ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் நடுகாவேரி என்ற ஊரில் முத்துச்சாமி நாட்டார் – தையலம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். சிவப்பிரகாசம் என இவருக்கு முதலில் பெயரிடப்பட்டது. இளவயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது. அது ஆறினால் முடி எடுப்பதாக வேங்கடப்பெருமானை இவர்தம் பெற்றோர் வேண்டிக்கொண்டனர். அவ்வாறு நடந்துவிட இவர் பெயரை வேங்கடசாமி என மாற்றினர்கள்.
இளமைக்காலம்
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்புவரை படித்தவர். நெடுங்கணக்கு இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, குழிமாற்று ஆகிய கணக்கு சார்பான சுவடிகளைப் படித்து முடித்த பின்னர் தம் தந்தையார் மூலம் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, அந்தாதி, கலம்பகம் வகை நூல்களையும் படித்தார்.
ஆசிரியர் துணையின்றி தானாகவே இலக்கண இலக்கியங்கள் பயின்றார்
சாவித்திரி வெண்பா எனும் நூலை இயற்றிய ஐ.சாமிநாத முதலியாரின் தூண்டுதலால் ஆசிரியர் துணையின்றி தானே தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்று மதுரை தமிழ்ச் சங்கத்தின் பிரவேசப் பண்டிதம் , பால பண்டிதம், பண்டிதம் ஆகிய தேர்வுகளை எழுதி, முதல் மாணாக்கராகத் தேர்ச்சியுற்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் கையால் தங்கப் பதக்கம் பெற்றார்.
பேராசிரியர் பணியில்
அவரது 24-வது வயதில் திருச்சி எஸ்.பி.ஜி கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். கோவை தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் ஓராண்டு பணியாற்றினார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தலைமை தமிழ் பேராசிரியராக 24 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
இவரது திறமையைக் கேள்விப்பட்ட அண்ணாமலை அரசர் இவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக நியமித்தார். அங்கு 7 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பினார். பின்னர் தமிழறிஞர் உமா மகேஸ்வரரின் விருப்பத்துக்கு இணங்க, கரந்தை புலவர் கல்லூரியில் 4 ஆண்டுகள் ஊதியம் பெறாமலேயே மதிப்பியல் முதல்வராகப் பணியாற்றினார்.
சொற்பொழிவுத் திறனுக்கு நாவலர் பட்டம்
நாவலர் வேங்கடசாமி நாட்டார் ஆய்வாளர் மட்டுமல்லாமல் மிகச் சிறந்த சொற்பொழிவாளராகவும் இருந்தார். இவரின் ஒவ்வொரு சொற்பொழிவிலும் ஒரு புதிய செய்தியோ அல்லது புதிய ஆய்வுக் குறிப்போ கண்டிப்பாக இருக்கும். அவரின் சொற்பொழிவைக் கேட்க பல தமிழன்பர்கள் வெகு தொலைவில் இருந்து நடந்தே வந்து கேட்பர்.
இவரது சொற்பொழிவாற்றல் கண்டு வியந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 24.12.1940 இல் நடத்திய மாநாட்டில் இவருக்கு நாவலர் எனும் பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.
தமிழ் தனித்து இயங்கும்
தமிழுக்கு வேற்று மொழிச் சொற்கள் தேவையில்லை. தமிழ் தனித்து இயங்கும். ஒருவேளை வேற்று மொழிச் சொற்கள் தேவைப்பட்டால் என்ன செய்வது?
தமிழில் உள்ள வேர் சொற்களில் இருந்து புதிய சொற்களை உருவாக்க வேண்டும். புதிய சொற்களை உருவாக்க அல்லது கண்டுபிடிக்கத் தாமதமானால், வேற்று மொழிச் சொற்களைத் தமிழின் ஒலி இயல் இயல்புக்கு ஏற்பத் திரித்து வழங்க வேண்டும். எடுத்துக்காட்டு: ஜீசஸ் – இயேசு, ஜேக்கப் – யாகோபு என்று விளக்கம் தருகிறார் ந.மு.வேங்கடசாமி அவர்கள்.
வேளிர் வரலாறு
மூ.ராகவையங்கார் எழுதிய வேளிர் வரலாற்றில் உள்ள வரலாற்றுப் பிழைகளை சுட்டிகாட்டி ’வேளிர் வரலாறு’ எனும் நூலை எழுதினார். இது இல்லாமல்,நக்கீரர், கபிலர், கள்ளர் சரித்திரம், கண்ணகி வரலாறும் கற்பும் மாண்பும், சோழர் சரித்திரம், கட்டுரைத் திரட்டு, சில செய்யுள்கள், காந்தியடிகள் நெஞ்சுவிடு தூது ஆகியவை இவர் எழுதிய முக்கியமான நூல்கள் ஆகும்.
நக்கீரர் நூல்
இவரது ‘நக்கீரர்’ என்ற நூல் இலண்டன் பல்கலைக்கழகத்திலும், காசி இந்துப் பல்கலைக்கழகத்திலும் பாடமாக வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளர் சரித்திரம்
கள்ளர் சரித்திரம் ஒரு சமூகம் சார்ந்த நூலாக இருந்தாலும், அது தமிழக மக்களின் வரலாறாக இருக்கிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதிய ‘தென்பாண்டிச் சிங்கம்’ என்ற வரலாற்று நாவலின் முன்னுரையில், “தமிழ் கூறும் நல்லுலகத்தாரால் நாட்டார் ஐயா என்று அன்புடன் அழைக்கப்பெற்ற திரு ந.மு.வே.நாட்டார் அவர்களின் ‘கள்ளர் சரித்திரத்தின்’ துணைகொண்டு இந்நூலை எழுதத் தொடங்குகிறேன்” என்று குறிப்பிட்டு இருப்பது கருதத்தக்கது.
நீதிநூற்கொத்து
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான அகநானூறு உட்பட தண்டியலங்காரம், யாப்பருங்கலக் காரிகை, இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது ஆகியவைகளுக்கும் உரை எழுதியிருக்கிறார்.
ஒளவை இயற்றிய நல்வழி, ஆத்திசூடி, மூதுரை, கொன்றை வேந்தன் உலகநாதனார் இயற்றிய உலகநீதி, அதிவீரராம பாண்டியன் இயற்றிய வெற்றிவேற்கை, துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நன்னெறி ஆகிவற்றிற்கு பொழிப்புரை எழுதியிருக்கிறார். இவை 1961-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிநூற்கொத்து என்னும் தலைப்பில் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் நிறுவனத்தால் தொகைநூலாக வெளியிடப்பட்டது.
தனித்தமிழ் கல்லூரி
ந.மு.வேங்கடசாமி சைவநெறி மீது பெரும் நம்பிக்கை கொண்டவர். சென்னை மயிலாப்பூர் சைவசித்தாந்தப் பெருமன்றத்தின் தலைவராக ஓராண்டு பொறுப்பு வகித்து இருக்கிறார். தஞ்சையிலோ அல்லது திருச்சியிலோ ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் அமைத்து விட வேண்டும் என்று 1922 காலகட்டங்களில் கடும் முயற்சி எடுத்தார். இருந்தும் முயற்சி பலன் தரவில்லை, தோல்வியாகவே முடிந்தது. கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பேராசிரியர் பி.விருத்தாசலனார் அவர்கள் தற்போது இவரது பெயரில் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி என்ற கல்லூரியை தஞ்சை வெண்ணாற்றங்கரையில் கபிலர் நகரில் தனித்தமிழ் கல்லூரியாக நிறுவினார்.
1944-ம் ஆண்டு மார்ச் திங்கள் 28-ம் நாள், நாவலர் ந.மு.வேங்கடசாமி இயற்கை எய்தினார்.