யோகி ஆதித்யநாத்

உத்திரப்பிரதேசத்தில் 2019-ல் மதக்கலவரமே நடக்கவில்லை என்கிறது ஒன்றிய அரசு; உண்மையைத் தேடுவோம்!

2019-ம் ஆண்டில் இந்தியாவில் 440 வகுப்புவாத மோதல்கள் நடைபெற்றிருப்பதாகவும், இது 2018-ம் ஆண்டின் எண்ணிக்கையை விட 14% குறைவு என்றும் ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கையின்படி 2018-ம் ஆண்டில் 512 மதவாத மோதல்கள் இந்தியாவில் நடந்ததாகவும், 2019-ல் அது 440 ஆக குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவிலேயே பீகாரில் தான் அதிகபட்சமாக 135 மோதல்கள் நடைபெற்றுள்ளதாகவும், அதேசமயம் உத்திரப்பிரதேசத்தில் எந்த மோதலும் நடைபெறவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 54 மோதல்களும், ஹரியானாவில் 50-ம், மகராஷ்டிராவில் 47 மோதல்களும் நடைபெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி இதனை தெரிவித்துள்ளார். 

உத்திரப் பிரதேசத்தில் மதவாத மோதலே நடக்கவில்லையா?

மதவாத வன்முறைகள் குறித்த செய்திகளில் அதிகம் இடம்பெறும் மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் 2019-ம் ஆண்டில் எந்த வகுப்புவாத வன்முறைகளும் நடைபெறவில்லையா? 

2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி The Week ஊடகம் உளவு நிறுவனங்களின் தரவுகளை சுட்டிக்காட்டி ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது. 2019-ம் ஆண்டின் ஜனவரி 1-ம் தேதியிலிருந்து அக்டோபர் 30-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற மதவாத மோதல்களின் எண்ணிக்கை அடிப்படையிலான அறிக்கை அது. 

மதவாத மோதல்களில் உத்திரப்பிரதேசமே முதலிடம்

அதில் இந்தியாவில் 9 மாநிலங்களில் அதிக அளவிலான வகுப்புவாத மோதல்கள் நடைபெற்றிருப்பதாகவும், அந்த 9 மாநிலங்களில் உத்திரப்பிரதேசத்தில் தான் அதிக வகுப்புவாத மோதல்கள் நடைபெற்று, அம்மாநிலமே பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதில் 2019 ஜனவரி 1 முதல் 2019 அக்டோபர் 30 வரையிலான காலகட்டத்தில் உத்திரப் பிரதேசத்தில் மட்டும் 457 வகுப்புவாத மோதல்கள் நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2018-ம் ஆண்டில் 396 மோதல்கள் நடைபெற்றதாகவும், 2019-ம் ஆண்டில் அதனை விட மிக அதிக எண்ணிக்கையில் மோதல்கள் நடைபெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

உத்திரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான், மேற்கு வங்காளம், குஜராத், அசாம், கேரளா, திரிபுரா, டெல்லி மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் வகுப்புவாத மோதல்களின் களமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

மற்றொரு ஆய்விலும் உத்திரப் பிரதேசமே மதக்கலவரங்களில் முதலிடம்

மேலும் Centre for Study of Society and Secularism (CSSS) அமைப்பானது ஐந்து செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் 2019-ம் ஆண்டில் நடைபெற்ற மதக்கலவரங்களை பட்டியலிட்டது. அதில் நாடு முழுதும் நடைபெற்ற 25 மதக் கலவரங்களை பட்டியலிட்டது. அந்த பட்டியலிலும் அதிகபட்சமாக 9 மதக் கலவரங்கள் நடைபெற்று உத்திரப்பிரதேசமே முதல் இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டது.

பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?

இப்படி இருக்கையில் உத்திரப் பிரதேசத்தில் ஒரு சம்பவம் கூட நடைபெறவில்லை என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் பாராளுமன்றத்தில் அளித்திருக்கும் பதிலானது, உளவு நிறுவனங்கள் அளித்த மேற்குறிப்பிட்ட தகவல்களுக்கு முற்றிலும் முரணானதாகவே இருக்கிறது. 

மதவாத மோதல்களை முறையாக ஆவணப்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்துவதன் மூலமே, அவற்றை தடுப்பதற்கான முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். மதவாத மோதல்களை இல்லாமல் செய்வது எப்படி எனும் ஆய்வினையும் நடத்த முடியும். ஆனால் மோதல்கள் நடைபெறுவதனை மறைத்து இல்லை என்று சொல்லும் ஒன்றிய அரசின் நடைமுறையானது எக்காரணத்தை முன்னிட்டும் மதக் கலவரங்களை தடுத்திடுவதற்கு உதவாது. மேலும் மேலும் அதனை அதிகப்படுத்திடவே செய்யும்.

பாஜகவின் யோகி ஆதித்யநாத் அரசின் கீழ் நடைபெறும் மதக் கலவரங்களையும், என்கவுண்டர் கொலைகளையும் ஒன்றிய அரசு குறைத்துக் காட்ட முயல்வதாக ஏற்கனவே ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்துவந்த நிலையில் தற்போது ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில் அளித்திருக்கும் இந்த பதிலானது அக்குற்றச்சாட்டுகளை உண்மையாக்கும் விதத்திலேயே அமைந்திருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *