நடிகர் விவேக் மரணம்

நடிகர் விவேக் மரணம்: மரங்களும் துக்கம் அனுசரிக்கின்றன – அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல்

தமிழ் நகைச்சுவை நடிகரான விவேக் (59) இன்று காலை உயிர்நீத்துள்ளார். நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள SIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

நேற்று முன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியினை நடிகர் போட்டுக் கொண்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார். தடுப்பூசி தொடர்பாக மக்களிடையே பல வதந்திகள் உலவுவதாகவும், மக்களிடம் இருக்கும் அச்சத்தைப் போக்கி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக விவேக் ஊடகங்களிடம் தெரிவித்தார். 

நடிகர் விவேக் – File Photo

தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த செய்தி

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், ஓமந்தூரார் மருத்துவமனை டீன் ஜெயந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து விவேக் பதிவிட்ட ட்வீட்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு நடிகர் விவேக் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி

விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் தொடர்பிருக்க முடியாது என்று மருத்துவமனை அறிக்கை அளித்துள்ளது. இருந்தபோதிலும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாளே விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளதால் தடுப்பூசி குறித்தான அச்சமும் பெருமளவில் பரவியிருக்கிறது. 

விவேக் மரணம் குறித்து விளக்கமளித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவரது மரணம் அதிர்ச்சியாக இருப்பதாகவும், தடுப்பூசி போட்டதற்கும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் தொடர்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தடுப்பூசி குறித்த சந்தேகங்களும், சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் இன்னும் விரவிக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு முறையான பதில் அளித்து மக்களிடையே உரையாட வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு அரசுக்கு வந்திருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை. 

நடிகர் விவேக்கின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. 

நடிகர் விவேக்கின் உடல்

நடிகர் விவேக் வாழ்க்கை

நடிகர் விவேக் 1961-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி கோவில்பட்டி அருகே உள்ள பெருங்காட்டூரில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் விவேகானந்தன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.காம் வரை படித்தவர். பின்னர் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வின் மூலம் தலைமைச் செயலகத்தின் ஜூனியர் உதவியாளராகப் பணிபுரிந்தார். 

திரைப்படத்தில் தவிர்க்க முடியாதவராய் உருப்பெற்றது

நாடங்களில் நடித்துவந்த இவர், 1987-ம் ஆண்டு வெளியான இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய ’மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்து ஒரு காலக்கட்டத்தில் நகைச்சுவையில் தவிர்க்க முடியாத கலைஞராக திகழ்ந்தவர். 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.  

மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தில் நடிகர் விவேக்

திரைப்படங்களில் தனது நகைச்சுவை காட்சிகளில் மூட நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களைப் பேசுவதனை தனது பாணியாக வைத்திருந்தார். ”உங்களையெல்லாம் நூறு பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா” எனும் அவரின் வசனம் தமிழ்நாட்டின் கிளாசிக் கிண்டல் வசனங்களில் ஒன்றாக இன்றும் இருக்கிறது. 

தமிழக அரசின் கலைவாணர் விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். 

மரம் நடுதல் போன்ற பணிகளிலும் ஆர்வம் காட்டினார். மேலும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுடன் நெருக்கமான ஈடுபாடு கொண்டிருந்தார். 

நடிகர் விவேக் மரணத்திற்கு தமிழக அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

நடிகர் விவேக் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் என்றும், சுற்றுச்சூழல், மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை, கொரோனா விழிப்புணர்வு போன்றவற்றில் ஈடுபட்டு இளைஞர்ளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் சூர்யா

கவிஞர் வைரமுத்து

அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே!
எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன்
அழவைத்துவிட்டுப் போய்விட்டானே!

திரையில் இனி பகுத்தறிவுக்குப்
பஞ்சம் வந்துவிடுமே!

மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!
நீ நட்ட மரங்களும் உனக்காக
துக்கம் அனுசரிக்கின்றன.

கலைச் சரித்திரம் சொல்லும் :
நீ ‘காமெடி’க்  கதாநாயகன்.

என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *