ஜி.எஸ்.டி இழப்பீடு

ஜி.எஸ்.டி இழப்பீடு – மாநிலங்களின் தலையில் கடனை திணிக்கும் ஒன்றிய அரசு

இந்தியாவில் மாநில அரசுகள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஒரு பக்கம் கொரோனா தொற்று காரணமாக முடங்கிப்போன பொருளாதாரம். மறுபக்கம் மாநில அரசுகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரியில் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய உரிய இழப்பீட்டு பங்கினை அளிக்காமல் இழுத்தடிக்கும் ஒன்றிய அரசு. கடந்த காலங்களில் மாநில அரசுகள் நெருக்கடியான காலகட்டங்களை சமாளிப்பதற்கு தனது கஜானாவில் இருக்கும் நிதியை உடனடியாக பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் ஜி.எஸ்.டி அறிமுகமான பிறகு இதுபோன்ற உடனடித் தேவைகள் கிடப்பில் போடப்படுவது வாடிக்கையாகிவிட்டது. 

ஜி.எஸ்.டி இழப்பீடு என்பது என்ன?

மாநில அரசுகளின் வரிவிதிப்பு அதிகாரத்தினை தடுத்து “ஒரு தேசம் ஒரு வரி” என்ற பெயரில் அனைத்து வரி வருமானத்தையும் டெல்லியை நோக்கி மையப்படுத்தும் வேலை ஜி.எஸ்.டி முறையினால் மேற்கொள்ளப்பட்டது. 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, பெரும்பாலான வரி வருமானத்தினை ஒன்றிய அரசு எடுத்துக் கொள்வதால் மாநிலங்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட ஆண்டிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிற்கான இழப்பீட்டினை ஒன்றிய அரசு அளிப்பதாக ஒப்புதல் அளித்ததன் பேரில்தான் நிர்பந்தத்தின் காரணமாக மாநில அரசுகள் ஜி.எஸ்,டி வரிவிதிப்பு முறையினை ஏற்றன. 

2020-21 நிதி ஆண்டில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிதி என்பது கிட்டத்தட்ட 3 லட்சம் கோடியாகும். அதில் செஸ் (CESS) மூலமாக வசூலிக்க திட்டமிட்டுள்ள பணம் 65,000 கோடி. மீதி 2.35 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறையாக இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் அந்த பணத்தினை மாநிலங்களுக்கு கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்து விட்டது. 

கொடுக்க முடியாது என கைவிரித்த நிர்மலா சீத்தாராமன்

கடவுளின் செயலால் பொருளாதாரம் வீழ்ந்திருப்பதாகக் கூறி, அதனால் இந்த இழப்பீட்டு பணத்தினை அளிக்கும் நிலை இல்லை என்று சொல்லி விட்டார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். மேலும் அவர் நிதித் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மாநில அரசுகள், திறந்த சந்தையிலோ (open market) அல்லது ரிசர்வ் வங்கியிடமோ கடன் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். 

ஏற்கனவே வருவாய் பற்றாக்குறையால் கடனில் உள்ள மாநில அரசுகளை நோக்கி இப்படி சொல்வது, மாநில அரசுகளின் எதிர்கால நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கும். ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு அளிக்கும் இந்த இழப்பீட்டுத் தொகை என்பது மாநிலங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட, மாநிலங்களுக்கு உரிமைப்பட்ட பணமாகும். அதை ஒன்றிய அரசுதான் கொடுத்தாக வேண்டும். பணப் பற்றாக்குறை இருக்கிறதென்றால் கடன் பெற்றோ அல்லது வேறு வழிகளில் நிதி திரட்டியோ மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கே இருக்கிறது. அதை செய்யாமல் மாநில அரசுகளையே கடன் பெற சொல்வது எந்த வகையிலும் நியாயமற்றதாகும்.

மாநிலங்களின் எதிர்ப்பு

பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகள் அனைத்தும், ஒன்றிய அரசுதான் கடன் வாங்கி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும், கடன் பெறும் பொறுப்பை மாநில அரசுகளின் தலையில் சுமத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளன. 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீட்டை மறுப்பது நாட்டின் கூட்டாட்சி கொள்கையின் மீதான அடி என்று தெரிவித்துள்ளார். மேலும் மாநிலங்களுக்கு இந்திய அரசின் மீது இருக்கும் நம்பிக்கையை இழக்கவைக்கும் செயலாக இருப்பதாகவும், மாநிலங்கள் மீதான தார்மீக பொறுப்பினை ஒன்றிய அரசு மீறுவதாகவும் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி முறையின் காரணமாக மாநில அரசுகள் தங்களுடைய 70% சதவீத வரிவிதிக்கும் உரிமைகளை விட்டுக் கொடுத்திருக்கின்றன. எனவே இந்த பற்றாக்குறையை சமாளிக்க ஒன்றிய அரசுதான் கடன் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

கேரளா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களும், டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களும் ஒன்றிய அரசுதான் கடன் பெற வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்துள்ளன.  

பொருளாதார அறிஞர் வெங்கடேஷ் ஆத்ரேயா இது குறித்து தெரிவிகையில், ஒன்றிய அரசு மாநிலங்களை திறந்த சந்தையில் கடன் வாங்க சொல்வது தர்க்கத்தினை மீறிய செயலாகும். ஒன்றிய அரசு ஒரு வட்டிக் கடைக்காரரைப் போல நடந்து கொள்கிறது. இது இறையாண்மை உத்தரவாதத்தினை மீறும், அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான செயலாகும். பொருளாதாரம் சீரழிந்தது கடவுளின் செயலால் அல்ல, மோடி அரசின் மோசமான கொள்கைகளால்தான் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் நிலை 

தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 101-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டதையும், ஜி.எஸ்.டி (மாநிலங்களுக்கான இழப்பீடு) சட்டம் 2017-ஐயும் குறிப்பிட்டுக் காட்டி நிதி திரட்டித் தரும்படி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஜி.எஸ்.டி  நிலுவைத் தொகையை முழுமையாக நடப்பு ஆண்டுக்குள் கொடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.

தமிழ்நாட்டின் வருமான பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. 2020-21 நிதிநிலை அறிக்கையின்படி, நிலுவைக் கடன் 4,56,660.99 கோடியைத் தாண்டும் என்று மாநில நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஒன்றிய அரசு நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி வருமானத்தை கொடுக்க வேண்டும். இது தமிழ்நாடு அரசின் உரிமை. அத்தோடு ஒன்றிய அரசின் கடமையும் கூட. 

தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரை அடித்தள நிதியாதாரமாக விளங்கிய டாஸ்மாக் மற்றும் பெட்ரோல், டீசல் வருவாய் ஆகியவை. கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த 6 மாதங்களாக சரிந்துள்ளது. எனவே ஜி.எஸ்.டி வரி இழப்பீடு வருவாய்தான் இறுதியானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒன்றிய அரசு முறையாக ஜி.எஸ்.டி இழப்பீட்டினை கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு அரசு பெரும் நெருக்கடியை சந்திக்கும். 

கொரோனா தொற்றால் மாநில அரசுகள் கூடுதல் செலவுகளை செய்து வருகிறது. கொரோனா தொற்றுக்குப் பிறகு 7000 கோடிக்கும் அதிகமாக பொது சுகாதாரத்தில் தமிழ்நாடு அரசு முதலீடு செய்துள்ளது. PM CARE பிரதமர் பராமரிப்பு நிதியில் இருந்து மாநில அரசுகளுக்கு நிதி ஒதுக்க வைத்த கோரிக்கையையும் செவிமடுக்காமல் இருக்கிறது ஒன்றிய அரசு. 

மாநிலங்களை பலிகொடுத்த கொள்கை

பாஜக அரசு ஏற்படுத்திய கட்டமைப்பு மாற்றங்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை பின்னுக்கு தள்ளியுள்ளது. கொரோனா காலத்திற்கு முன்பிருந்தே குறிப்பாக பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி நடைமுறையால் முறைசாரா தொழில்களும், சிறு குறு வணிகமும் சரிவை சந்தித்தது. மாநில அரசுகளின் வருமானத்தின் பெரும் பகுதியையும் ஜி.எஸ்.டி முறையைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டது. அடிப்படையில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையே கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான ஒன்றே. தற்போது ஒன்றிய அரசின் பொருளாதார ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும், தவறுகளுக்கும் மாநிலங்களின் பொருளாதாரமும் பலியாகி வருகிறது. மாநில அரசுகளின் வருமானத்தை மாநிலங்களே முறைப்படுத்தி வாங்கி பயன்படுத்த அதிகாரம் இல்லாத கட்டமைப்புதான கூட்டுறவு கூட்டாட்சியா?

மாநில அரசுகள் கடிதம் எழுதுவதும் மன்றாடுவதும் தினசரி செய்தியாகி விட்டது. இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயகத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் கட்சி அனைத்து மாநில அரசிலும் செல்வாக்கு பெற்றிருக்க வேண்டிய தேவையில்லை. இன்றைய நிலையில் பாஜக மத்தியில் ஆட்சியதிகாரத்தில் இருக்கிறது. ஆனால் பல மாநிலங்களில் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சியில் இருக்கின்றன. குறிப்பாக தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர்த்து மகாராஷ்டிரா துவங்கி தமிழ்நாடு வரை பிராந்திய கட்சிகள்தான் ஆட்சியில் இருக்கிறது. அதில் பாஜகவிற்கு பெரும் செல்வாக்கு கிடையாது. மாநில கட்சிகளின் வளர்ச்சியைத் தடுத்து அவற்றின் செல்வாக்கை சுருக்குவதற்காக, நெருக்கடியான காலகட்டத்திலும்கூட மாநிலங்களுக்கு உரிமைப்பட்ட நிதியாதாரத்தை தராமல் இழுத்தடித்து வருவது வாடிக்கையாகி விட்டது. 

இந்தியாவின் வரி வருமானத்தில் அதிக பங்களிப்பு செய்யும் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களுக்கு உரிய பங்கினை தர மறுக்கிறது இந்திய ஒன்றிய அரசு. ஆனால்  பாஜக ஆட்சியில் இருக்கும் வடஇந்திய மாநிலங்களுக்கு உடனடியாக நிதியை ஒதுக்கி, தனது கட்சியின் செல்வாக்கை பாதுகாத்துக் கொள்கிறது. இந்த போக்கு இந்திய கூட்டாட்சி தத்துவத்தினை நொறுக்குவதாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *