இந்திய அரசு சமீபத்தில் தனது தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69A வைப் பயன்படுத்தி, சீன நிறுவனங்களின் மொபைல் செயலிகளுக்கு தடை விதித்தது. அதைத்தொடர்ந்து ட்விட்டர் வலைதளத்தில் #DigitalAirStrike போன்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டதும், பின்னர் பல தரப்புகளில் இருந்து காட்டப்பட்ட ஆதரவுகளையும் வைத்து சீனாவுக்கு மிகப்பெரிய அடி கொடுத்திருப்பதாகவும், இதனால் இந்தியா தன் இறையாண்மை பலத்தை நிலைநாட்டி உள்ளதாகவும் செய்திகள் பரவின.
இத்தடைக்கு காரணமாக சீன அப்ளிகேஷன் நிறுவனங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு என்பது மக்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும், மோடி சமீபத்தில் அறிவித்த ஆத்ம நிர்பார் எனும் சுயசார்பு பொருளாதாரத்தை நோக்கி நாம் செல்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை என்றும் பாஜக தரப்பினரால் கூறப்படுகிறது.
தரவுத் திருட்டு(Data stealing) என்பது சீன நிறுவன செயலிகளில் மட்டும் தான் நடக்கிறதா? ஆத்ம நிர்பாரை நோக்கி இந்தியா நகர்கிறதா?
கடந்த ஜூன் 15-ம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் சீன மற்றும் இந்திய ராணுவத்திற்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்தனர். அதன்பின் சீனாவிற்கு எதிரான எதிர்ப்பு கடுமையாக வலுத்தது. அதன் உச்ச நடவடிக்கையாக ஜூன் 29-ம் தேதி இந்திய அரசின் அதிரடி நடவடிக்கையாக சொல்லப்பட்டு டிக்டாக் உள்ளிட்ட சீனாவின் 59 மொபைல் செயலிகளை (Mobile Applications) தடை செய்வது என இந்திய அரசின் செய்தி வெளியீட்டகம் செய்தி வெளியிட்டது. ஆனால் 30 ஜூன் வரை தடை செய்தது குறித்து எந்த ஒரு தகவலும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.
இந்திய-சீன வர்த்தக சமமின்மை
ஆனால் இப்பரப்புரைகளும் தடைகளும் சீனாவை பெரிதும் பாதிக்கப் போவதில்லை. ஏனெனில் இந்தியாவிற்கு சீனாவுடனான வர்த்தக சமமின்மை என்பது 59.75 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதாவது இந்தியாவின் ஏற்றுமதியை விட சீனாவின் இறக்குமதி 59.68 பில்லியன் டாலர்களாக உள்ளது. மேலும் இந்தியாவில் உற்பத்தியாகும் மருந்துகளின் முக்கிய மூல வேதியியல் கூறுகள் சீனாவில் இருந்துதான் 90 சதவீதத்திற்கும் மேல் இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் பாஜகவினர் தங்கள் எதிர்ப்பைக் காட்ட சீன நிறுவனங்களின் டிவிகளைத் தூக்கிப்போட்டு உடைப்பதாலோ, அதை சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன்களிலே படம் பிடிப்பதாலோ சீனாவுடனான வர்த்தக சமமின்மை எந்த விதத்திலும் மாறப் போவதில்லை. நாட்டின் அனைத்து துறைகளையும் தனியாருக்கு விற்றுக் கொண்டிருக்கும் பாஜகவினர், சீன எதிர்ப்பு என்பதை தங்களை தேசபக்தர்களாக உருவகப்படுத்திக் காண்பிப்பதற்கான ஒரு கருவியாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
சீன செயலிகளை தடை செய்வது எனும் எதிர்ப்பு அரசியல் யாருக்கு லாபமாகும் என்ற கேள்வி முக்கியமானது. உண்மையிலே இந்திய இளைஞர்களின் சுய உருவாக்க செயலிகளை மக்கள்மயப்படுத்த பாஜக உதவப் போகிறதா? ஒரு காலத்திலும் அப்படி செய்தது இல்லை.
ஒருவேளை சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தங்களை அரசு ரத்து செய்யுமானால், அதன்மூலம் ஏற்படும் வெற்றிடத்தை இந்தியாவின் சுதேசி முதலாளிகளை வைத்து இந்த அரசு நிரப்புமா? அது மோடியின் காலத்தில் எப்போதும் நடந்தத்தில்லை.
தயாராகும் அமெரிக்க நிறுவனங்கள்! கேள்விக்குறியாகும் சுயசார்பு!
எப்போதும் அந்நிய முதலீடுகளுடன் கைகோர்த்து நிற்கிற தரகு முதலாளிகளான அதானி, அம்பானி போன்றோருக்கு வேண்டுமானால் சில பங்குகள் கிடைக்கலாம். இந்த செயலிகளின் வெற்றிடங்களை அமெரிக்காவின் சிலிக்கான்வேளியில் (Silicon Valley) இருக்கும் மென்பொருள் நிறுவனங்களைக் கொண்டுதான் நிரப்ப தயாராகி கொண்டிருக்கிறார்கள். இதற்காக சீன எதிர்ப்பு பிரச்சாரங்களின் பின்னால் நின்று முக்கியப் பங்காற்ற அமெரிக்காவின் கையும் வலுவாக உள்ளது. இதில் எங்கே ஆத்ம நிர்பார் எனும் சுயசார்புத் தன்மை இருக்கிறது?
மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி 2014ல் ஆட்சி அமைத்ததிலிருந்தே சங்பரிவார அமைப்புகள் தாங்கள் வெளியுறவுக் கொள்கைகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சார்பான முடிவுகளை எடுப்பதை நியாயப்படுத்துவதற்காக, சீன எதிர்ப்பு எனும் ஆயுதத்தினை கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பாஜக-வின் சீன எதிர்ப்பில் துளி கூட சுதேசியவாதம் இல்லை என்பதே உண்மை.
இந்த தொழில்நுட்ப உலகத்தில் சரியான நேரத்தில் சரியான நபர்களைப் பற்றிய சரியான தகவல்களை கொண்டுள்ளவர்களால் பெரும் பணத்தைக் குவிக்க முடியும். இந்த அடிப்படையில் சீன நிறுவனங்களோ, அமெரிக்கா நிறுவனங்களோ தரவுகளை எடுத்துக்கொள்ள போட்டிபோடும் இக்காலத்தில் அமெரிக்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் தரவுத் திருட்டு குறித்து சங்பரிவாரங்கள் கேள்வி எழுப்பாதது மிகுந்த சந்தேகத்தை எழுப்புகிறது.
கடந்த வருடம் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்கிற நிறுவனம் பேஸ்புக் நிறுவனம் மூலம் அதன் பயனாளர்களின் தரவுகளை தவறாக கையாண்ட காரணத்தினால் சுமார் 5 பில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வாட்ஸ்அப் செயலியின் மூலம் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் முக்கிய பத்திரிக்கையாளர்களும் உளவு பார்க்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின. இத்தகவல்கள் குறித்தோ இச்செயலிகளின் நம்பகத்தன்மை குறித்தோ சங்பரிவாரங்கள் கேள்வி எழுப்பவில்லை. ஏனென்றால் அவர்களின் பொய் பிரச்சாரத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது இச்செயலிகளே.
மேலும் சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை வாங்கியது இந்திய தரகு முதலாளிகளின் அமெரிக்கா சார்பு நிலையை அப்பட்டமாக்கியுள்ளது. 2015ல் மோடியின் அமெரிக்க பயணத்தில் சிலிக்கான் வேலியில் உள்ள வாரன் பஃபெட், மார்க் சக்கர்பெர்க் போன்ற பெரும் முக்கிய புள்ளிகளை சந்தித்த பின், இந்தியாவில் அதிகரிக்கப்பட்ட “டிஜிட்டல் இந்தியா” பிரச்சாரங்களும், அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட மின்னணு பணப்பரிவர்த்தனை சேவைகளும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதையும் படிக்க: இந்தியாவின் சிறு வணிகத்தை குறிவைக்கும் ஜியோ-ஃபேஸ்புக் ஒப்பந்தம்
448.2 மில்லியன் மொபைல் இணையதள வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நாட்டில் தனிப்பட்ட தரவுகள் தொடர்பான சரியான பாதுகாப்பு சட்டதிட்டங்கள் இல்லாமலிருப்பதும், மேலும் இதை தேசக் காவலர்கள் என்று தங்களை மார்தட்டிக் கொள்பவர்கள் கண்டும் காணாமலும் இருப்பதும் கேள்விக்குறியதாகும். அவர்கள் தங்களை தேர்ந்தெடுத்த சிறந்த வெள்ளை ஏகாதிபத்திய அடிமைகளாக நிலைநிறுத்திக் கொண்டு அமெரிக்க சார்பான சந்தையை இந்திய துணைக் கண்டத்தில் பெரிய அளவிற்கு திறந்துவிடுவதற்கான திட்டமாகவே இவை இருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் தங்கள் பொருளியல் நலன்களை பூர்த்தி செய்ய போர்களில் ஈடுபட்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து, அவர்களை அகதிகளாக மாற்றும் அக்கிரமங்களில் ஈடுபடும் அமெரிக்கா, அதே நிலைமைகளை ஆசிய நிலப்பகுதிகளிலும் ஏற்படுத்த முனையும் செயல் திட்டங்களை முறியடிப்பது அவசியமானது. அமெரிக்க-சீன வல்லரசுகளுக்கிடையிலான போட்டியில் இந்திய மக்களை பகடைக் காய்களாக மாற்றப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. அந்நிய முதலீட்டின் பெயரால் நடக்கும் பெரும் கொள்ளையிலிருந்து இந்த நாட்டைப் பாதுகாக்கும் கடமை அனைவருக்கும் இருக்கிறது.