந்து பழகி பின்னர் தங்களுக்குள் பாய்ந்து போரிட்டுக் கொள்கின்றன.”
“முள்ளிவாய்க்கால் போரினை உற்பவித்த ஆற்றல்களே இன்றைய தமிழகத்தின் பெருமுரண்களையும் துணைமுரண்களையும் உற்பவித்துக் கொண்டிருக்கும் ஆற்றல்கள்.” – தங்கம் தங்கம் (‘மெய்காண் கலைஞர் தமிழ்ச்சங்கம்’- முகநூற் பதிவு)
திராவிடம்,பெரியார் குறித்த தமிழ்த்தேசியப் பேரியக்க அறிக்கையை மெய்காண் கலைஞர் சங்க அமைப்பில் தங்கம் பதிந்தார். நான் அவ்வமைப்பில் இணைந்ததே பிரமிள் குறித்த அவரது ஈடுபாடு கால சுப்பிரமணியத்துடன் இணைந்து பிரமிள் நூல்வெளியீடு, கருத்தரங்கு என்றவர் செயல்பட்டதாலேயேதான்.
இத்தொடர்பிலான எம்மிடையிலான விவாதத் தரப்பாக அவரால் இடப்பட்ட எதிர்வினையில் இருந்தே இங்கு எடுத்தாண்டுள்ளேன்.
விரும்பத்தகாத முறையில் தங்கம் விவாதகதி நீலம்பாரிக்கவே நான் அவ்வமைப்பில் இருந்து மனங் கைத்து வெளியேற நேர்ந்தது. நிலைப்பாடுகள் என்பன மாறக் கூடியனவே. அவரவர்க்கும் அவரவர் அளவிலேயேகூட. அதனால் ஒருவர் நம்முடன் மாறான நிலைப்பாடு உடையவர் என்பதனாலேயே அவரை முத்திரை குத்தி அவதூறு தூற்றும் வெறுப்பரசியலை அறவே தவிர்த்தலே காத்திரமான அணுகுமுறையாகும். இங்கே நான் எடுத்தாண்டுள்ள தங்கத்தின் பதிவைப் பொறுத்தமட்டிலும் அதற்கும் மேலே நான் சுட்டிக்காட்டிய குணாவின் நிலைப்பாடுகளுக்கும் திராவிடம், தலித்தியம் இரண்டையும் எதிரதாக அணுகுவதில் ஒத்தனவாக அவை காணக்கிடப்பது நோக்கத்தக்கதாம்.
மார்க்சியம் தங்கத்திற்கு ஒரு பொருட்டே இல்லை. குணா தாம் ஏதோ மாவோயிசர் என்ற. பாவனையில் பொதுவுடைமைக் கட்சிகளின் தேர்தல் அரசியலைச் சாடி நிற்கின்றார். தமிழ்த்தேசியப் பேரியக்கமும் அதற்கு முந்தைய அமைப்புப் பெயரிலிருந்த பொதுவுடைமையைக் கைநெகிழ்த்தது தானே?
ஆகவே குணாவும், தங்கம் தங்கமும் தத்தம் இனக்குழுமவாதத்தை இவ்வாறெலலாம் தலித்தியத்திற்கும், தமிழ்த்தேசியத்திற்கும், மார்க்சியத்திற்கும் எதிரதாகவே முன்னெடுக்கலாகின்றனர்.
இ.காத்திரமான பிரமிள் நோக்கில்
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இத்தொடர்பில் பிரமிள் முன்வைத்துள்ள பார்வைகளுக்கு எதிரானவையே தங்கத்தின் இப்பார்வைகள். இவற்றை அவர்தம் காலக்கோட்டில் முன்வைக்காமல் பிரமிளியத்தின் முன்னெடுப்பாக அவர் இயக்கும் குழுவின் காலக்கோட்டில் பதிகின்றார்.
இனி ஒத்துறழ்ந்து நோக்க ஏதுவாக பிரமிள் தரப்புகளையுந் தொகுத்தளிக்கின்றேன்:
“இந்தியவியலை ஒரு பொதுப்பார்வையோடு அணுகுகிற என்னைப் போன்ற ஒருவனது பார்வை முற்றிலும் வேறானது. சரித்திர விவரங்களை அனுசரிப்பதற்கும் வெறுப்புகளை உமிழ்வதற்குமிடையே வேறுபாடு தெரியாதவர்கள்தான் இந்த ஆரியப் பார்ப்பான்களும் திராவிடப் பார்ப்பான்களும்”.
“தமிழியன் என்றோ சமஸ்கிருதன் எனறோ நிலைப்பாடெடுத்த இருதரப்பினரின் பழங்குப்பைகளை எரித்தெறிந்ததே நான் செய்தெல்லாம். இருகட்சியினரையும் நான் காட்டுமிராண்டிகளாகவே கருதுகிறேன்.”
“இன்று தலித் இயக்கம் நெருப்பெடுத்திருக்கிறது என்றால், இந்த நெருப்பு அவர்கள்மீது காலம் காலமாக மேற்கட்டுமானம் வைத்த நெருப்புத்தான்.”
“நிறப்பிரிகை, ஆய்வு, சிதைவு போன்ற பத்திரிகைகளில் ஓரளவு வன்முறை தேவை என்ற பார்வை வெளிப்படுகிறது. ‘தலித்’ என்ற தாழ்த்தப்பட்டோரின் போர்
முகம் திரள ஆரம்பித்திருக்கிறது. இவை சமூகக் கட்டுமானத்தின் ஏகபோக இறுக்கத்தின், ஆழமான, சிந்தனாபூர்வமான இயக்கங்கள் ஏற்படுத்தும் உள்தாக்குதலினால் ஏற்பட்டுள்ள விரிசல் வழியே ஏற்படுகிற வெடியதிர்வு நிலைகள். இவை காரணிய சக்திகளால் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்ட உள்விரிசல்களின் விளைவுகள்.” – பிரமிள்.
பிரமிள் ஈழத்தின் தேசியகீதம் பாடியவர். விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக மார்க்சியக் கருவி நூல்களைத் தமிழாக்கம் செய்தளித்தவர்.
6. பெரியாரியத்தின் கருமூலச்சிந்தனை
பெரியாரியத்தின் கருமூலச்சிந்தனை தன்மானமே (சுயமரியாதையே) ஆகும். அதன் ஒரு தனிச்சிறப்பே அது நம்மைப் பிணித்திருக்கும் அனைத்துத் தளைகளில் இருந்தும் நமை விடுவிக்கவல்ல ஆணிவேராகும்.
“இந்த உலகத்திலுள்ள அகராதிகளையெல்லாம் கொண்டுவந்து போட்டு ஒவ்வொரு ஏடாய்ப் புரட்டினாலும் சுயமரியாதை என்கிற வார்த்தைக்கு நிகரான அழகும், பொருளும், சத்தியமும் நிரம்பிய வார்த்தையை உங்களால் காண்பிக்கவே முடியாது.” – ஈ.வெ.ராமசாமி.
வடமொழி ஆதிக்கத்திற்கு எதிரான சுயமரியாதை உணர்வே, மொழிவழிப்பட்ட தனித்தமிழியக்கமாகப் பரிணமித்தது. இவ்வாறே இசைத்துறையிலும் கர்நாடக சங்கீத, பிறமொழிக்கீர்த்தனை இவற்றிற்கெதிரான தன்மான உணர்வே தமிழிசை இயக்கமாகப் பரிணமித்தது. கோயிற் பண்பாட்டாதிக்கத்திற்கு எதிரான சுயமரியாதை உணர்வே தமிழர்சமயம், தமிழ்வழிபாடு வழிப்பட்ட சுயமரியாதை உணர்வாகக் கருவறை நுழைவுப் போராட்டமாகப் பரிணமித்தது. எனவே தமிழின் மறுமலர்ச்சிக்கான இயக்கம் யாவுமே அவ்வத் துறையிலும் ஊடாடிய ஆதிக்கங்களுக்கு எதிரான சுயமரியாதை உணர்வின் பெறுபேறுகளாகப் பரிணமித்தவைதாம்.
“தமிழ்நாட்டில் உயர்நிலை அதிகார மேலாண்மையுடன் நிலவிய இலக்கிய ஓட்டத்திற்குப் புறம்பானதும் தமிழர் சிந்தனை மரபில் புதியதடம் வகிக்கப் போவதுமான ஒரு செல்நெறி1920 களில் உருப்பெறத் தொடங்குகிறது. அது தான் வருணாசிரமக் கோட்பாட்டையும் அதன் தங்குதளமான பிராமணியத்தையும் புலமை நிலைமையிலும், சமூகநிலையிலும், அரசியல் நிலையிலும் எதிர்க்கின்ற ஒரு கருத்துநிலை ஆகும்.” – கார்த்திகேசு சிவத்தம்பி (‘நவீனத்துவம்-தமிழ்-பின்நவீனத்துவம்’).
1928 இல் நிகழ்ந்த பெரியார் – பாரதிதாசன் சந்திப்பு தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான ஓர் இணைவைச் சின்னப்படுத்தி நிற்கின்றதெனவும், மறைமலை அடிகளின் இயக்கத்தில் முதன்மைப்படாத தமிழ்மனிதன் அதில் முனைப்புப்படுத்தப் பட்டானெனவும், அது மொழியைத் தனது உணர்வு, அறிவு வெளியீடாகக் கொண்ட மனிதனைப் பேசுவதாகவும் சிவத்தம்பி தொடர்வார்.
ஆலின் பழத்தொரு குறுவித்தாகப் பாரதிதாசனின் தமிழெனும் மூலப்படிமத்தில் இருந்தே அண்ணா எனும் பேராலம் விளைந்து தமிழரசியல் விழுதுகளைப் பரப்பியது குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளார் தமிழவன்.
“இந்திய தேசியம் கீதைக்குள்ளும் வேதங்களுக்குள்ளும் தேடப்பட்டு அரசதேசியமாக வளர்ந்து நிற்கிறது. மகாவம்சத்திற்குள் தேடப்பட்ட சிங்கள தேசியம் பேரினவாதமாக முற்றி நிற்கிறது. விதிவிலக்கின்றி ஆசியாவில் பிறப்பெடுத்த அனைத்து தேசியத்திற்குள்ளும் இனக்குழுமஉணர்வு இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆயினும் இந்தியத் துணைக்கண்ட. அளவில் தோன்றிய தேசியஇயக்கஙகளுக்குள் அதிகபட்சத் தேசியத்தன்மை கொண்ட இயக்கம் சுயமரியாதை இயக்கந்தான். இதில்மட்டுந்தான் தேசியத்திற்கு உரித்தான சமூகக் கண்ணோட்டம் இருந்தது. அடிமட்டத்திலிருந்து இது தேசிய இயக்கம் பற்றிச் சிந்தித்தது. அப்பாசறையில் இருந்து வந்த பெரும் கட்சிகள் அவற்றின் கொள்கைகளில் இருந்து தடம்மாறிச்சென்றன என்றாலும், நமது வரலாற்றின் வழித்தடத்தில் பதிந்து இருக்கும் சனநாயகத் தமிழ்த்தேசியக் கூறுகளை வளர்த்தெடுத்துப் பாதை அமைக்க வேண்டிய பொறுப்பு நமது தோள்களில் இருக்கிறது.” – (‘பெரியாரும் தமிழ்த்தேசியமும்’)
“பெரியாரின் கோட்பாடு அதாவது பெரியாரியம் என்பது சுயமரியாதை அல்லது தன்மானம்தான். இதுதான் பெரியாரின் தத்துவம். சுயமரியாதை என்பதற்குப் பெரியார் தந்த விளக்கங்கள் மிக விரிவானவை. ஒரு பெண்ணுக்கு எது சுயமரியாதை? திராவிடனுக்கு எது சுயமரியாதை? தமிழனுக்கு எது சுயமரியாதை? இப்படி எல்லாம் நிறையக் கேள்விகளை எழுப்புகிறார். ” – ஞானி (‘நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும்’).
“பொதுவாக சுயமரியாதை என்கின்ற ஓர் இன்ஜினைப் பலப்படுத்தி, சரியாக ஓடத் தெரிந்த சக்தியை உண்டாக்கி வைத்து விட்டால், பிறகு எந்த எந்திரத்தைக் கொண்டு அதோடு இணைத்துத் தோல்பட்டையை மாட்டிவிட்டாலும் தானாகவே ஓடும். ஒரு இயந்திரத்தைச் சுழற்றும்போது முதலில் சுற்றும் சிறுவேகம் போல இன்று ஒரு வகுப்பார் உணர்ச்சியோடு போராடுவதாகக் காணப்படுவது; மற்றபடி பின்னாலது உலகத்தையே ஒன்று படுத்த உலகமக்களையே ஒரு குடும்பச் சகோதரர்களாகச் செய்யும் முயற்சியின் போதுதான் அதன் உண்மைச் சக்தியும் பெருமையும் வெளியாகும்”- ஈ.வெ.ராமசாமி (‘குடி அரசு’ தலையங்கம் 17-2-1929)
7. இன்னமும் ஏனோ திராவிடப் பெயரீடு?
“சுயமரியாதை உணர்வுடைய தமிழர்கள் தங்களைத் ‘திராவிடர்கள்’ என அழைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்(பெரியார்) கூறிவந்தாலும் அவரோ அவரது இயக்கமோ ‘தமிழன்’ என்ற அடையாளத்தையோ, தமிழுணர்வையோ கைவிடவில்லை. பெரும்பாலான சமயங்களில் பெரியாரும் அவரது இயக்கத்தினரும் ‘தமிழன்’ ‘திராவிடன்’ என்னும் சொற்களை ஒரே பொருள்தரும் வகையில் பயன்படுத்தினர்” – எஸ்.வி.ராஜதுரை (‘கலை எனப்படுவது இனக்கொலை என்றால்’).
“நாம் சொற்களைப் பிடித்துக்கொண்டு வாதிடக்கூடாது. தொடக்கத்திலேயே திராவிடம் என்று சொல்லாமலே தமிழ், தமிழம் என்றே சொல்லியிருந்தால், அல்லது பிறகாவது அப்படி மாற்றியிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். அப்படி நடக்கவில்லை. அதற்காக இப்போது என்ன செய்வது? நாளை மாற்றிக்கொண்டாலும் வரவேற்போம். ஆனால் அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை என்பதற்காகவே, உள்ளடக்கத்தைப் பார்க்காமல் ஒதுக்கித் தள்ளிவிடப் போகிறோமா?”
“திராவிடம் என்பது தமிழியத்தின் உருத்திரிந்த வடிவம். உள்ளடக்கம் தமிழியம்தான். இந்த உள்ளடக்த்தைச் சரியாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தடையில்லை என்கிற வரைக்கும், உருத்திரிபுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். தடையாக வரும்போது உடைத்துக்கொண்டு முன் செல்வோம்” – தியாகு (‘பெரியாரும்தமிழ்த்தேசியமும்’).
“என்றைக்கு இந்தியா மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்டதோ அன்றையிலிருந்தே பெரியாரின் அரசியல் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதுதான். ‘பின் ஏன்அவர் தமிழர் கழகம் என்று மாற்றவில்லை’ என்பது சரியான வினாதான்!”.
“பெரியார் திராவிடன் என்ற சொல்லைத் தமிழனுக்கு எதிராகப் பயன்படுத்தினார் என்று எவரும் சுட்டமுடியாது. ‘தமிழன் மட்டும் தன்னைத் திராவிடன் எனக் கருதிக்கொண்டான் என்ற கருத்தில் உண்மை இருக்கிறது. ஆனால் அதே சமயம் பெரியார் முன்வைத்த திராவிட அரசியல் தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிராக என்றுமே சென்றதில்லை. இதைப் பார்க்க மறுப்பது அரசியலைச் சரியான பாதைக்கு இட்டுச்செல்லாது; மேலும் தமிழரின், தமிழ்த்தேசியத்தின் பொது எதிரிக்கே வலிமை சேர்க்கும்”
“ஒரு முக்கியமான கருத்தை இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன். இன்று நீ யார் என என்னைக் கேட்டால் கூச்சமின்றித் தயங்காமல்,அரசியல் உணர்வோடு,நானா, நான் தமிழன் எனப் பளிச்சென்று பச்சையாகப் பதில் கூறுவேன். காரணம் ‘திராவிடன்’ என்றசொல் இறந்த காலத்தில் வேர்கொண்டு அதன் பயனை அளித்து ‘முடிந்த’ சொல் என்பது என் கருத்து. ஒரு சொல் குறியீடாகும் போது அதன் அரசியல் இறந்த காலத்தில் வேர் கொள்கிறதா அல்லது எதிர்காலத்தில் வேர்கொள்கிறதா என்று கவனிக்க வேண்டும்”- து.மூர்த்தி (‘பெரியாரும் தமிழ்த்தேசியமும்’)
திராவிட இயல் என்பது கலை, சட்டம், கல்வி, மொழியியல் துறைகளில் இன்றளவுமான நடைமுறைப் பயன்பாட்டில் தொடர்ந்திடக் கூடியது என்பதும் இத்தொடர்பில் மனங்கொள்ளத்தக்கதே ஆகும்.
திராவிட தேசியமோ, தமிழ்த்தேசியமோ அது எதனை உள்ளடக்குகின்றது, எதனை வெளிநிறுத்துகின்றது என அ.மார்க்ஸ் கூறுமாப் போலே அவற்றைப் பொறுத்தே தகவமையும். பார்ப்பனியத்தை உள்ளடக்கும் எதுவும் தமிழ்த்தேசியமாக இருக்க இயலாது. இனக்குழுமவாதத்தை உள்ளடக்கமாகக் கொண்டது தேசியவாதமேயாகாது. அது வெறுப்பரசியலையே விதைத்து எதேச்சாதிகாரமாகவே இயங்கும்.
– வே.மு.பொதியவெற்பன்
(பொதியவெற்பன் அவர்கள் ஆய்வாளர், கவிஞர், பதிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இலக்கியம் மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பவர்.)
(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)
பொதியவெற்பன் கட்டுரைகளைப் படிக்க