முகநூல் பஜ்ரங் தள்

ஃபேஸ்புக் நிர்வாகம் ஆபத்தான இந்துத்துவ அமைப்பின் வெறுப்புப் பிரச்சாரங்களை கட்டுப்படுத்த மறுப்பதாக புதிய தகவல்

பாஜக தலைவர்களின் வெறுப்புப் பிரச்சாரங்களை நீக்காமல், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஏற்கனவே ஃபேஸ்புக் இந்தியா பிரிவின் மீது குற்றம்சாட்டி வால்ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிக்கை செய்தி ஆவணங்களை வெளியிட்டது. ஃபேஸ்புக் மீதான இக்குற்றச்சாட்டு கடும் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், சொந்த காரணங்களுக்காக என்று சொல்லி பேஸ்புக் இந்தியா பிரிவின் நிர்வாகி அங்கி தாஸ் பதவி விலகினார்.

இதையும் படிக்க: பாஜகவுக்கு ஆதரவாக தேர்தலில் வேலை செய்ததா ஃபேஸ்புக்? அடுத்தடுத்து வெளிவரும் குற்றச்சாட்டுகள்

ஆபத்தான அமைப்பு என்று வகைப்படுத்திய செக்யூரிட்டி குழு

தற்போது பாஜக ஆதரவு இந்துத்துவ அமைப்பான பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீதும் ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக அடுத்த ஆவணத்தினை வால் ஸ்ட்ரீட் ஜார்னல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஃபேஸ்புக்கின் உள்ளக செக்யூரிட்டி டீம், பஜ்ரங் தள் அமைப்பு ஒரு ஆபத்தான அமைப்பு என்று வகைப்படுத்தியதுடன், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை அந்த அமைப்பு தூண்டுவதாகவும் குறிப்பிட்டு அவர்களின் பக்கங்களை முடக்க வலியுறுத்தி நிர்வாகத்திற்கு அனுப்பியிருக்கிறது. ஆனாலும் அந்த அமைப்பின் பக்கங்கள் மற்றும் தலைவர்களின் கணக்குகள் மீது நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஃபேஸ்புக் நிறுவனம் மறுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச் ஒன்றினை தாக்கிய வீடியோ

பஜ்ரங் தள் அமைப்பினர் டெல்லியில் உள்ள சர்ச் ஒன்றினை இந்து கோயிலின் மீது கட்டப்பட்டுள்ளதாக சொல்லி தாக்கினர். அங்கிருந்த பாதிரியாரைத் தாக்கி சிலை ஒன்றினை அங்கு வைத்தனர். அந்த தாக்குதலை தாங்கள்தான் நடத்தியதாக பெருமையுடன் ஒரு வீடியோவினை வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கினர். அந்த வீடியோவின் கீழ் “அந்த நாய்களை அடியுங்கள்” “அவர்களை உடையுங்கள்” என்று ஏராளமான கமெண்ட்கள் பதியப்பட்டன. சிறுபான்மை மக்கள் மீதான வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்த அந்த வீடியோ இரண்டரை லட்சம் பேரால் பார்க்கப்பட்டது. அந்த வீடியோவை நீக்கி நடவடிக்கை எடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் தவறியதுடன், செக்யூரிட்டி குழு அளித்த எச்சரிக்கையையும் செயல்படுத்த தவறியுள்ளது என்று WSJ தெரிவிக்கிறது.

வணிக வளர்ச்சி பாதிக்கப்படும் எனக் கருதும் ஃபேஸ்புக்

பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்களின் ஃபேஸ்புக் பக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தங்களின் வணிக வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும், இந்தியாவில் உள்ள தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்து ஃபேஸ்புக் நிறுவனம் அந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஃபேஸ்புக்கின் உள்ளக அறிக்கை ஒன்று தெரிவிப்பதாக WSJ செய்தி தெரிவித்துள்ளது.

மேலும் சனாதன் சன்ஸ்தா, ஸ்ரீராம் சேனா ஆகிய இரண்டு இந்துத்துவ அமைப்புகள் குறித்தும் ஃபேஸ்புக் செக்யூரிட்டி குழுவானது, தலைமை நிர்வாகத்திற்கு எச்சரிக்கைகள் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் ஊழியர்கள் அனுப்பிய கடிதம்

ஆனால் செக்யூரிட்டி குழுவின் எச்சரிக்கைகள் குறித்து இதுவரை ஃபேஸ்புக் தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஃபேஸ்புக் ஊழியர்கள் குழு ஒன்று தங்கள் நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பஜ்ரங் தள் அமைப்பின் குழுக்களை தங்கள் வலைதளத்தில் அனுமதிப்பதென்பது, வெறுப்புப் பரப்புரைகளை கட்டுப்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளதாக நாம் அளித்துள்ள உறுதியை சந்தேகத்திற்கு உள்ளாக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி குறித்து பதில் அளித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், ஆபத்தான அமைப்புகள் மற்றும் நபர்கள் பற்றிய தங்கள் கொள்கையானது, எந்த அரசியல் கட்சிக்கும், நிலைப்பாட்டிற்கும் ஆதரவானதல்ல என்று தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி கருத்து

வால்ஸ்ட்ரீட் ஜார்னலின் இந்த செய்தி குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்-சும் தான் இந்தியாவில் ஃபேஸ்புக் நிறுவனத்தைக் கட்டுப்படுத்துவது உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *