அட்சய பாத்திரா இஸ்கான்

குழந்தைகளின் பசியாற்றும் பணத்தில் முறைகேடு! அக்‌ஷய பாத்திராவுக்கு வழங்கும் பணம் இந்து அமைப்புகளுக்கு செலவழிக்கப்படுகிறதா?

சென்னையில் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு அளிப்பதற்காக தமிழக அரசால் அக்‌ஷயா பாத்திரா என்ற நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. சென்னை மட்டுமல்லாது பல மாநிலங்களில் அனுமதிக்கப்பட்டு வரும் அந்த நிறுவனத்தின் மூலமாக, இஸ்கான் எனும் மத அமைப்பு நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டினை எழுப்பி, அந்த நிறுவனத்தின் அறங்காவலர்கள் நான்கு பேர் பணியிலிருந்து விலகியுள்ளனர். 

அக்‌ஷய பாத்திரா என்ற அமைப்பு குழந்தைகளுக்கு மதிய உணவு அளிப்பதற்காக என்ற பெயரில் 2000-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதலில் வெறும் 1500 மதிய உணவு தயாரிப்பது என்ற எண்ணிக்கையில் பெங்களூரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது 12 மாநிலங்கள் மற்றும் 12 யூனியன் பிரதேசங்களில் அரசின் துணையுடன் 18 லட்சம் குழந்தைகளுக்கான மதிய உணவினை தயாரிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. நாடு முழுவதும் 52 பிரம்மாண்ட சமையற் கூடங்கள் அக்‌ஷய பாத்திராவிற்கு இருக்கின்றன. 

அக்‌ஷய பாத்திராவின் நிதி

குழந்தைகளுக்கு பசியாற்றும் சேவை செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, உணவு தயாரிப்பதற்கான நிதியில் ஒரு பங்கினை அரசிடம் இருந்தும், மீதத்தை பொதுமக்கள் அளிக்கும் நன்கொடையில் இருந்தும் இந்த நிறுவனம் பெற்று வருகிறது. 

குழந்தைகளுக்கான உணவு தயாரிப்பதற்காக வசூலித்த நிதியை இந்த அமைப்பு, இஸ்கான் மத அமைப்பின் பல்வேறு விடயங்களுக்கு பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளை அக்‌ஷயா பாத்திரா அமைப்பின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் மீதே முன்வைக்கப்பட்டுள்ளது.

இஸ்கான் அமைப்பின் முறைகேடு

இஸ்கான் (ISKCON) அல்லது ஹரே கிருஷ்ணா இயக்கம் என அழைக்கப்படும் ’இந்து அமைப்பானது’ அக்‌ஷய பாத்திரா நிறுவனத்தினை முழுமையாகக் கட்டுப்படுத்துவதாகவும், அதன் பணத்தை வேறு விடயங்களுக்கு பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்கான் அமைப்பு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மதமாற்ற வேலைகளில் ஈடுபடுவதாகவும், குழந்தைகளை மூளைச்சலவைக்கு உட்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்கான் அமைப்பினர்

அக்‌ஷயா பாத்திராவின் பெயரில் குழந்தைகளுக்காக வாங்கிய பணத்தை, ஹரே கிருஷ்ணா மத நிறுவனமானது தாங்கள் நிர்வகிக்கும் கோயில் அறக்கட்டளைகளுக்கும், கோயில்களில் தாங்கள் மேற்கொள்ளும் உணவு வர்த்தகத்திற்கும், மற்ற விடயங்களுக்கும் பயன்படுத்துவதாகவும், இது கேள்வி கேட்க முடியாத நிலையில் இருப்பதாகவும் நான்கு அறங்காவலர்களும் பணியிலிருந்து விலகியுள்ளனர். 

அக்‌ஷயா பாத்திரா அரசிடம் பெற்ற 247 கோடி

2018-19ம் ஆண்டில் அக்‌ஷயா பாத்திரா அமைப்பு குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக என்று சொல்லி அரசாங்கத்திடம் 247 கோடி ரூபாய் பணமும், பொதுமக்களிடம் நன்கொடையாக 352 கோடி ரூபாய் பணமும் பெற்றிருக்கிறது. குழந்தைகளுக்காக அளிக்கப்பட்ட இந்த நிதியின் ஒரு பங்கினைத் தான் முறைகேடாக இஸ்கான் அமைப்பின் பணிகளுக்கு அக்‌ஷயா பாத்திரா அமைப்பின் தலைமை பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இஸ்கான் பொறுப்பாளர்களே அக்‌ஷய பாத்திராவின் தலைமை

அக்‌ஷய பாத்திரா அமைப்பு இஸ்கானிடமிருந்து தனித்த வேறுபட்ட அமைப்பாக சொல்லப்பட்டாலும், அதன் தலைவராகவும், துணைத் தலைவராகவும் இஸ்கான் அமைப்பின் பொறுப்பாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். அக்‌ஷய பாத்திரா நிர்வாகத்தின் கணக்குகளை வெளிப்படையாக்குவதற்கு முயற்சித்த நான்கு அறங்காவலர்களின் முயற்சிகளில் இஸ்கான் நிர்வாகிகள் தொடர்ச்சியாக அதிகாரத் தலையீடு செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

6 லிருந்து 12 ரூபாயாக உயர்த்தப்பட்ட சாப்பாட்டு கணக்கு

2014-15ம் ஆண்டில் 6 ரூபாயாக இருந்த ஒரு சாப்பாட்டுக்கான செலவுத் தொகையானது அறக்கட்டளையின் தலைமையினால் 12 முதல் 13 ரூபாய் வரை உயர்த்திக் காட்டப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சிக்கல்கள் தொடர்ந்ததால் 2016-ம் ஆண்டு அறக்கட்டளையின் நிதிக் கணக்குகளை ஆடிட் செய்வதற்கு ஒரு குழுவினை அறங்காவலர்கள் அமைத்தனர். 

இஸ்கான் பணியாளர்களுக்கு அக்‌ஷயா பாத்திரா கணக்கிலிருந்து அளிக்கப்பட்ட சம்பளம்

  • அக்‌ஷயா பாத்திராவோடு தொடர்பில்லாத இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த பலருக்கு அக்‌ஷய பாத்திராவின் கணக்கிலிருந்து சம்பளம் வழங்கப்பட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. 
  • மேலும் அக்‌ஷய பாத்திராவின் சமையற் கூடங்களும், அவற்றின் உணவு தானியங்களும் இஸ்கானின் கோயில் அறக்கட்டளை பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்திருக்கிறது. 
  • அரசாங்கத்தால் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட உணவு தானியங்களுக்கான பதிவுகளோ, கணக்குகளோ எதுவும் அறக்கட்டளையிடம் இல்லை என்பதும் கண்டறியப்பட்டது. 
  • அரசாங்கத்தின் மதிய உணவுத் திட்டத்தை தவிர்த்து பிற பணிகளுக்காக அக்‌ஷய பாத்திராவின் சமையற் கூடங்கள் பயன்படுத்தப்பட்டது குறித்தான விவரங்களை ஆவணப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

அக்‌ஷய பாத்திராவின் ஆடிட்டிங் குழுவில் இருந்த விப்ரோ நிறுவன CFO-வான சுரேஷ் சேனாபதி, ஒரு சாப்பாட்டிற்கு அக்‌ஷயா பாத்திரா காண்பிக்கும் தொகையானது, இதைப் போன்ற மற்ற அனைத்து அமைப்புகள் இதேபோன்ற சாப்பாட்டிற்கு காண்பிக்கும் தொகையை விட மிக அதிகமானதாக இருப்பதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் குற்றம் சாட்டினார். 

பதிலளிக்கப்படாத கேள்விகளும், தீர்க்கப்படாத புகார்களும்

ஒவ்வொரு சமையற்கூடமும் தனித்தனியாக இஸ்கான் நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவதால், எத்தனை கேள்விகள் எழுப்பினாலும் அதற்கு எந்த முடிவும் எட்டப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த முறைகேடுகள் தொடர்பாக அக்‌ஷய பாத்திரா அமைப்பின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் இருக்கும் இஸ்கான் நிர்வாகிகளான மது பண்டிட் தாசா, சன்சலபதி தாசா ஆகியோர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டு காலமாக பலரும் அக்‌ஷய பாத்திரா யூனிட்டுகள் மற்றும் தலைவரின் மீது புகார்கள் அளித்து வருவதாகவும், அவற்றில் பெரும்பாலான புகார்களில் விசாரணைக்குப் பின்னர், உண்மையிலேயே அங்கு தவறுகள் இருப்பது தெரிய வருவதாகவும் ஆடிட்டிங் குழுவின் கடிதம் தெரிவிக்கிறது. 

சென்னை மாநகராட்சியில் அக்‌ஷயா பாத்திராவுக்கு தமிழக அரசு வழங்கிய இடம்

அக்‌ஷய பாத்திராவின் திட்டத்தை துவக்கி வைக்கும் ஆளுநர் மற்றும் முதல்வர்

கடந்த பிப்ரவரி மாதத்தில் சென்னை மாநகராட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கு அக்‌ஷய பாத்திரா அமைப்பிற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். இதனை பெருமைமிகு சாதனையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

அக்‌ஷயா பாத்திரா அமைப்பிற்கு நவீன சமையற் கூடங்களை உருவாக்குவதற்காக சென்னையின் முக்கியப் பகுதியான ஆயிரம் விளக்கு பகுதியின் கிரீம்ஸ் சாலையில் 20 ஆயிரம் சதுர அடி இடமும், பெரம்பூர் பாரக்ஸ் சாலையில் 35 ஆயிரம் சதுர அடி இடமும் தமிழக அரசால் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. 

அக்‌ஷயா பாத்திராவின் உணவிலும் தொடர்ந்த சர்ச்சைகள்

காலை உணவு வழங்கும் திட்டத்தினை அரசே செயல்படுத்தாமல் தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிர்கட்சிகள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தன. அக்‌ஷயா பாத்திரா அமைப்பானது ஒரு குறிப்பிட்ட உயர்சாதித் தன்மையுடன் தாங்கள் தயாரிக்கும் உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்க்காதது சர்ச்சையை உருவாக்கியது. மேலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதில் முக்கியமான உணவான முட்டையையும் வழங்க மறுத்தது. இப்படிப்பட்ட அமைப்பிற்கு தமிழக அரசு அனுமதி வழங்குவதை எதிர்த்து பலரும் குரல் எழுப்பினர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *