Manu statue at Rajasthan court

அவமானச் சிலைகளை அகற்றும் காலம் இது!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கடைக்கோடி கிராமத்தில் இருந்து கிளம்பிய அந்த இரு தலித் பெண்களும், பையில் ஒரு புட்டியை வைத்துக்கொண்டு ஒளரங்காபாத் ரயில் நிலையத்தை வந்தடைந்தனர். சிறிது ஓய்வெடுத்த பிறகு அங்கிருந்து ஜெய்பூருக்கு புறப்பட்டனர்.  ஏறத்தாழ 1000 கி.மீ தூரம் வரை, அந்த புட்டியை பத்திரமாக எடுத்துச் சென்றனர். ஜெய்பூர் சென்றடைந்ததும் அங்கிருந்து 6 கி.மீ தூரம் நடந்தே ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தின் முகப்பிற்கு வந்தடைந்தனர்.

தாங்கள் எடுத்துவந்த அந்த புட்டியில் இருந்த கருப்பு சாயத்தை அங்கிருந்த மனுவின் சிலையின் மீது ஊற்றினார்கள். 2000 ஆண்டுகளாக சாதியை பாதுகாக்கும் நூலான மனுதர்மத்தை எழுதிய அந்த பார்ப்பன  ஆதிக்க சிலையை எதிர்க்க இரு தலித் பெண்கள் 1000 கி.மீ கடக்க வேண்டி இருந்தது. 

கன்சிராம் தொடங்கி ஏராளமான தலித் அமைப்புகள் மனுவின் சிலையை அகற்ற போராடியிருக்கிறார்கள். ஆனால் நீதிமன்றத்தில் இருக்கும் பார்ப்பனர்களின் லாபி அந்த சிலையை அகற்ற அனுமதிப்பதில்லை. 

ராஜஸ்தான் நீதிமன்றத்தில் உள்ள மனுவின் சிலையை அகற்ற தலித்துகள் தனியாகத் தான் போராட வேண்டுமா? ஏன் மற்றவர்கள் யாரும் முன்வரவில்லை? BlackLivesMatter போராட்டத்தில் கருப்பின மக்களின் உரிமைக்காக வெள்ளையினத்தவர்களும் சேர்ந்து நின்று போராடுகிறார்கள். கருப்பின மக்களை அடிமைப்படுத்துவதற்கு காரணமாய் அமைந்த வெள்ளையின தலைவர்களின் சிலைகள் அகற்றப்படுகின்றன. இதற்கு வெள்ளையின மக்களின் பகுதியினரும் ஆதரவாய் நிற்கின்றனர். பிறப்பால் மேலும் கீழும் இருப்பதை சட்டமாக்கிய மனுவின் சிலையும் தேசிய அவமானமாகத்தானே பார்க்கப்பட வேண்டும். சிலை மட்டுமல்லாது அனைவரின் மனதில் இருந்தும் சாதியும் அகற்றப்படவேண்டும். 

சாதிக்கு ஏற்றார் போல்தான்  நீதி வழங்கப்பட வேண்டும் என்று கூறும் மனுவின் சிலை எப்படி இன்னும் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் நீதிமன்றத்தில் நிலைத்து நிற்கிறது? ஏனென்றால் அங்கு மனுவின் அடிப்படையிலான நீதி இன்னும் கடைபிடிக்கப்படுவதால்தான். ஆம் நீதிமன்றங்களின் நீதிகளிலும்  சாதியத்தின் தாக்கம்  இருக்கத்தான் செய்கிறது. சாதியப் பாகுபாடுகள் சமூகம், அரசு அன அனைத்து அமைப்புகளின் கட்டமைப்பிலும் வெளிப்படுவதால்தான் இன்று சிறைகளில் தலித் மக்களும், சிறுபான்மையினரும் தங்கள் மக்கள்தொகை சதவீதத்தை விட குற்றவாளிகளின் சதவீதத்தில் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவும் கூட ஒருவகையில் மனுதர்மத்தை மீட்டுருவாக்கும் போக்காகவே அமைகிறது.

இந்தி நடிகர் சினை அகுஜா ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது அவர் ஏன் அந்த பெண்ணைக் பாலியல் வன்புணர்வு செய்தார் என்று கேட்டதற்கு அகுஜாவின் வழக்கறிஞர் அந்த கற்பழிக்கப்பட்ட பெண் கீழ்சாதியைச் சார்ந்தவர். அதனால் அவர் மிக முரட்டுத்தனமாக இருந்தார். அவர் எளிமையாக தன்னை விட்டுக்கொடுக்கவில்லை. எனவே பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்க வேண்டிய நிர்பந்தம் வந்தது என்று அனைவரின் முன்பு வாதிட்டார். 

“She (victim) belongs to a lower caste, which is aggressive by nature, and she wouldn’t have submitted herself so easily. They are known for being aggressive.”

அதேபோல் யாகுப்மேனனின் வழக்கில் தீர்ப்பு கூறும்போது மூத்த நிதிபதி அனில்தேவ் மனுஸ்மிருதியை கோடிட்டுக் காட்டி பின்வருமாறு கூறினார்.

“If the king does not act firmly in punishing an offender, then he is equally guilty of the sin. The king should not be carried away by the emotions while dealing with the offenders.”

அதேபோல் அப்சல்குருவின் வழக்கில் உச்சநீதிமன்றம் பின்வருமாரு கூறியது “  இந்த வழக்கு தெளிவில்லாமல் மர்மமாக உள்ளது. குற்றவாளி மீது எந்த நேரடி சாட்சியமும் இல்லை. இருப்பினும் இந்த நிகழ்வு பல மனித உயிர்களை காவு வாங்கியதோடு தேசத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்திவிட்டது. எனவே சமூகத்தின் கூட்டுமனசாட்சியை திருப்திப்படுத்த வேண்டும் என்றால் கட்டாயம் தூக்குதண்டனை விதிக்கப்படவேண்டும்” என்று தீர்ப்பில் எழுதப்பட்டது. இங்கு சட்டத்தையும் சாட்சியங்களையும் தூக்கி எறித்துவிட்டு சமூகத்தின் கூட்டு மனசாட்சி என்கிறார்களே, எந்த சமுகத்தின் கூட்டு மனசாட்சியை? அந்த மனசாட்சி மனுவிடமிருந்து கடன் வாங்கப்பட்டதா? 

மனுவின் சிலை நீதிமன்றத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். பார்ப்பன கட்டமைப்பையும், சாதிய படிநிலைகளையும் உள்ளடக்கிய சமூகத்தை சட்டப்பூர்வமாக்கிய மனுதர்மத்தை எதிர்த்து  போராடிக்கொண்டிருக்கும் குரல்கள் தேசத்துரோகிகளாய் சித்தரிக்கப்படக் கூடாது. சாதியப் பிரிவினை என்பதுதான் இந்த நாட்டின் மக்களைக் கூறுபோடும் மிகப் பெரிய தேசத்துரோகம். அப்படியென்றால் அதனை அங்கீகரிக்கும் மனு அப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று கோருவதில் தவறில்லை தானே.

One Reply to “அவமானச் சிலைகளை அகற்றும் காலம் இது!”

  1. மனுவின் சிலையை அகற்ற மறுப்பது இந்து மதத்தின் சனாதன உணர்வே.
    அப்பட்டமாக மனு தர்மமே அரசியல் சட்டம் இந்திய தண்டனைச் சட்டத்தை மீறிச் செயல்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *