பாவலரேறு பெருஞ்சித்திரனார்

இனம் காக்கும் போராளியாய் வாழ்ந்த பாவலரேறு பெருஞ்சித்திரனார்!

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review

என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் – வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! – வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! – இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்! 
– பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்தபோது அவரையும், தமிழீழ விடுதலை இயக்கத்தையும் ஆதரித்து அவர்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை  தமிழின உரிமைப் போராட்டத்தில் முன்நின்றவர்.

இளமைக் காலம்

அன்றைய சேலம் மாவட்டம் ‘சமுத்திரம்’ என்னும் சிற்றூரில் துரைசாமி, குஞ்சம்மாள் இணையருக்கு 10.03.1933 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் ‘இராச மாணிக்கம்’ என்பதாகும். தம் தந்தையின் பெயரினையும் இணைத்து ‘துரை மாணிக்கம்’ என்று வைத்துக்கொண்டார்.  

பெருஞ்சித்திரனார் மெய்மைப்பித்தன், தாளாளன், அருணமணி, கௌனி ஆகிய பல்வேறு புனைப்பெயர்களில் எழுதியவர். அவற்றுள் ஒன்றே ‘பெருஞ்சித்திரன்’ என்பதாகும். இப்பெயரே காலத்தால் நிலைத்துவிட்டது.

பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் ஆத்தூரிலும் அமைந்தது. இவருக்கு உயர்நிலைப் பள்ளியில் சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கி தமிழறிவும் தமிழ் உணர்வும் புகட்டினர்.

பள்ளிக் காலத்திலேயே கையெழுத்து ஏடு நடத்தினார்

பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழ் ஈடுபாட்டுடன் கற்றவர். ’குழந்தை’ என்னும் பெயரில் கையெழுத்து ஏட்டைத் தொடங்கி மாணவர் பருவத்தில் நடத்தியவர். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் “மலர்க்காடு’ என்னும் கையெழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் கவிதைகளை எழுதினார்.

பாவாணரின் மாணவர்

பெருஞ்சித்திரனார் 1950-ல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்னர், சேலம் நகராட்சிக் கல்லூரியில் பயின்றார். அங்குதான் பாவாணர்  அறிமுகம் கிடைத்தது. பாவாணரின் மாணவராக இருந்து தமிழறிவு பெற்றார்.

மூன்று இதழ்கள்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் மூன்று இதழ்களை நடத்தியுள்ளார். 1952-ல் தென்மொழி என்னும் தனித்தமிழ் திங்களிதழினையும், 1965-ல் தமிழ்ச்சிட்டு எனும் சிறுவர்களுக்கான கலை இதழினையும், 1982-ல் தமிழ்நிலம் உலகத் தமிழின முன்னேற்றக் கழக வார இதழினையும் வெளியிட்டு வந்துள்ளார். தனித்தமிழ் இயக்க இதழியல் வரலாற்றில் ‘தென்மொழி’ குறிப்பிடத்தக்க பங்களிப்பினை செய்துள்ளது.

இந்தி எதிர்ப்பில் தென்மொழி

இந்தி எதிர்ப்புப் பேராட்டத்திற்கு தன்னுடைய ‘தென்மொழி’ இதழினை முழுமையாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். இவர் எழுதிய இந்தி எதிர்ப்புப் பாடல்கள் தமிழ் மக்களிடையே தமிழுணர்வைத் தூண்டி, கிளர்ச்சியை உண்டாக்கியது.

உலகத் தமிழின முன்னேற்றக் கழகம்

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் உலகத் தமிழ்க் கழகத்துடன் இணைந்து பெருஞ்சித்திரனார் செயல்பட்டுள்ளார். 1981-ம் ஆண்டு பாவாணரின் மறைவுக்குப் பிறகு, உலகத் தமிழ்க்கழகம் என்பதினை ‘உலகத் தமிழின முன்னேற்றக் கழகம்’ என மாற்றிப் புதியதாக இயக்கத்தைத் தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக 1982-ம் ஆண்டு ‘தமிழ் நிலம்’ என்ற இதழினைத் தொடங்கினார். இவ்விதழ் ‘தமிழ்நாடு தனிநாடாக வேண்டும்’ என்ற கொள்கையை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டுள்ளது.

சாதியை வெறுத்த தமிழறிஞர்

பெருஞ்சித்திரனார் சாதியை வெறுக்கும் தமிழறிஞராக இறுதிவரை வாழ்ந்தார். அவரது சாதி எதிர்ப்புக் கருத்தியல் தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும், எளிய அடித்தட்டு சாதியினரின் பால் மிகுந்த கரிசனம் கொண்டதாகவும் விளங்கியது. எம்மதங்களைத் தழுவினாலும் தமிழர் இனத்தால் தமிழரே என்பதை இவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சாதியை வைத்துத் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தும் போக்கை இவர் தொடர்ந்து கண்டித்து எழுதி வந்தார்.

பார்ப்பனியப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாத வரை, தமிழ் மொழி தூய்மையுறாது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் தன் தொடக்க காலத்திலிருந்து தனித்தமிழ்நாடு கொள்கையைக் கொண்டிருந்தார். அதற்கான பரப்புரைகளை தன் எழுத்துகள் வழியாகவும் பேச்சின் வாயிலாகவும் போராட்டங்கள் வாயிலாகவும் நிகழ்த்தி வந்தார். தென்மொழி இதழின் முகப்பில் நம் மூச்சு, செயல், நோக்கம் எனும் தலைப்பில்,

“இந்தியா ஒன்றாக இருக்கும் வரை இந்து மதம் இருக்கு்ம். இந்து மதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும் வரை மதப் பூசல்களும், குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும், குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை, ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும், மேலாளுமையிலினின்றும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனியப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாத வரை, தமிழ் மொழி தூய்மையுறாது. 

தமிழினம் தலைதூக்காது; தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது. எனவே இந்து மதத்தினின்றும், மதப்பூசல் களினின்றும், ஆரியப் பார்ப்பனியத்தினின்றும் விடுபட வேண்டுமானால், நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாக வேண்டும். ஆகவே தமிழக விடுதலைதான் நம் முழுமூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்” என்று எழுதியவர்.

போராளிகள் குறித்த கவிதைகள்

பெருஞ்சித்திரனார் பல்வேறு தனித்தமிழ் இயக்க அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், சமூகப் போராளிகள் எனப் பலரையும் குறித்து கவிதைகள் படைத்துள்ளார். அவற்றுள் தனித்தமிழ் இயக்க முன்னோடிகளான மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் போன்றோரைப் பற்றி பெருமளவு கவிதைகள் படைத்துள்ளார். உலகம் போற்றும் தலைவர்களையும் களப் போராளிகளையும் தம் கவிதைகளின் வழியாகப் போற்றியுள்ளார். காரல் மார்க்சு, நெல்சன் மண்டேலா போன்றோரைப் பற்றிய கவிதைகள் இரங்கற்பாக்களாக அமைந்துள்ளன. 

டாக்டர்.அம்பேத்கர், காந்தி, பெரியார், அண்ணா, பிரபாகரன் போன்றோரின் சமூகப் பணிகளையும் பொதுவாழ்வில் செயல்பாடுகளை கவிதைகளாக படைத்தார்.

பெரியார், பாரதிதாசன் போன்றோரைப் பற்றிக் குறிப்பிடுகையில், “பெரியாரையும், பாவேந்தரையும் பட்டிமன்றத்திற்கும் பாட்டரங்கத்திற்கும் மட்டும்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமா?” என ஆதங்கத்தோடு பதிவு செய்துள்ளார். அம்பேத்கர் பற்றி ‘அம்பேத்கர் வாழ்க’, ‘அவர்தாம் பீமாராவ் அம்பேத்கர்’ எனும் இருவேறு தலைப்புகளின் கீழ் கவிதைகள் படைத்துள்ளார். 

தமிழீழ விடுதலையின் தீவிர ஆதரவு

பெருஞ்சித்திரனார் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலை ஆதரவாளராக இயங்கி வந்தார். தமிழீழ அரசியலில் ஆர்வமும் உண்மையான ஈடுபாடும் கொண்டவராக அவர் இருந்தார். அமிர்தலிங்கம், வே.பிரபாகரன், முகுந்தன் அனைவரையும் வரவேற்பவராக அவர் செயல்பட்டார். தொடக்கத்தில் அனைத்து இயக்கத்தவரையும் ஒரே வகையில் ஆதரித்த அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக இறுதிவரை இருந்தார். புலிகள் மீதான இந்திய அரசின் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் இவர் கடுமையாக அதனை எதிர்த்து பரப்புரை செய்தார். அக்காலத்தில் இவர் எழுதிய கவிதை ஒன்றில்,

”இதோ ஒருவன் நான் இங்கிருக்கின்றேன்
எனைச்சிறை செய்யினும் செய்க!
ஈழத்தமிழரை ஆதரிக்கின்றேன்
என் தலை கொய்யினும் கொய்க”

என்று தமிழின விடுதலையில் தன் உறுதியைக் காட்டியவர்.

20 முறைக்கும் மேலாக சிறை

பெருஞ்சித்திரனார் தடா, மிசா போன்ற இந்தியச் சட்டங்களின் கீழ் பல்வேறு முறை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 20 முறைக்கும் மேலாக சிறைக்குச் சென்றவர். 

40-க்கும் மேற்பட்ட நூல்கள்

அவர்கள் தமிழினத்திற்கு அறிவூட்ட  உணர்வுட்ட 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.  

அறுபருவத் திருக்கூத்து

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

இனம் ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு?

இலக்கியத் துறையில் தமிழ்வளர்ச்சிக்குரிய ஆக்கப் பணிகள்

இளமை உணர்வுகள்

இளமை விடியல்

உலகியல் நூறு

எண் சுவை எண்பது

ஐயை

 ஓ! ஓ! தமிழர்களே

 கற்பனை ஊற்றுக் கட்டுரைகள்

 கழுதை அழுத கதை

 கனிச்சாறு

  கொய்யாக் கனி (பாவியம்)

 சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்

  சாதி ஒழிப்பு

  செயலும் செயல்திறனும்

தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

தன்னுணர்வு

தமிழீழம்

திருக்குறள் மெய்ப்பொருளுரை  

உள்ளிட்ட பல நூல்களை  எழுதியுள்ளார்.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பிறந்த நாள் இன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *