சென்னை நீர்மட்டம்

காலை செய்தித் தொகுப்பு: சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, வீட்டுக் கதவுகளில் கொரோனா பேனர் ஒட்டத் தடை உள்ளிட்ட 10 செய்திகள்

1) தொடர் மழையால் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு 

திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்ப்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, ஆலந்தூர், வளசரவாக்கம், கோடம்பாக்கம், பெருங்குடி, அடையார், சோழிங்கநல்லூர் ஆகிய 15 மண்டலங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் ‘கிடுகிடு’வென உயர்ந்து இருப்பதை புள்ளி விவரங்களுடன் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, கடந்த அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக திரு.வி.க.நகர் மண்டலத்தில் 2.66 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருப்பது புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூரில் 0.54 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருக்கிறது.

ஏற்கனவே சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று கூறி வரும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள், தற்போது சென்னையின் 15 மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து இருப்பதால் வீடுகளில் ஆழ்துளையிட்டு அத்தியாவசிய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் தண்ணீருக்கும் தட்டுப்பாடு இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிவிக்கின்றனர்.

2) சாலை ஓரத்தில் கொட்டப்படும் கழிவுகள்

கரூர் மாவட்டம் கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்துறையில் இருந்து தவிட்டுபாளையம் செல்லும் சாலையோரத்தில் ஏராளமான உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், முட்டை ஓடுகள், கோழி கழிவுகள், பல்வேறு வகையான அழுகிய பொருட்கள் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது. உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3) குடிசைகள் வெளியேற்றம்

சென்னை தீவுத்திடல் அருகே காந்திநகர் குடிசைவாழ் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அதிகாலையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூவம் ஆற்றில் இறங்கி கழுத்தளவு நீரில் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மக்களை வெளியேற்றுவதற்கு இயக்குனர் பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருக்கின்றனர்.

4) கொரோனா நோட்டிஸ் ஒட்டத் தடை

கொரோனா பாதித்தவர்களின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் வீட்டில், எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில் ‘கொரோனா நோயாளிகளின் வீடுகளுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டுவது அவர்களின் அந்தரங்கம், வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு எதிரானது. இதற்கு தடை விதிக்க வேண்டும்,’ என கூறப்பட்டது.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, “கொரோனா பாதித்தவர்களின் வீடுகளின் வெளியே நோட்டீஸ் ஒட்டும்படி மத்திய அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை,’ என கூறியது.

வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷன் அமர்வு நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் “கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது. அதற்கான அவசியம் கிடையாது. ஒருவேளை வீட்டின் உரிமையாளர் விருப்பப்பட்டால் அதனை ஒட்டுவதற்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. இதில் தன்னிச்சையாக அரசுகள் தரப்பில் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என தீர்ப்பளித்தனர்.

5) வெளிமாநிலத்தவர் பெயரில் ஊழல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பி.எம் கிசான் திட்டத்தில் முறைகேடாக இணைந்து பணம் பெற்றவர்களிடமிருந்து பணத்தை உடனடியாக வசூலிக்க வேண்டும் என்று கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் பணம் வசூலிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். அதில் ரூ.1.34 கோடி அரசுப்பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 450 பேரின் வங்கிக் கணக்குகளில் ரூ.10 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை மீண்டும் வசூலித்துத் தர 4 மாநிலங்களில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

6) தமிழகத்தில் கொரோனா

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 10,491 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1315 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடுதிரும்பினர்.

நேற்று மரணமடைந்தவர்கள் 14 பேர் ஆவர்.

7) சிந்து சமவெளி நாகரிகத்தில் கால்நடை இறைச்சி

சிந்து சமவெளி நாகரிக தளங்களில் சுமார் 4,600 ஆண்டுகளுக்கு முந்தைய பீங்கான் பாத்திரங்களில் கால்நடைகள் மற்றும் எருமை இறைச்சி உள்ளிட்ட விலங்குப் பொருட்கள் இருப்பதை ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் இணைந்து செயல்படும் கூட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக புதன்கிழமை தொல்பொருள் அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, பண்டைய இடங்களில் காணப்படும் மட்பாண்டங்களில் உள்ள எச்சங்களை ஆய்வு செய்தது.

சிந்து சமவெளி தளங்களில் காணப்படும் உள்நாட்டு விலங்கு எலும்புகளில் சுமார் 50-60% கால்நடைகள் எருமைகளிலிருந்து வந்தவை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

8) குடியரசுத் தலைவரிடம் எதிர்கட்சிகள் மனு

விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர். 

9) கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு நடக்கிறது. 451 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 8,116 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

இந்த 5 மாவட்டங்களில் 47,28,489 ஆண் வாக்காளர்கள், 51,28,361 பெண் வாக்காளர்கள், 93 திருநங்கைகள் உள்பட மொத்தம் 98,57,208 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்கள். இதில் 57,895 பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

10) VJ சித்ரா மரணம்

மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகத் தொடங்கி பின்னர் பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகப் பணியாற்றி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் சீரியலில் ‘முல்லை’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா நேற்று பூந்தமல்லி அருகே உள்ள தனியார் விடுதியில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. அவரது மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *