காசிமேடு மீனவர்கள்

காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 பேரை உடனடியாக மீட்க கோரும் மீனவர்கள்

கடந்த ஜூலை 23 அன்று சென்னை காசிமேட்டில் இருந்து 10 மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்ற IND/TN/02/MM/2029 என்ற விசைப்படகு குறித்து 55 நாட்களாகியும் எந்த தகவலும் இதுவரை இல்லை.  

இந்த படகில் மீன்பிடிக்கச் சென்ற 

  1. ரகு (இராயபுரம்), 
  2. லட்சுமணன் (திருச்சினாங்குப்பம்), 
  3. சிவக்குமார் (திருச்சினாங்குப்பம்), 
  4. பாபு (திருச்சினாங்குப்பம்), 
  5. பார்த்தி (திருச்சினாங்குப்பம்), 
  6. கண்ணன் (திருவெற்றியூர் குப்பம்),
  7. தேசப்பன் (திருவெற்றியூர் குப்பம்),
  8. முருகன் (திருவெற்றியூர் குப்பம்),
  9. ரகு (திருவெற்றியூர் குப்பம்),
  10. தேசப்பன் (லட்சுமிபுரம்)

ஆகிய 10 மீனவர்களும் ஆழ்கடலில் 10 நாள் மட்டுமே தங்கி மீன்பிடிக்கும் வகையில் எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களை கொண்டு சென்றுள்ளனர்.

குற்றம்சாட்டும் பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பினர்

நவீன தொலைதொடர்பு கருவிகள் படகில் இருந்தபோதும் ஜூலை 28-ம் தேதி முதல் எந்த தொடர்பும் இல்லை. எனவே இதுகுறித்து மீனவர்களின் குடும்பத்தினர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் கடலுக்கு சென்ற நாளில் இருந்து 13 நாட்கள் வரை காத்திருந்தும் மீனவர்கள் கரைக்கு திரும்பாததால், அதிகாரிகளை சந்தித்து தங்களது அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 

இந்நிலையில் தகவல் அறிந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரும், அதிகாரிகளும் சம்மந்தப்பட்ட மீனவ குடும்பங்களை சந்தித்து 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து விட்டு, தேடுவதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் விட்டதாக பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பினர் குற்றசாட்டுகிறார்கள்

மேலும் மீனவர்கள் காணாமல் போய் 55 நாட்கள் ஆகியும் இதுவரை மீனவர்களைக் கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினர்  பரிதவிப்பில் உள்ளனர். 

காணாமல் போன மீனவர்களை மீட்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மீனவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் மீனவர்களை தேடும் பணியில், கடலோர காவல்படை மற்றும் கடற்படை ஈடுபடவில்லை. மேலும் அதிகாரிகளை அணுகி அண்டை நாடுகளான மியான்மார் மற்றும் இந்தோனேசிய நாடுகளின் அரசு தரப்பு  உதவியை நாடி மீனவர்களை மீட்க கோரிக்கை வைக்க ஆவணம் செய்யுமாறு கோரிக்கை வைத்த நிலையில் அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என மீனவர்கள்  குற்றம் சாட்டுகின்றனர்.  

ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள கடலோரக் காவல் படைக்கு தகவல் கொடுத்து விட்டோம் என்றும், தமிழகக் கடலோரக் காவல் படை 20 கப்பலில் தேடிக் கொண்டிருக்கிறது என்றும் வங்கதேசக் கடற்கரையில் தவறுதலாக கரை ஒதுங்கியுள்ளனரா? என்று தெரிந்துகொள்ள தூதரகத்திற்கு  மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என்றும் கடலோரக் காவல்படையினரின் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், தேடுதல் முயற்சிகளில் கண்டறியப்பட்டது என்ன? வங்கதேசத்தில் இருந்து பதில் தரப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கு மீன் வளத்துறையிடமும் கடலோரக் காவல் படையிடமும் எந்த பதிலும் இல்லை.

எனவே மத்திய, மாநில அரசுகள் சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 10 மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

காசிமேடு மீனவர்கள் காணாமல் போய் 50 நாட்களுக்கு மேலாகி விட்டது. முறையான மீட்பு நடவடிக்கையோ, தேடுதலோ செய்யாமல் முழுமையாக மூடி மறைத்து விட்டார்கள். இந்த விவகாரமே 40 நாட்களுக்குப் பின்னர்தான் தெரிய வருகிறது என்று தெரிவிக்கிறார்கள்.

ஒக்கி புயலில் காணாமல் போனவர்கள் குடும்பத்தில் அரசு வேலையும், 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. ஒருவேளை அவர்கள் திரும்பி வந்தால் அந்த பணத்தை அரசுக்கு அந்த குடும்பங்கள் திரும்பி செலுத்த வேண்டும் என்ற  நிபந்தனையோடுதான் ஒக்கி மீனவர்களுக்கு  நிவாரணம் வழங்கப்பட்டது. அதே நிபந்தனையுடன் காசிமேடு மீனவர் குடும்பங்களுக்கும்  நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் பிரதிநிதிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *