inequality in education

கல்வி அனைவருக்கும் பொதுவாக இல்லை என்பதை உணர்த்தும் கொரோனா காலம்

“(ஒடுக்கப்பட்ட சமூகத்தில் மகனாகப் பிறந்த) எனது பிறப்பே எனது மரணத்திற்கு காரணம் (My Birth is my fatal accident)….. எனது 7 மாதத்திற்கான கல்வித்தொகை ரூ. 1,75,000 கிடைக்க வேண்டியதிருக்கிறது. இக்கடிதத்தினை படிக்கக்கூடியவர்கள் அந்த தொகை (ஏழ்மையிலுள்ள) எனது குடும்பத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதா என உறுதிப்படுத்தவும்.”

 -ரோஹித் வெமுலா, ஐதராபாத் பல்கலைகழக மாணவர். தன் மரணத்திற்கு முன்பாக எழுதிய கடிதத்தில்..

மார்ச் மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்தே கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டின் இறுதித் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அறிவிக்கப்பட்ட காலவரையற்ற விடுமுறை மாணவர்களின் கல்விச்சூழலை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அறிவிக்கப்பட்டு நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மாணவர்களின் அடுத்த கல்வியாண்டும் நெருங்கிக் கொண்டிருக்க, மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டின் இறுதிக்குள் நடத்த வேண்டிய பாடங்களும், தேர்வுகளும் கல்வி நிலையங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்நிலையில் தான் தெலுங்கானாவிலுள்ள ஹைதராபாத் பல்கலைகழகம்,  கொரோனா ஊரடங்கிற்குள்ளாக மாணவர்களுக்கு இணையத்தின் வழி பாடங்கள் நடத்துவது தொடர்பாக மாணவர்களிடம் கருத்து கேட்டது. இணையத்தில் நடத்தப்பட்ட இக்கருத்துக் கேட்பின் முடிவு, பல்கலைகழகத்தின் இணைய வழி பாடம் நடத்தும் முடிவினைக் கைவிட வைத்திருக்கிறது.

ஹைதராபாத் பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக்கேட்பில் மொத்தம் 2500 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் 90 சதவீதத்தினர் மட்டுமே அலைபேசிகளைப் பயன்படுத்துபவராக இருக்கின்றனர். 50 சதவீதத்தினரிடமே மடிக்கணினி இருக்கிறது. 90 சதவீதத்தினர் எந்நேரமும் இணைய வசதி தங்களுக்கு கிடையாதென்றும், வாய்ப்பு கிடைக்கும் சமயங்களில் தங்களால் அதனை பயன்படுத்திக்கொள்ள முடியுமென்று தெரிவித்திருக்கின்றனர். அவர்களிலும் முக்கால்வாசி நபர்கள் தங்கள் அலைபேசியின் வழியிலான இணையத்தையே சார்ந்திருக்கின்றனர். இவர்களல்லாத 10 சதவீதத்தவர்களிடம் மட்டுமே எந்நேரமும் கிடைக்கக்கூடிய நிலையான வைஃபை வகையிலான இணைய வசதி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதன் காரணமாக இணையத்தின் வழி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் திட்டத்தினை ஹைதராபாத் பல்கலைகழகம் கைவிட்டிருக்கிறது. மாணவர்களின் சமூகப் பொருளாதாரச் சூழல் பல்கலைகழகத்தின் மேம்போக்கான திட்டமிடலை யதார்த்தத்தில் தடுத்து நிறுத்தியிருக்கிறது

இந்திய மக்களினுடைய பல்வேறு சமூக பொருளாதார நிலைமைகளின் அடிப்படையில் மக்களினுடைய கொரோனா ஊரடங்கு கால வாழ்நிலைகளை அமைக்கத் தவறிய ஒன்றிய அரசினைப் போல் ஹைதராபாத் பல்கலைகழகமும் செயல்பட்டிருந்தால், பல்கலைக்கழகத்தின் ’இணையவழி பாடம் நடத்துதல்’ திட்டம் நடைமுறையில் தோல்வியையே சந்தித்திருக்கும்.

தங்களின் குறைந்தபட்ச ஒருவேளை உணவையாவது உத்திரவாதிப்படுத்திக் கொண்டிருந்த அங்கன்வாடிகள் திறப்பதற்கு லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் நாட்டினில் தான், கல்விக்காக லட்சங்களை செலவு செய்யும் மாணவர்களுக்கு பல தனியார் பள்ளிகள் இணையத்தின் மூலம் பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்களின் கொள்கை முடிவுகள், திட்டங்கள் பெரும்பாலான நேரங்களில் லட்சங்களை செலவு செய்ய தகுதிப்படைத்தோரை மட்டுமே மனதில் கொண்டிருப்பதுதான் உலகில் மிக நீண்ட நாட்களாக நிலவிக் கொண்டிருக்கும் பெருந்தொற்று. அதற்கு கொரோனா காலமும் விதிவிலக்கல்ல!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *