வ.சுப.மாணிக்கனார்

தமிழ் இமயம் என்று தமிழறிஞர்களால் போற்றப்பட்ட வ.சுப.மாணிக்கனார்

வ.சுப.மாணிக்கனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

வ.சுப.மாணிக்கம் இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலைச்சிவபுரியில் வ.சுப்பிரமணியன் செட்டியார் – தெய்வானை ஆகியோருக்கு ஐந்தாவது மகனாக 1917-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதியன்று பிறந்தார்.

இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் அண்ணாமலை என்பதாகும். ஆனாலும் மாணிக்கம் என்ற புனைப்பெயரையே எல்லொரும் அழைத்ததால் அந்த பெயரே நிலைத்து விட்டது.

தாத்தா பாட்டிகளால் வளர்க்கப்பட்டார்

தன்னுடைய ஆறாம் வயதில் தாயை இழந்தார். தொடர்ந்து பத்து மாதம் கழித்து தந்தையும் இறந்தார். அதனால் தாய்வழி தாத்தா பாட்டிகளால் மாணிக்கனார்  வளர்ந்தார். தன் தொடக்கக் கல்வியினை ஏழாம் வயது வரை புதுக்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் பயின்றார்.

பொட்டியடி பையனாக ரங்கூனுக்கு சென்றார்

அதன்பின் பர்மாவில் உள்ள ரங்கூனுக்கு வட்டிக்கடைக்கு பொட்டியடி பையனாக சென்றார். இவரது நேர்மையான குணம் மற்றும் பொய் சொல்லா மனம் காரணமாக வட்டிக்கடையில் தொடர்ந்து வேலை செய்ய முடியாத நிலையில்  பர்மாவிலிருந்து  மீண்டும் ஊருக்கே திரும்பினார்.

தமிழ் நூல்களை ஆழ்ந்து படித்தார்

ஊருக்கு வந்தபின் வ.சுப.மாணிக்ககம், தமிழ் நூல்களை ஆழமாய் படிக்கத் துவங்கினார். அந்த காலகட்டத்தில் பண்டிதமணி மு.கதிரேச செட்டியார் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. கூடவே தமிழ் மொழியின் மீது மிகுந்த நாட்டமும் ஏற்பட்டது. 

கல்விப் பட்டங்கள்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வித்துவான் வகுப்பில் சேர்ந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து விடா முயற்சியுடன் பயின்று 1945-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஒ.எல் பட்டத்தையும் 1951-ம் ஆண்டு எம்.ஏ முதுகலை பட்டத்தையும் பெற்றார்.

இவருடைய தமிழ் ஆய்வுக்கான எம்.ஒ.எல் பட்டம் “தமிழில் வினைச்சொற்கள்” என்ற பொருளில் இவர் மேற்கொண்ட ஆய்வுக்காகவும், முனைவர் பட்டம் “தமிழில் அகத்திணைக் கொள்கை” என்னும் பொருளில் இவர் நடத்திய சங்க இலக்கிய ஆய்வுக்காகவும் அளிக்கப்பட்டன.

விரிவுரையாளர் பணி

1941-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தவர், 1948-ம் ஆண்டுவரை அங்கு பணியில் இருந்தார். திராவிட இயக்கத்தின் முன்னணி தலைவர்களாக இருந்த நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டவர்கள் மாணிக்கனாரின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1948-ம் ஆண்டு காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியில் சேர்ந்தவர், 1964 வரை அந்த பதவியில் இருந்தார்.

1964-ம் ஆண்டு அழகப்பா கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்று, 1970-ம் ஆண்டு வரை பணியாற்றினார்.

பல்கலைக்கழகப் பணிகள்

1970-ம் ஆண்டு தொடங்கி 1977 வரை ஏழு ஆண்டுகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது, இந்திய மொழிப்புல முதன்மையாளர் பொறுப்பில் இருந்து பணியாற்றி இருக்கிறார்.

1979 முதல் 1982 வரை மூன்று ஆண்டுகள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகச் பொறுப்பேற்று திறம்படப் பணியாற்றினார்.

அண்ணா, கருணாநிதி ஆகியோர் அமர்ந்திருக்கும் மேடையில் உரையாற்றும் வ.சுப.மாணிக்கனார்
அண்ணா, கருணாநிதி ஆகியோர் அமர்ந்திருக்கும் மேடையில் உரையாற்றும் வ.சுப.மாணிக்கனார்

இங்கு தமிழ் மொழியின் வளர்ச்சி மற்றும் அறிவியல் துறை வளர்ச்சிக்கான இவரின் பணியை அப்போதைய தமிழக அரசு பெரிதும் பாராட்டியுள்ளது.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற வ.சுப.மாணிக்கனார், கேரள மாநிலம் திருவனந்தபுரம் கல்லூரியில் திராவிட மொழியியல் கழகத்தின் முதுபேராய்வளாளராக இருந்து சிறப்பு வாய்ந்த இருநூல்களை ஆங்கிலத்தில் எழுதினார்.

அவ்விரு நூல்களுள் ஒன்று ‘தமிழ் யாப்பில் வரலாறும் வளர்ச்சி. மற்றொன்று தொல்காப்பிய ஆய்வு!’

குன்றக்குடி அடிகளாருடன் வ.சுப.மாணிக்கனார்
குன்றக்குடி அடிகளாருடன் வ.சுப.மாணிக்கனார்

எழுதிய நூல்கள்

பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் அவர்கள் பல்வேறு நூல்கள் எழுதி இருக்கிறார். அவற்றுள் குறிப்பிடத்தக்க சில நூல்கள் வருமாறு:

மனைவியின் உரிமை, கொடைவிளக்கு, இரட்டைக் காப்பியங்கள், நகரத்தார் அறப்பட்டயங்கள், தமிழ்க்காதல், நெல்லிக்கனி, தலைவர்களுக்கு, உப்பங்கழி, ஒருநொடியில்,மாமலர்கள்,வள்ளுவம்,ஒப்பியல்நோக்கு, தொல்காப்பியக்கடல், சங்கநெறி, திருக்குறட்சுடர், காப்பியப் பார்வை, இலக்கியச்சாறு, கம்பர், தமிழ்வழிக் கல்வி இயக்கம்: மொழியறிக்கை.

இவர் எழுதிய ஆங்கில நூல்கள்

The Tamil Concept of Love

A Study of Tamil Verbs

Collected Papers

Tamilology

வகித்த பொறுப்புகள்

தமிழ் சொல்லாக்கங்களை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் முனைப்பு காட்டியவர். தமிழ்வழிக் கல்வி இயக்கம் என்ற அமைப்பை நிறுவி இவ்வியக்கம் நன்கு பரவும் வழி காண தமிழ்ச் சுற்றுலா மேற்கொண்டார்.

தமிழகப் புலவர் குழுத் தலைவர்

பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தலைவர்

தமிழ்வழிக் கல்வி இயக்கம்

தமிழ்ப்பல்கலைக்கழக வடிவமைப்புக் குழுத்தலைவர்

தமிழ்ப்பல்கலைத் “தொல்காப்பியத் தகைஞர்  ஆகிய  சிறப்பு பதவிகளில் பங்கெடுத்து தமிழ் தொண்டாற்றினார்.

பெற்ற பட்டங்கள்

சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி வழங்கிய செம்மல் என்ற பட்டம்

குன்றக்குடி ஆதீனம் அவர்கள் வழங்கிய முதுபெரும் புலவர் பட்டம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தம் பொன்விழாவின் போது வழங்கிய டி.லிட் பட்டம் ,தமிழ்நாடு அரசு வழங்கிய திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும், கவுரவப் பட்டங்களையும் பெற்றவர்.

வ.சுப.மாணிக்கம் அவர்கள், மாரடைப்பின் காரணமாக 1989-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி இரவு 11 மணிக்கு புதுச்சேரியில் காலமானார். அவரது மறைவிற்குப் பிறகு தமிழ்நாடு அரசு அவருடைய எழுத்துகளை அரசுடமையாக்கியது.

தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்து பல நிலையினும் சிறந்தோங்கி தமிழ் பணிக்காகவே வாழ்ந்த மூதறிஞர் வ.சு.மாணிக்கனார். தமிழின் சிறப்புக்களைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் தமிழ் இமயம் என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் வ.சுப.மாணிக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *