கர்ணன் விமர்சனம்

கர்ணன் விமர்சனம் – வளரும் முற்போக்கு தமிழ் சினிமா மரபின் பெரும் நம்பிக்கை மாரி செல்வராஜ்

பேச்சி ரோட்டில் வலிப்பு வந்து இறந்து கிடக்கிறாள். காப்பாற்ற நாதி இல்லை; நிற்க பேருந்துகாரர்களுக்கு மனமில்லை; தன் மகளின் படிப்பு விஷயமாக பக்கத்து கிராமத்திலிருக்கும் பேருந்து நிலையத்திற்கு வரும் மகள் பாலியல் கேலிக்குள்ளாகிறாள். தட்டிக்கேட்கும் அப்பா எட்டி உதைக்கப்படுகிறார்.

இப்படி திருநெல்வேலி மாவட்டம் பொடியன்குளம் என்ற குக்கிராமத்தில் வசிக்கும் உழைக்கும் விவசாயக் குடிகள் அரசு மற்றும் சுற்றியுள்ள பக்கத்து ஊர்க்காரர்களால் சாதிய மேலாதிக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு, அடிப்படை பேருந்து வசதி கூட மறுக்கப்பட்டு அல்லலுறுகின்றனர்.

கிராமத்திலிருந்து சி.ஆர்.பி.எஃப் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் கர்ணன் (தனுஷ்) இளங்கன்று பயமறியாது என்பதற்கேற்ப துடிப்பான இளைஞனாய் ஏமராஜா (லால்) உதவியோடு சொந்த கிராமத்தாரால் செய்யமுடியாத கடவுள் கொடையான மீனை துண்டாய் வெட்டி ஊர் வாளாய் சூடிக்கொள்கிறான்.

வாளுடன் கர்ணன்
வாளுடன் கர்ணன்

நிற்காத பேருந்தை நிற்க வைக்க முயல்வது, பாலியல் சீண்டல் செய்த பக்கத்து ஊர்காரர்களை வெளுத்து வாங்குவது, படிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை எடுத்துரைப்பது, கிராமத்தாரின் இயலாமையை கேள்விக்குட்படுத்துவது என ஊரில் யாருக்குமில்லாத தைரியத்தோடும் சுயமரியாதை உணர்வோடும் வலம்வரும் கர்ணன் பக்கத்து ஊர்க்காரர்களுக்கும் காவல்துறைக்கும் சிம்மசொப்பனமாய் மாறுகிறான்.

ஒரு கட்டத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு நிற்காத பேருந்து அந்த கர்ப்பிணியின் மகனான சிறுவனாலேயே கல் கொண்டு எறியப்படுகிறது. பின்னர் கர்ணன் உள்ளிட்ட மற்ற இளைஞர்கள் பேருந்தை அடித்து நொறுக்க ஊர் இதுவரை இல்லாத பதட்டத்துக்கும் பரபரப்புக்கும் மாறுகிறது. இதுபோன்ற சம்பவத்துக்காக கண்ணில் எண்ணெய்விட்டு காத்துக்கொண்டிருக்கும் காவல்துறையினர் இதைக் காரணமாய் வைத்தே ஊரை சுறையாட முயல்கின்றனர். 

குதிரையில் வாளுடன் கர்ணன்

கர்ணன் தடுத்து ஊரைக் காப்பாற்றினானா இல்லையா? பேருந்து ஊரில் நின்றதா? என்ற புள்ளிகளோடு 1995 கொடியன்குளம் கலவரத்தின் குறிப்புகளையும் அனுபவங்களையும் மையமாய் வைத்து எளிய மக்களின் நாட்டார் தெய்வ நம்பிக்கைகளை சமகால பிரச்சனையின் வடிவங்களோடு இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு மிகச்சிறந்த கலைப்படைப்பாக கர்ணன் மிளர்கிறது.

குறியீடுகள்

மீன், குதிரை, யானை, கழுதை, கழுகு, வாள், காட்டுப்பேச்சி, பேருந்து மற்றும் கதாபாத்திர பெயர்கள் என அனைத்திலும் குறியீடுகள் நிரம்பியுள்ளது. குறிப்பாக மஞ்சனத்தி புராணம் மற்றும் விட்றாதீங்க யப்போ பாடல்கள் கதையோடு ஒன்றிப்போக வைக்கிறது.

வழக்கமான தமிழ் சினிமாவின் தனிமனித சாகச வகை திரைக்கதையாகப் பார்த்தாலும், சாதிய முரண்களை காவல்துறை அரச பயங்கரவாதத்துடன் இணைத்துப் பேசியது பாராட்டுக்குரியது.

பாராட்டுக்குரியவர்கள்

கதாநாயகி ரஜிஷா

கதாநாயகன் தனுஷ், நடிகர் லால், நடிகர் ஜி.எம்.குமார், நடிகர் பூ ராம், நடிகர் யோகிபாபு, நடிகர் ஔிப்பதிவாளர் நட்டி, கதாநாயகி ரஜிஷா விஜயன், நடிகை லட்சுமி பிரியா மற்றும் இயக்குனர் மாரிசெல்வராஜின் புளியங்குளம் கிராமத்து மக்கள் என அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற துல்லியமான நடிப்பை வழங்கியுள்ளனர்.

ஏமராஜா (லால்) மற்றும் கர்ணன் (தனுஷ்)

பின்னணி இசையிலும் பாடலிலும் கதைக்கு தேவையான நாட்டுப்புற ஒப்பாரி பாடல் வடிவங்களைப் பயன்படுத்திய சந்தோஷ் நாராயணன் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியவர். தேனி ஈஸ்வர் ஔிப்பதிவில் நிஜ பிம்பத்தை பார்வையாளர்களுக்கு காட்டி உள்ளிழுக்கிறார்.

பரியேறும் பெருமாளில் சாதி தொடர்பான உரையாடலை நிகழ்த்தி, கர்ணனில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக வாள்வீசிய மாரி செல்வராஜ் வளரும் முற்போக்கு தமிழ் சினிமா மரபின் பெரும் நம்பிக்கை.

தனுஷுடன் இயக்குநர் மாரி செல்வராஜ்

விமர்சனம் – குலாம்பாய் பாண்டியன்

(இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் பார்வைகளும் கட்டுரையாளருக்கு சொந்தமானவை – Madras Review)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *