ப.சுப்பராயன்

தேவதாசி முறையை ஒழித்து சட்டமியற்றிய ப.சுப்பராயன்

ப.சுப்பராயன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்பு பதிவு

இன்றைய நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரமங்கலத்திற்கு அருகில் உள்ள போக்கம்பாளையத்தில் பரமசிவம் – பாவாயி தம்பதியருக்கு மகனாக 1889 செப்டம்பர் 10 அன்று பிறந்தார் ப.சுப்பராயன். இவரின் குடும்பம் குமாரமங்கலத்தின் ஜாமீன்தாரர் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், அயர்லாந்து டப்ளின் பல்கலைக்கழகத்தில் சட்டப் பயிற்சி பட்டமும் படித்தார். 1918-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

அவர் தன்னோடு படித்த ராதாபாயை திருமணம் செய்து கொண்டார். இந்திய பொதுவுடைமைக் கட்சியில் இருந்து நான்கு முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதி கிருஷ்ணன் இவரது மகளாவார். மேலும் பொதுவுடைமை இயக்கத்தில் இருந்து பின்னர் காங்கிரசில் இணைந்து இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரிய அமைச்சராக இருந்த மோகன் குமாரமங்கலம் இவரது மகன் ஆவார். மேலும் கோபால் குமாரமங்கலம், பரமசிவ பிரபாகர் குமாரமங்கலம் என இவருக்கு மூன்று மகன்கள்.

நிலச்சுவான்தார்களின் சார்பாக சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு 1922-ம் ஆண்டு சுப்பராயன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பார்ப்பனர் அல்லாதார் அரசியலில் ஈடுபாடு கொண்ட இவரது அரசியல் செயல்பாடு நீதிக்கட்சியை ஆதரித்தும், எதிர்த்தும் இருந்தது. 

நீதிக்கட்சி ஆதரவில் பதவியேற்ற சுப்பராயன்

1926-ம் ஆண்டு தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்து, சுயராஜ்ஜிய கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டு, சுயேச்சை அமைச்சரவை பதவி ஏற்றபோது சுப்பராயன் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். சுயாராஜ்ஜிய கட்சி  இவருக்கான ஆதரவை விலக்கிக் கொண்டபோது, நீதிக்கட்சியின் ஆதரவில் சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவை வரலாற்றில் மிக முக்கியமான சாதனைகளை நிகழ்த்தியது.

சட்டசபைக்கு முதல் பெண் உறுப்பினர்

சென்னை மாகாண சட்டசபைக்கு முதன்முதலாக தேர்தல் மூலமாகவோ, நியமனம் மூலமாகவோ பெண் ஒருவரை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கும் முடிவும் எடுக்கப்பட்டது. மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியை முதல் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக நியமித்த பெருமை சுப்பராயன் தலைமையிலான அரசுக்கு உண்டு. அதே முத்துலட்சுமி ரெட்டி 25.1.1927 அன்று துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்து சமய அறநிலையத் துறை பாதுகாப்பு சட்டம்

இந்து சமய கோயில்கள் வரைமுறையற்று உயர் சாதிக் குழுக்களாலும், நிலப்பிரபுக்களாலும் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சூழலை மாற்றி, அனைத்து தரப்பு மக்களுக்குமான இடங்களாக கோயில்களை மாற்றி, அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதற்காக ’அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம்’ நீதிக்கட்சியின் பனகல் அரசர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அது பல்வேறு எதிர்ப்புகளின் காரணமாக நடைமுறைப்படுத்த முடியாமல் நிலுவையில் இருந்தது. வைசிராயின் ஒப்புதலைப் பெற்று அந்த சட்டத்தினை 1927 ஜனவரி 24 அன்று நடைமுறைப்படுத்தியது சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவையே.

இட ஒதுக்கீடு ஆணை

கம்யூனல் ஜி.ஓ என்று சொல்லப்படக் கூடிய வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை, இவரது தலைமையிலான அமைச்சரவை தான் நடைமுறைப்படுத்தியது.

சுப்பராயன் ஆட்சிக் காலத்தில்தான் கோயில்களில் பின்பற்றப்பட்டு வந்த தேவதாசி முறையை ஒழிப்பதற்கு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தவர் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி.சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பார்ப்பனரல்லாத மாணவர்களை சேர்ப்பதற்கான உத்தரவு பிறப்பித்ததும் சுப்பராயன் அமைச்சரவை தான்.

சூத்திர பட்டம் நீக்கம்

அரசாங்கத்தின் பதிவேடுகளில் ‘சூத்திரன்’ என்ற இழி பட்டத்தை நீக்குகிற பணியையும், சுப்பராயன் தலைமையிலான அமைச்சவரவை செய்தது.

ஆதி திராவிடர் கோயில் நுழைவு மசோதா

அரசுத் தலைமையில் இருந்து மட்டுமல்ல, நீதிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் எதிர்க் கட்சி வரிசையில் இருந்த டாக்டர் சுப்பராயன் 2.11.32 அன்று ஆதி திராவிடர்கள் கோயில் நுழைவு மசோதா ஒன்றை கொண்டு வந்தார். அந்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்வதற்கு முன்பே, பெரியார்அதை ஆதரித்து “குடி அரசு” பத்திரிக்கையில் ஒரு தலையங்கம் எழுதினார். அதில் நீதிக் கட்சியினரையும் அம்மசோதாவை ஆதரிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

நீதிக் கட்சியின் சார்பில் டாக்டர் நடேச முதலியார் அந்த மசோதாவினை ஆதரித்துப் பேசினார். இரட்டைமலை சீனிவாசன், என்.சிவராஜ் ஆகியோர் பேசிய பின்பு அந்த மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மசோதாவை ஆதரித்து 56 பேர் வாக்களித்தனர். 19 பேர் நடுநிலையாக இருந்தனர். எதிர்ப்பே இன்றி தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

ராஜாஜியின் அமைச்சரவையில் கல்வியமைச்சராக இருந்தவர் சுப்பராயன். காங்கிரஸ் முன்னெடுத்த ’வெள்ளையனே வெளியேறு’ உள்ளிட்ட போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் இந்தியாவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நேருவின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், இந்தோனேசியவிற்கான இந்தியத் தூதராகவும், மகாராஷ்டிர மாநில ஆளுநராகவும், காங்கிரசின் முக்கிய தலைவாரகவும் என பல பதவிகளை வகித்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக பதவியில் இருந்தபோதே 1962-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மரணம் அடைந்தார். பல பொறுப்புகளை வகித்திருந்தாலும் அவர் நீதிக் கட்சி ஆதரவில் முதல்வராக இருந்தபோது நிகழ்த்திய பெண் உரிமை, சமூக நீதி உள்ளிட்ட களங்களின் பங்களிப்பு மட்டுமே அவரது வரலாற்றுப் பெருமையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *