வடகொரியாவை ஆளும் தொழிலாளர் கட்சியின் 75-வது ஆண்டு விழா மிகப் பெரிய பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பிற்கு நடுவே கொண்டாடப்பட்டுள்ளது.



கிம் ஜாங் உன் தலைமையில் வடகொரியாவை ஆண்டு கொண்டிருக்கிற தொழிலாளர் கட்சி கடந்த சனிக்கிழமை 75-வது ஆண்டு விழாவினை வடகொரியாவின் பல்வேறு சக்கிவாய்ந்த ஆயுதங்களை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடியுள்ளது. இதுவரை தான் வெளிகாட்டாமல் வைத்திருந்த New Strategic Weapon என்றழைக்கப்படும் புதிய ஆயுதங்களை அணிவகுப்பாகக் கொண்டுவந்து பொதுமக்களுக்கும் உலகத்திற்கும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டிற்குள் இதுபோன்ற ஆயுதங்களை வெளிக்காட்டுவோம் என்று வடகொரிய மக்களுக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உறுதியளித்திருந்தார்.
அதிபர் கிம் பேசும்போது, நமது போர் மற்றும் ஆயுத நடவடிக்கைகள் யாவும் யாருக்கும் எதிரானதல்ல. நம்மை நாம் தற்காத்துக் கொள்வதற்குத் தான் என்று பேசினார்.



“எங்கள் பெரிய கட்சிக்கு மிகப்பெரிய பெருமை”, என்ற முழக்கத்துடன் பிரச்சார சுவரொட்டி படத்துடன் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. மூன்று வட கொரியர்கள் சுத்தியல், அரிவாள் மற்றும் தூரிகை வைத்திருப்பதைக் காண்பித்து இந்த அணிவகுப்பு துவங்கியது.




11 ஆக்சிஸ் கொண்ட டிரக்கின் மூலம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக தலைநகர் பியோங்யாங்கில் கொண்டு செல்லப்பட்ட International Ballistic Missile என்றழைக்கப்படும் கண்டம் விட்டு கண்டம் தாவும் பிரம்மாண்டமான ஏவுகணை அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியது.


இது குறித்து பல்வேறு நாட்டின் ராணுவ நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த அணிவகுப்பில் கொண்டுவரப்பட்ட ஆயுதங்களை பார்த்த பிறகு தென்கொரியா சிறப்பு ராணுவ ஆலோசனைக் கூட்டம் ஒன்றைக் கூட்டி விவாதித்து வருகிறது.
அமெரிக்க உளவு நிறுவனம் கடந்த வாரம் தொடக்கத்தில் பல்வேறு செயற்கைக்கோள் புகைப்படங்களின் மூலமாக வடகொரிய ராணுவத்தின் அணிவகுப்பிற்கான ஒத்திகையை படம் பிடித்து வந்துள்ளது. ஆயுதமேந்திய ராணுவ வீரர்கள் மற்றும் கவச வாகனங்கள் பியோங்யாங்கின் தெருக்களில் வரிசையாக நிறுத்தப்பட்டனர். அங்கிருந்து கிம் இல்-சுங் சதுக்கம் வழியாக அணிவகுப்பு நடத்தத் தயாராக இருந்த இரவு நேர செயற்கை கோள் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

இது குறித்து சில ராணுவ நிபுணர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர். ”நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் இடமான சின்போ சவுத் கப்பல் தளத்தில் ஏற்பட்ட சீற்றத்தை செயற்கைக்கோள் படங்களினூடாக சுட்டிக்காட்டி, வடகொரியா நீருக்கடியில் ஆயுதத்தை சோதிக்க தயாராகி வருகிறது.”

அணுசக்திமயமாக்கல் குறித்து அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் முறிந்துவிட்ட சூழ்நிலையில், நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தனது தீவிரத்தன்மையை வெளிக்காட்ட வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த அணிவகுப்பை நிகழ்ச்சியை பயன்படுத்தலாம் என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். எனவேதான் இந்த நிகழ்வை அமெரிக்க ஊடகங்கள் மிகவும் பரபரப்பாக வெளியிட்டு வருகின்றன.
இந்த ஆண்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக சீன அதிபர் ஜின்பிங், ”வட கொரியாவுடனான உறவுகளை பாதுகாக்கவும், ஒருங்கிணைக்கவும், வளர்க்கவும்” விரும்புவதாகக் செய்தி வெளியிட்டுள்ளார். எனவே இது வடகிழக்கு ஆசியாவின் ராணுவ யுக்தி நகர்வுகளின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.