வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals
தண்டபாணி சுவாமிகள் தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் நெற்கட்டும் செவல் சிற்றரசிடம் படைத்தலைவராகப் பணியாற்றிய செந்தில்நாயகம் – பேச்சிமுத்து தம்பதிக்கு மகனாக 1839 நவம்பர் 22 அன்று பிறந்தார்.
இளம் வயதிலேயே தமிழில் மிகுந்த புலமை பெற்றார். எட்டு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார். அந்த வயதில் பூமி காத்தாள் என்ற அம்மனுக்கு அப்பெயர் எப்படி அமைந்தது என்ற காரணத்தைக் கூறி, பாடுதற்கு அரிய வெண்பாவில் அதைப் பாடினார்.
வண்ணம் எனும் சந்தப்பா
தனது பதிமூன்று வயதில் ’வண்ணம்’ என்ற சந்தப்பா பாடுவதில் வல்லமை பெற்றிருந்ததால் வண்ணச்சரபம் என்றும், முருகன் புகழ் பாடியதால் இவர் முருகதாசர் என்றும் அழைக்கப்பட்டார். இவர் முருகனின் திருப்புகழை விரும்பிப் பாடிக்கொண்டே இருந்ததால் திருப்புகழ் சுவாமிகள் என்றும் சிறப்பிக்கப்பட்டார். அரையில் கௌபீனமும், கையில் தண்டமும் கொண்டிருந்ததால் தண்டபாணி சுவாமிகள் என்றும் அழைக்கப்பட்டார்.
தண்டபாணி சுவாமிகள் ‘சர்வதாரணி’ எனும் எழுத்தாணி மூலம் பனையோலையில் படைத்த பாடல்கள் பலவாகும்.
குருபர தத்துவம் என்ற பெயரில் தன் வரலாற்று நூலை எழுதினார். இது 1,240 விருத்தப்பாக்களால் ஆனது.
இதழகல் அந்தாதி
உதடுகள் ஒட்டாமல் குவியுமாறு பாடலமைப்பது வடமொழியில் “நீரோட்டம்” என்பர். இதனை “இதழகல் அந்தாதி” என அழகியத் தமிழில் அழைத்த வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், இம்முறையில் முப்பது எண்களமைய சென்னை, தில்லை, செந்தில், நெல்லை போன்ற தலங்களுக்கும், பொதுவாகவும் பாடியுள்ளார்.
புலவர் புராணம்
72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை ’புலவர் புராணம்’ என்ற நூலில் நிலைபெறச் செய்துள்ளார். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டதாகும். அருணகிரிநாதர் வரலாற்றை அருணகிரிநாதர் புராணம் என்ற பெயரில் நூலாக்கியுள்ளார்.
சைவ நெறியில் வந்திருந்தாலும், வைணவ ஆழ்வார்களான பெரியாழ்வார், குலசேகராழ்வார் மற்றும் ஆண்டாள் முதலியவர்களையும் உயர்வாகப் பாடியுள்ளார்.
வள்ளுவர் மற்றும் ஒளவையார் மீது கொண்ட பற்று
திருக்குறளின் அடியொற்றி வருக்கக் குறள் என்ற நூலை உருவாக்கினார். சத்தியவாசகம் என்ற உரைநடைச் சுவடியையும் அருளினார். இவர் லட்சம் பாடல்களைப் பாடியுள்ளார்.
“ஔவையொடு வள்ளுவனும் ஆராய்ந்துரைத்த நெறி
செவ்வை யெனத் தேர்ந்தார் சிலர்”
என்ற பாடல் இவர் வள்ளுவர் மற்றும் ஔவை மீது கொண்ட பற்றுக்கு சான்றாகும்.
ஆங்கிலியர் அந்தாதி
தண்டபாணி சுவாமிகள் இம்மண்ணை ஆங்கிலேயர் ஆண்டு வருவதைக் கண்டு அந்நியர் ஆட்சியை எதிர்த்துக் குரல் கொடுத்து,
“”நிரைபடப் பசு அனந்தம் கொன்று தினும்
நீசர் குடை நிழலில் வெம்பித்
தரைமகள் அழும் துயர் சகிக்கிலேன்”
என்று பாடினார். தனிப்பட “ஆங்கிலியர் அந்தாதி’ என்ற நூலைப் பாடி அதன்மூலம் ஆங்கிலேயரைப் பலவாறு சாடினார்.
தமிழில் வண்ணம் பாடிய வண்ணத்தியல்பு
தமிழிசை வளர்ச்சியில் இவருக்கு தனி இடம் உண்டு. தியாகராசர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் முதலானோர் தெலுங்கிலும், சமற்கிருதத்திலும் கர்நாடக இசையை வளர்த்து பாடிவந்த காலத்தில், இவர் தமிழில் வண்ணம் பாடி வண்ணத்தியல்பு என்னும் இலக்கண நூலை உருவாக்கியவர்.
தமிழில் வழிபாடு செய்யவேண்டும் என்னும் கருத்துடைய இவர்,
”தமிழ்ச்சுவை அறியாத்தெய்வம் உளதுஎனில்
அஃது உணர் அவகையில் தாழ்வு எனல் அறமே”
என சாடியவர்.
“நூலிழந்தும் கேளிச்சை நூறா தான் மற்றுமொரு தாலிகட்டிக் கொள்ளத் தகும்” என்று பெண்கள் மறுமணம் குறித்து சீர்திருத்த பாடல்களை பாடியவர்.
தமிழிசைக்கும், தமிழ் இலக்கணத்திற்கும் தொண்டாற்றிய தண்டபாணி சுவாமிகள் 1897 ஜிலை 5 அன்று உயிர்துறந்தார்.