வையாபுரி பிள்ளை

1926-1939 வரை 13 ஆண்டு உழைப்பில் சென்னை பல்கலைகழக தமிழ் பேரகராதியை பதிப்பித்த குழுவின் தலைவர் வையாபுரிப் பிள்ளை

வையாபுரிப் பிள்ளை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

வையாபுரிப் பிள்ளை இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான தமிழ் ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். ஆய்வாளர், கட்டுரையாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழிப்பெயர்ப்பாளர், கதை, கவிதைகள் புனையும் திறம் படைத்தவர் என பன்முக தமிழ் பணியாற்றிவர். 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன்பேட்டை எனும் கிராமத்தில் 1891-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி சரவண பெருமாள் மற்றும் பாப்பம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் வையாபுரிப் பிள்ளை.

பாளையங்கோட்டை புனித சவேரியர் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியிலும் படித்தவர், பின்னர் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். 

இலக்கியங்களுக்கு கால நிர்ணயம் செய்தல்

வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த காலத்தில், வையாபுரிப் பிள்ளை எழுதி, வெளிவந்த பல கட்டுரைகளும் இலக்கிய ஆய்வுகளும் அவரைப் பற்றி அறிஞர்கள் மத்தியில் பேச வைத்தன. பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து ஆய்வு செய்து வெளியிட்டவர்களில் ச.வையாபுரிப் பிள்ளை முக்கியனானவர்.

ஓலைச் சுவடிகளை தொகுத்து பதிப்பித்தது மட்டுமல்ல அவர் பணி, அந்த இலக்கியங்களுக்கு கால நிர்ணயம் செய்ததிலும் வையாபுரிப் பிள்ளைக்கு பெரும் பங்கு உண்டு.

சென்னை பல்கலைக்கழகத்தின் பேரகராதி

வையாபுரிப்பிள்ளை 1926-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியின் பதிப்பாசிரியர் பொறுப்பினை ஏற்றார். தெற்காசிய மொழிகளுள் மிகச் சிறந்ததாகப் பேசப்படும் அகராதி, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதிதான்.

7 தொகுதிகள், 4351 பக்கங்கள் மற்றும் 1,17,764 சொற்களைக் கொண்டு தமிழ் – தமிழ் – ஆங்கிலம் என்ற வடிவில் இப்பேரகராதி தொகுக்கப்பட்டுள்ளது.

1926-ம் ஆண்டு தொடங்கி 1939-ம் ஆண்டு வரை தயாரிக்கப் பெற்ற இப்பேரகராதிக்காக தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், இடைக்கால இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், பிற்கால இலக்கியங்கள், வானியல், சோதிடம், கணிதம், சித்த மருத்துவம் போன்ற நூல்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் பல்வேறு நூல்கள் பயன்படுத்தப்பட்டன.

1936-ம் ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறையின் தலைவராக விளங்கினார்.

வையாபுரிப் பிள்ளை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த காலகட்டத்தில்தான் மலையாள மொழி சொற்களஞ்சியம் பதிப்பிக்கப்பட்டது. அதன் உறுப்பினாரகவும் பணியாற்றிய பெருமை வையாபுரிப் பிள்ளைக்கு உண்டு. 

தஞ்சை பல்கலைக்கழகத்தின் முன்னால் துணைவேந்தர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் வையாபுரியாரின் ஆய்வு மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது

இரசிகமணி டி.கே.சி-யுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தார். மனோன்மணியம் உரையுடன் தொடங்கி 1955-ல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உரையுடன் பதிப்பித்தது வரை தமிழுக்குப் பெரும் தொண்டு ஆற்றினார்.

காலக் கணிப்பு குறித்தான விமர்சனம்

தேவநேயப் பாவாணர் போன்றவர்கள் வையாபுரிப் பிள்ளை தமிழ் இலக்கியங்களின் காலத்தை சரியாக கணிக்கவில்லை என்றும், கிறிஸ்துவுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியத்தைப் பிற்பட்ட காலத்தது என்று கூறுவதாகவும் கண்டித்தனர். தமிழின் பழம்பெருமைக்கு எதிரானவர் என்று அவரை திராவிடக் இயக்கத் தமிழறிஞர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். 

பதிப்பித்த நூல்கள்

Research in Dravidian Language (Madras Premier Co.,Madras), 1956 – History of Tamil Language & Literature (NCBH), தமிழின் மறுமலர்ச்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். சங்க இலக்கிய பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும், மனோன்மணியம் உள்ளிட்ட 38 நூல்களை பதிப்பித்துள்ளார்.

பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளை – 1956-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் நாள் தன் 65-ம் வயதில் இயற்கை எய்தினார். இன்று அவரது பிறந்த நாள்.

One Reply to “1926-1939 வரை 13 ஆண்டு உழைப்பில் சென்னை பல்கலைகழக தமிழ் பேரகராதியை பதிப்பித்த குழுவின் தலைவர் வையாபுரிப் பிள்ளை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *