நாவலர் சோமசுந்தர பாரதியார்

வ.உ.சியால் தமிழ்க்கப்பல் என்று புகழப்பட்ட சோமசுந்தர பாரதியார்

நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு.

சத்தியானந்த சோமசுந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்ட சோமசுந்தர பாரதியார். எட்டயபுரத்தில் சுப்பிரமணியம் முத்தம்மாள் இணையருக்கு மகனாக 1879 ஜூலை 27-ம் நாள் பிறந்தார்.

இளம்வயதில் தமிழ் நூல்களைக் கற்பதிலும், பாடல்களை உருவாக்குவதிலும் பெருவிருப்பம் கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணப் புலவரின் போட்டியில் வென்று பாரதி பட்டம் பெற்றார்

யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு புலவர் எட்டையபுரம் அரண்மனைக்கு வந்திருந்தார். அரண்மனை அவையில் நடந்த புலவர் கூட்டத்தில் ஈற்றடி ஒன்றைக் கொடுத்து பாடல் ஒன்றை எழுதித் தருமாறு அங்கிருந்த புலவர்களிடம் கூறினார். அந்த கூட்டத்துக்குச் சென்றிருந்த சோமசுந்தரமும் அரணமனையில் பணியாற்றிய சின்னசாமி ஐயர் மகன் சுப்பிரமணியனும் அவர்கள் எழுதிய பாடல்களைக் கொடுத்தனர். அனைத்துப் பாடல்களிலும் இவர்கள் எழுதிய பாடல்களே சிறந்ததெனத் தேர்ந்தெடுத்த அப்புலவர் இருவருக்கும் பாரதி என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார் .

இளமைக் காலம்

சோமசுந்தர பாரதியார் தனது தொடக்கக் கல்வியை எட்டயபுரத்திலும் நெல்லையிலும் படித்தார். அதன் பின் சென்னை கிறித்தவக் கல்லூரியில் பயின்று கலை இளவர் பட்டமும், சென்னை சட்டக் கல்லூரியில் படித்து 1905-ம் ஆண்டில் சட்ட இளவர் பட்டமும் பெற்றார். 

தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றியபொழுது தானே பயின்று 1913-ம் ஆண்டில் கலை முதுவர் பட்டம் பெற்றார்.

விடுதலைப் போராட்டம்

சோமசுந்தர பாரதியார் 1905-ம் ஆண்டில் தூத்துக்குடியில் வழக்கறிஞராகத் தொழிலாற்றத் தொடங்கியபொழுது, அங்கே விடுதலைப் போராட்டம் கனன்று கொண்டிருந்தது. அப்போராட்டத்தால் சோமசுந்தர பாரதியாரும் ஈர்க்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு இயக்கம் நடத்திய பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார்.

தமிழ்க் கப்பல் என்று சொன்ன வ.உ.சி

வ.உ.சிதம்பரனாரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு சோமசுந்தர பாரதியார் “இண்டியன் நேவிகேஷன்” என்னும் சுதேசி கப்பல் கம்பெனியின் செயலாளராகவும் இருந்தார். அதனால் தான் வ.உ.சி “இரண்டு சரக்குக் கப்பலோடு சேர்த்து மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் என்னிடமுண்டே”  என்று நாவாலர் பற்றி கூறுவார்.

1933-ம் ஆண்டு அண்ணாமலை அரசரின் வேண்டுகோளுக்கிணங்க, வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியராக பாரதியார் பொறுப்பேற்றார்.

இந்தி எதிர்ப்பு போராட்டம்

1937-ம் ஆண்டில் ராஜாஜி முதலமைச்சராக பதவியேற்றபோது உயர்நிலைப் பள்ளிகளில் முதல் மூன்று படிவங்களில் இந்தி மொழி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. இந்தி மொழியைத் திணிக்கக் கூடாதென்ற இந்தி எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கியவர்களில் நாவலர் ஒருவர்.

1937 செப்டம்பர் 5-ம் நாள் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்றார். இந்தித் திணிப்பிற்கு எதிராக “இந்தி மொழி, இலக்கண இலக்கியச் சிறப்பில்லாத வெற்று மொழி, அம்மொழி பயிலுவதால் தமிழ் மொழியும், தமிழர் நாகரிகமும் கெட்டுவிடும். தமிழ்ப் பள்ளிக் கூடங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதைத் தமிழ் மக்கள் முழு வன்மையோடு கண்டித்து ஒழிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் உடனே தீவிரமாய்ச் செய்திடல் வேண்டும். அதுவே தமிழர் வீரமுடையவர் என்பதைக் காட்டும். அவ்வெதிர்ப்பினால் ஏதாவது கேடு வருமானால் அதனை பெறத் தாம் முன்னணியில் இருப்பேன்.” என்று பேசினார்.

அக்டோபர் 25-ம் நாள் கட்டாய இந்திக் கல்வியைக் கைவிடக் கோரி, ராஜாஜிக்கு திறந்த மடல் (An Open Letter to Honourable Minister C. Rajagopalachariar) தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார்.

1948-ம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது இந்திப் போராட்டத்தின் போதும் போராட்டத்தில் பங்காற்றினார். சோமசுந்தர பாரதியார் 1916 ஆகத்து 16-ம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ’தசரதன் குறையும் கைகேயி நிறையும்’ என்னும் தலைப்பில் ஆராய்ச்சி சொற்பொழிவாற்றினார். இச்சொற்பொழிவு இதே தலைப்பில் பின்னர் நூலாக வெளியிடப்பட்டது.

திருவள்ளுவர், சேரர் தாயமுறை, தமிழும் தமிழரும், சேரர் பேரூர், அழகு பழந்தமிழ் நாடு, நற்றமிழ், Tamil Classics and Tamilakam  ஆகிய ஆய்வு நூல்களை எழுதியவர்.

சுயமரியாதை இயக்கம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு இயக்கம்

சோமசுந்தர பாரதியார் இளம் வயதில் சமூக சீர்திருத்தத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தோடு தொடர்புடையவராக இருந்தார். எனவே சடங்குகள் நீக்கிய திருமணம் உள்ளிட்ட விழாக்களை முன்னின்று நடத்தினார். தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் மதுரை மாவட்ட தலைவராகவும் செயற்பட்டார்.

அப்பணியின் உச்சமாக, 1933 மே 13-ம் நாள் மதுரைக்கு அருகில் உள்ள உசிலங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர்க்கு என தொடக்கப்பள்ளி ஒன்றை நிறுவினார்.

மதிப்புறு முனைவர் (Honorary Doctor) பட்டம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவில் சோமசுந்தர பாரதியாருக்கு வழங்கப்பட்டது. நாவலர் எனும் பட்டமும் பெற்றார்.

1959 டிசம்பர் 14 அன்று உடல் நலக் குறைவால் இயற்கை எய்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *