உலக பொருளாதார மன்றம் (World Economic Forum – WEF) 2021-ம் ஆண்டிற்கான சர்வதேச பாலின இடைவெளி குறித்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கடந்த ஆண்டைக் காட்டிலும் 28 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 156 நாடுகளில் 140வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதன் மூலம் தெற்காசியாவில் பெண்கள் முன்னேற்றத்தில் மோசமான மூன்றாவது நாடாக இந்தியா இருப்பதும் தெரிய வந்துள்ளது. தெற்காசியாவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே இந்தியாவைக் காட்டிலும் பெண்கள் முன்னேற்றத்தில் பின்தங்கியுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.
பாலின இடைவெளி அளவீட்டினை 0 முதல் 100 வரையிலான மதிப்பீட்டிற்குள் வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கடந்த 66.8% சதவீதமாக இருந்த இந்தியாவின் அளவீடானது, இந்த ஆண்டு 62.5% சதவீதமாகக் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டு 112வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 140 வது இடத்திற்கு பிந்தங்கியுள்ளது.
ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அளவுகோல்கள்
கீழ்காணும் நான்கு அளவுகோல்களில் பெண்களின் பங்கேற்பு என்னவாக இருக்கிறது என்ற அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு மற்றும் அதில் அவர்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பு
- பெண்கள் கல்வியைப் பெறுதல்
- பெண்களின் சுகாதாரம் மற்றும் வாழ்நிலை
- அரசியல் அதிகாரத்தில் பெண்கள்
நான்கு அளவீடுகளில் இந்தியாவின் நிலை
இந்தியாவில் அரசியல் அதிகாரத்தில் பெண்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவிற்கு குறைந்திருப்பதுதான் இந்தியா பின்னுக்குத் தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்தியாவின் அமைச்சர் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கையானது கடந்த 2019-ம் ஆண்டில் 23.1% சதவீதமாக இருந்தது. அது 2021-ம் ஆண்டில் பாதிக்கும் மேல் குறைந்து 9.1 % ஆக குறைந்திருக்கிறது. இது பெண்களின் முன்னேற்றத்தில் மிகப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 24.8% சதவீதத்திலிருந்து 22.3% சதவீதமாகக் குறைந்துள்ளது. மேலாளர் மற்றும் உயர் பதவிகளில் பெண்களின் சதவீதமானது வெறும் 14.6% ஆக இருக்கிறது. பெரிய நிறுவனங்களைப் பொறுத்தவரை 8.9% நிறுவனங்களில் மட்டுமே பெண்கள் உயர் பொறுப்புகளில் இருக்கிறார்கள்.
நாட்டின் பெண்களின் மொத்த வருமான மதிப்பானது ஆண்களோடு ஒப்பிடும்போது ஐந்தில் ஒரு பங்குதான் இருக்கிறது. இந்த அளவீட்டில் இந்தியா உலகின் கடைசி 10 நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.
சுகாதாரம் மற்றும் வாழ்நிலையில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு மோசமாக இருக்கும் நாடுகளில் கடைசி 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது.
கல்வியைப் பொறுத்தவரை மூன்றில் ஒரு பெண் கல்வி அறிவு இல்லாதவராக இருக்கிறார். அதாவது 34.2% பெண்கள் கல்வி அறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
இந்தியாவின் அண்டை நாடுகள்
இந்தியாவின் அண்டை நாடுகளைப் பொறுத்தவரை இந்த பட்டியலில் வங்கதேசம் 65வது இடத்திலும், நேபாள் 106 வது இடத்திலும், பாகிஸ்தான் 153வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 156 வது இடத்திலும், பூடான் 130வது இடத்திலும் இருக்கிறது.
முதல் 10 நாடுகளும், கடைசி 10 நாடுகளும்
பெண்கள் முன்னேற்றத்தில் சிறந்து விளங்கும் நாடாக இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்திருப்பது ஐஸ்லாந்து நாடாகும். பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து, ஸ்வீடன், நமீபியா, ருவாண்டா, லித்துவேனியா, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
ஏமன், ஈராக், பாகிஸ்தான், சிரியா, காங்கோ, ஈரான், மாலி, சட், சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கடைசி 10 இடங்களைப் பிடித்துள்ளன.