தமிழகத்தில் மிக நீண்ட காலமாக ஆய்விற்கு உட்படுத்தபடும் தொல்லியல் களம் என்றால் அது தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்தான். தற்பொழுது அங்கு நடைபெற்று வரும் அகழாய்வில் வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் நீர் வடிகால்கள் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் தொல்லியல் ஆய்வில் இது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி நடைபெறும் ஆதிச்சநல்லூர் அகழாய்வில், இப்பொழுது மக்கள் வசித்த வாழ்விடங்களைத் தேடி தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். இப்போது நடைபெறும் அகழாய்வில் 72 குழிகள் வெட்டபட்டு ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதையும் படிக்க: 1899-ல் ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியைப் பற்றி வெளிவராத தகவல்கள்
ஜெர்மனி ஆய்வாளர் டாக்டர் ஜாகர் (Dr Friderich Jagor) 1876-ல் ஆதிச்சநல்லூரில் முதல் அகழாய்வினை நடத்தினார். ஜாகர் தனது ஆய்வில் கிடைத்த பொருட்களை பெர்லினில் உள்ள இனவியல் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார்.
ஜாகருக்குப் பின் 1896-லும் 1904-ம் ஆண்டிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அக்காலத்தில் ஆய்வுகளை நடத்திய பிரித்தானிய தொல்லியலாளரான அலெக்சாண்டர் ரியா (Alexander Rea) என்பவர், தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகவும் பரந்த தொல்லியல் களம் இதுவெனக் கூறுகிறார்.
2004-ம் ஆண்டில் சத்தியமூர்த்தி தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமானதாகும். 3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக் கூடுகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 114 ஏக்கர் பரப்பளவில் நடத்தப்படும் ஆய்வில் ஏராளமான ஈமத்தாழிகள் காணப்பட்டுள்ளன.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, இடையில் பல்வேறு நிலைகளில் தடைபட்டு பின்னர் மீண்டும் துவங்கி, தொடர்ந்து நடைபெறும் இந்த அகழாய்வினை இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கி விரிவாக நடத்த வேண்டும்.
சிவகளை பகுதி
தாமிரபரணி ஆற்றங்கரையில் ஏரல் அருகே சிவகளை பகுதியில் அகழாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அகழாய்வில் 23 குழிகளும், வளப்பான்பிள்ளை எனும் பகுதியில் 3 குழிகளும் தோண்டப்பட்டு ஆய்வு நடைபெறுகிறது. சிவகளை பரும்பில் மட்டும் 31 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை 30 செ.மீ ஆழத்திலும், 120 செ.மீ ஆழத்திலும் உள்ளன. அதன் வாய் பகுதி 30 செ.மீ முதல் 55 செ.மீ விட்டம் வரையுள்ளது.
இந்த தாழிகளில் சிறிய கிண்ணத்தில் இருந்து நெல்மணிகள், அரிசி, மனிதனை எரித்து வைத்த சாம்பல் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மனித தாடை எலும்புடன் பற்கள், முதுகு எலும்புகள் உள்ளிட்டவையும் கிடைத்துள்ளன. மேலும் கிண்ணங்கள், மூடிகள், சுடுமண் தாங்கிகள், 20-க்கும் மேற்பட்ட இரும்பினால் ஆன ஆயுதங்கள் கண்டெடுத்துள்ளனர்.
வளப்பான்பிள்ளை திரடு பகுதி
வளப்பான்பிள்ளை திரடு எனும் பகுதியில் நுண்கற்கால கருவிகள், தமிழ் பிராமி எழுத்துகள், குறியீடுகள் மற்றும் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், வட்ட சில்லுகள், சுடுமண்ணாலான உருவங்கள், செப்புக்காசுகள், சங்கு வளையல் துண்டுகள் உள்ளிட்ட பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு கிடைத்த நெல், அரிசி பொருட்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
மீதமுள்ள முதுமக்கள் தாழியில் இருந்து கிடைத்துள்ள தாடை எலும்பு துண்டுகள், பற்களை என அனைத்தும் மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மரபணு பரிசோதனை நடத்த இருக்கிறார்கள்.
இவை அனைத்தும் இன்னும் முழுமையான ஆய்விற்கு உட்படுத்தப்படுகிற போது, இந்திய வரலாற்றில் முக்கியமான திருப்பங்களாக இருக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.