கடந்த சில வருடங்களாக இந்த பூவுலகில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலவியல் மாற்றம் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக கடந்த பிப்ரவரி மாதத்தின் கடைசி வாரத்தில் அண்டார்டிகாவில் நிகழ்ந்திருக்கிற மிகப்பெரிய பனிப்பாறை பிளவைச் சொல்லலாம்.
கன்னியாகுமரி மாவட்ட அளவிற்கான பாறை பிளவுபட்டுள்ளது
ஏறத்தாழ 1,270 சதுர கிலோமீட்டர் அளவில் அண்டார்டிகாவின் பிரண்ட் (Brunt Ice Shelf) பகுதியில் பிளவு ஏற்பட்டிருக்கிறது. (நம் புரிதலுக்காக சொல்வதானால் 1,684 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கன்னியாகுமரி மாவட்டம் அளவிலான பரப்பளவு கொண்ட பனிப்பாறை பிளவுபட்டிருக்கிறது.)
பிரிட்டிஷ் அண்டார்டிகா சர்வே (The British Antarctic Survey -BAS) என்ற புவியியல் ஆராய்ச்சி அமைப்பானது அண்டார்டிக்காவின் ஹாலே (Halley) என்ற இடத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் தொடர்ந்த பனிப்பாறைகள் பிளவுகள் ஏற்படுத்திய பாதிப்பினால் 2017-ம் ஆண்டிலிருந்தே அதன் செயல்கள் மட்டுப்படுத்தப்பட்டு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ஆராய்ச்சி நிறுவனம்தான் இந்த பனிப்பாறை பிளவினைப் பற்றி முதன்முதலில் வெளியுலகிற்கு தெரியப்படுத்தியிருக்கிறது.
150 மீட்டர் தடிமன் கொண்ட பனிப்பாறையாக பிளவு
அண்டார்டிகாவில் அமைந்துள்ள இங்கிலாந்தின் ஆய்வுகூடத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த பிளவு ஏற்பட்டிருக்கிறது. மேலும் நல்வாய்ப்பாக அந்த வேளையில் ஆய்வுகூடத்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்த பனிப்பாறை பிளவு 1,270 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட 150 மீட்டர் தடிமன் கொண்ட பனிப்பாறையாக பிளவுபட்டிருக்கிறது.
தொடர்ந்து கண்காணிக்கப்படும் அண்டார்டிகா பனிப்பாறைகள்
ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன் அண்டார்டிகாவில் அதன் பனிப்பாறைகளில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய விரிசல்கள் கண்டறியப்பட்டன. அப்போது முதல் பிரிட்டிஷ் அண்டார்டிகா சர்வே நிறுவனம் இந்த பிரண்ட் பகுதியை முழுவதுமாக கண்காணிக்கத் துவங்கியது. தங்களுடைய ஜி.பி.எஸ் சாதனங்கள் மூலம் இந்த பகுதியை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த பகுதியில் ஏற்படும் எந்த ஒரு அசைவும் அவர்களுடைய சாதனங்கள் மூலம் கேம்பிரிட்ஜ் (Cambridge) நகரத்தில் அமைத்திருக்கும் தலைமையகத்திற்கு உடனுக்குடன் அனுப்பி கண்காணிக்கப்படுகின்றன.
சென்டினல்-1A செயற்கைக்கோள் படங்கள்
இந்த பனிப்பாறை பிளவு முதலில் பிப்ரவரி 26-ம் தேதி (26/02/2021) கண்டறியப்பட்டது. பின்பு ஐரோப்பாவின் விண்வெளி நிலையத்துடன் தொடர்புகொண்டு அதன் சென்டினல்-1ஏ (Sentinel-1A) செயற்கைகோள் மூலமாக தெளிவான படங்கள் எடுக்கப்பட்டன.
பிளவுகளுக்கான காரணங்கள் கண்டறிவது கடினமாய் உள்ளது
இப்படி திடீரென அண்டார்டிக்காவின் பனிப்பாறைகளில் விரிசல்கள், பிளவுகள் ஏன் ஏற்படுகின்றன, தொடங்குகின்றன என்பதைக் கண்டறிவது கடினம் என்றும், மேலும் இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த பிளவில் “காலநிலை மாற்றம் ஒரு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்றும் பிரிட்டிஷ் ஆராய்ச்சி நிறுவனம் தன்னுடைய செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பல மடங்கு துரிதமாகியிருக்கும் பனி உருகும் வேகம்
இருப்பினும், புவியின் கடல்கள் வெப்பமயமாதல் நிகழ்வு ஒட்டுமொத்தமாக அண்டார்டிகாவின் பனி உருகலை துரிதப்படுத்துகின்றன என்று ஆராய்ச்சி காட்டுகிறது. 1980-களில் அண்டார்டிகா ஆண்டுக்கு 40 பில்லியன் டன் பனியை இழந்தது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் அந்த எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 252 பில்லியன் டன்களாக உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் வாரங்களில் அடுத்தடுத்த மாற்றங்கள் தெரியும்
இங்கிலாந்தின் வேல்ஸில் இருக்கும் ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் (University in Wales) புவியியல் பேராசிரியரான அட்ரியன் லக்மேன் (Adrian Luckman) இந்த பனிப்பாறை பிளவுகளின் போது எடுக்கப்பட்ட படங்களை ஆராய்ந்து “வரவிருக்கும் வாரங்கள் அல்லது மாதங்களில் பிளவுபட்டிருக்கும் இந்த பனிப்பாறை விலகிச் செல்லக்கூடும் அல்லது மீண்டும் பிரண்ட் பனிஅடுக்குகளில் இணையக்கூடும். எப்படியாயிருந்தாலும் அதன் நகர்வுகள் அடுத்து வரவிருக்கும் மாற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கக்கூடும் ” என்று குறிப்பிட்டிருக்கிறார் .