IDPL Pipeline farmers protest

ஐ.டி.பி.எல் பெட்ரோல் பைப்லைன் திட்டத்திற்காக விவசாய நிலத்தை பறிப்பதா?

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி என 7 மாவட்ட விவசாய நிலங்களில் பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்கும் ஐ.டி.பி.எல் (IDPL) திட்டத்திற்கு அம்மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு அனுமதியளிக்கப்பட்ட இத்திட்டமானது விவசாயிகளுடைய போராட்டத்தால் கைவிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி இத்திட்டத்தை நிறைவேற்ற பாரத் பெட்ரோலிய நிறுவனம் முயன்று வருகிறது.

கோவை மாவட்டம் இருங்கூரிலிருந்து (Irungur) கர்நாடகாவின் தேவனகொந்தி (Devanakondhi) வரை 294 கிமீ நீளத்திற்கு பெட்ரோலிய பைப்லைன் அமைக்கும் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஐடிபிஎல் (IDPL – Irungur Devanakondhi Petroleum and petroleum product PipeLine Project) திட்டத்திற்கு கடந்த 2015-ம் ஆண்டு பெட்ரோலியம் மற்றும் எரிக்காற்று ஒழுங்காற்று வாரியம் அனுமதி அளித்தது. ஆண்டுக்கு 3.52 மில்லியன் டன் பெட்ரோலைக் கொண்டு செல்லும் இத்திட்டத்தால் 10,000 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்படையும் என விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

இத்திட்டமானது குழாய் பதிக்கப்படும் விவசாய நிலத்தை விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்துவதோடு சேர்த்து அக்குழாய்களுக்கு சேதாரம் ஆகாமல் பாதுகாக்கும் காவல் வேலையையும் விவசாயிகள் தலையில் சுமத்துகிறது. அதனடிப்படையில் 1,300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான குறிப்பு ஆணையை பாரத் பெட்ரோலிய நிறுவனம் வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி, வெளியிட்டுள்ள அறிக்கையில் ”இத்திட்டத்தின்படி குழாய் பதித்தால், குழாயின் இருபுறமும் தலா 35 அடிக்கு எந்த விவசாயப் பணியும் செய்யக்கூடாது. ஆழ்துளைக் கிணறு மற்றும் பிற கிணறுகளை அமைக்கக் கூடாது. ஆழமாக வேர்விடும் மரம் நடக்கூடாது. கனரக இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது. பாசனப் பணிக்காக குழாய் அல்லது ரப்பர் டியூப் உள்ளிட்ட எதுவும் எண்ணெய்க் குழாயைக் கடந்து செல்லக்கூடாது என்றெல்லாம் ஐ.டி.பி.எல். நிறுவனம் விதிகளை வகுத்துள்ளது.

மேலும் பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருள்கள் சட்டம் 1962-இன்படி, எண்ணெய்க் குழாய் பதிக்கப்படும் இடங்களில் அவற்றில் பழுது ஏற்பட்டாலோ அல்லது விபத்துகள் நேர்ந்தாலோ நிலத்தின் உரிமையாளர்களே பொறுப்பேற்க வேண்டும். இச்சட்டத்தில் 2012-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி நில உரிமையாளர்கள் நிலத்தையும் ஒப்படைத்துவிட்டு, அதில் பதிக்கப்பட்ட குழாய்களையும் காவல் காக்க வேண்டும்.

விவசாயிகளின் எதிர்ப்புகளை அலட்சியப்படுத்தி வரும் பாரத் பெட்ரோலிய நிறுவனம், தமிழக அரசின் துணையுடன் பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்கள் சட்டம் 1962-இன் கீழ் 317 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுமார் 1300 ஏக்கர் நிலங்களை கைப்பற்றி, பயன்பாட்டு உரிமையை எடுத்துக்கொள்ள குறிப்பு ஆணை வெளியிட்டுள்ளது.

சுமார் ஆறாயிரம் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் என்று விவசாய சங்கப் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இருமுறை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக விவசாயப் பணிகளைக்கூட தொடர்ந்து நிறைவேற்ற வழியின்றி விவசாயிகள் முடங்கி இருப்பது மட்டுமின்றி, குடும்ப வருவாய் இழப்புக்கும் ஆளாகி வரும் சூழலில், ஐ.டி.பி.எல். நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சூழலில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்பு இல்லா நிலையை நன்கு தெரிந்துகொண்டே பெயருக்கு கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தி முடித்து, இத்திட்டத்தைச் செயல்படுத்தத் துடிப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். விளைநிலங்களைப் பாழ்படுத்தும் ஐ.டி.பி.எல். நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட்டு, மாற்றுப் பாதையில் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான கி.வே.பொன்னையன் அவர்கள், ”இந்த IDPL பைப்லைன் திட்டம் உயர்மின் அழுத்த கோபுரத் திட்டத்தை விட ஆபத்தானது என்றும். டெல்டா பகுதியினை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததைப் போல மேற்கு மண்டலத்தையும் அறிவித்தால்தான் இப்படிப்பட்ட திட்டங்களைத் தடுக்க முடியும்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

சென்னிமலை IDPL எதிர்ப்பு போராட்டம்.

Posted by கி.வே. பொன்னையன் on Tuesday, July 7, 2020
சென்னிமலை பகுதியில் நடைபெறும் IDPL எதிர்ப்பு போராட்டம்

ஐ.டி.பி.எல் திட்டத்திற்காக நிலங்களைக் கையகப்படுத்த சேலம் மாவட்டத்தின் சங்ககிரி, மேட்டூர் உட்பட பல வட்டாட்சியர் அலுவலங்களில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விசாரணையை இம்மாதத்தின் 8, 10 மற்றும் 14 தேதிகளில் அறிவித்திருந்தனர். ஐடிபில் திட்டத்திற்கு விவசாய நிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்தும், இத்திட்டத்திற்கான குழாய்களை விவசாய நிலங்களில் அல்லாது சாலையோரங்களில் பதிக்கக் கோரியும் ’பாரத் பெட்ரோலியத்தின் IDPL எண்ணெய்க் குழாய்த் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாய கூட்டமைப்பினர்’, ஜூலை 7-ம் தேதியிலிருந்து (இன்றிலிருந்து) ஜூலை 15-ம் தேதி வரை தொடர் போராட்டத்தை அறிவித்திருந்தனர். முதல் நாளான இன்று ”நிலத்திற்குள் IDPL குழாயை விட மாட்டோம்” என அறிவிப்புப் பலகை நடும் போராட்டத்தைத் தொடங்கினர். இப்போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கருப்புக் கொடி காட்டினர். 

இதற்கு முன்பு இப்பகுதி விவசாய நிலங்களில் குழாய் பதித்து எரிக்காற்று கொண்டு செல்வதற்கான கெயில் குழாய் திட்டம் விவசாயிகளின் கடுமையான போராட்டத்தினால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு கொண்டு வரப்பட்ட விவசாய நிலங்களில் உயர்மின்னழுத்த கோபுரங்களை அமைக்கும் திட்டத்திற்கு எதிராக கொங்கு மண்டல விவசாயிகள் போராடி வருகின்றனர். தற்போது மீண்டும் பெட்ரோலியக் குழாய் என தொடர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் திட்டங்கள் கொங்குப் பகுதியில் கொண்டு வரப்படுகிறது.

விவசாய விளைநிலங்களுக்குப் பதிலாக சாலையோரங்களில் குழாய்களை பதிக்கக் கோரும் தங்களின் குரலைப் பொருட்படுத்தாமல் இத்திட்டங்கள் கொண்டு வரப்படுவதை சுட்டிக்காட்டும் விவசாயிகள், எப்பாடுபட்டாவது இத்திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என நம்பிக்கை குரலெழுப்புகின்றனர்.

இத்திட்டத்தின் முழுமையான வரைபடத்தினை கீழே உள்ள இணைப்பில் பார்க்கலாம்.
https://www.bharatpetroleum.com/images/files/IDPL-Map.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *