எண்ணூர் கழிமுகப் பகுதி

சென்னையின் கொசஸ்தலை ஆற்றின் சதுப்பு நிலத்தை அழிப்பதால் சூழும் ஆபத்து

சதுப்பு நிலக்காடுகள் உப்பு நீரில் வளரும் தன்மை கொண்டவை. பலவகைப்பட்ட உயிரினங்களுக்கு உறைவிடமாக இந்த சதுப்பு நிலங்கள் திகழ்கிறது. சதுப்பு நிலக்காடுகள் அலையிடைக் காடுகள், கடலோர மரக்காடுகள், கடலில் நடக்கும் காடுகள், கடலின் வேர்கள், கடலின் மழைக்காடுகள், அலையாத்தி காடுகள், தில்லைவனம், சுரப்புன்னை காடுகள், கண்டன் காடுகள் என பலவகை பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. 

உப்பு நீர் நிறைந்த கடலுக்கும், நிலத்துக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக இருக்கும் சதுப்பு நிலக்காடுகள் கடல் சூழலியலில் முதன்மையான பாத்திரம் வகிக்கிறது.

சுனாமியின் தாக்கத்தை குறைக்கக் கூடியவையாக இந்த சதுப்பு நிலங்கள் இருக்கின்றன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவையே. 

தமிழகத்தில் பிச்சாவரம் அலையாத்தி காடுகள் உலகிலேயே 2வது பெரிய அலையாத்தி காடு ஆகும். இதேபோல் கோடியக்கரையை அடுத்த முத்துப்பேட்டை, சென்னையில் உள்ள பள்ளிக்கரணை, பழவேற்காடு ஆகியவை தமிழகத்தில் உள்ள முக்கிய சதுப்பு நிலப் பகுதிகள் ஆகும்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி உயிரின முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி. ஆனால் பல ஆண்டுகளாக சதுப்பு நிலப்பகுதிகள் எல்லாம் குப்பை மேடாகவும், குடியிருப்புப் பகுதிகளாகவும், தொழிற்சாலைக் கழிவுகளை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்படும் பழவேற்காடு சதுப்பு நிலப்பகுதி

அடுத்ததாக உள்ள பழவேற்காடு சதுப்பு நிலமானது கொசஸ்தலை ஆற்றின் முக்கியமான சதுப்பு நிலமாகும். எண்ணூர்- பழவேற்காடு சதுப்பு நிலத்தில் 667 ஏக்கர் பகுதியை துறைமுகம், அனல் மின் நிலையம் உள்ளிட்ட விரிவாக்கங்களுக்காக பல்வேறு நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன என்று கடந்த வியாழக்கிழமை எண்ணூர் கழிவெளி பாதுகாப்புப் பிரச்சாரம் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. 

மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், ”காமராஜர் துறைமுகம், NTECL-ன் வள்ளூர் மின்நிலையம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் 2015-ம் ஆண்டின் வெள்ளத்திற்குப் பின்பு 417 ஏக்கர் சதுப்பு நிலத்தை தொழிற்சாலைகளுக்கான நிலமாக மாற்றம் செய்துள்ளன” என்று கூறியுள்ளனர்.

239 ஏக்கரில் பிளாஸ்டிக் தொழிற்பேட்டையான TIDCO-வின் பாலி பார்க், 11 ஏக்கரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் அனல் மின்நிலையம் ஆகியவை அலை பரவும் சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது.

ஆபத்துக்குள்ளாகும் 10 லட்சம் மக்களின் வாழ்க்கை

கொசஸ்தலையாற்றின் சதுப்பு நிலப்பகுதிகள் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பதன் மூலமாக இந்த பகுதியை சேர்ந்த மக்களின் வாழ்க்கை அபாயத்துக்குள்ளாகியிருக்கிறது. ஆக்கிரமிப்புகளின் காரணமாக பொன்னேரி, மாதவரம், ஆர்.கே.நகர் மற்றும் திருவெற்றியூர் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் வாழும் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பேரழிவு ஏற்படுத்தும் வெள்ளத்தின் பாதிப்புக்கு ஆளாவார்கள்.

“சாகர்மாலா, பாரத்மாலா இவற்றுடன் மேக் இன் இந்தியா திட்டமும் சேர்ந்து எண்ணூர்-பழவேற்காடு சதுப்பு நிலப்பகுதிகளை ஏற்கனவே அழித்து மீனவ மக்களை வறுமைக்குள் தள்ளியிருக்கின்றன.”

இந்த நிலையில் சதுப்பு நிலங்கள் குறிப்பாக அலையேற்றம் பெறும் உவர் சதுப்பு நிலங்களாவது பாதுகாக்கப்படும்பட்சத்தில் மட்டுமே இனி வரும் காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தினை தடுக்க முடியும். உப்பு நீர் நிலப்பகுதிக்குள் ஊடுருவுவது, கடல்மட்ட உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக பாதுகாப்பு அரணாக உவர் சதுப்பு நிலங்கள் செயல்பட்டு இப்பகுதிகளை பாதுகாக்கும் என்பதை அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 

எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு பசுமை தீர்ப்பாயம் விதித்த அபராதம்

காமராஜர் துறைமுகம் மட்டுமே 2015-ன் பெருவெள்ளத்திற்குப் பிறகு 114 ஏக்கர் எண்ணூர் சதுப்பு நிலத்தை சாப்பிட்டு விட்டிருக்கிறது. இந்த மாதத்தின் துவக்கத்தில் எண்ணூர் சதுப்பு நிலப்பகுதியில் மணலைக் கொட்டி, சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து அலையாத்தி காட்டை அழித்த காமராஜர் துறைமுகத்திற்கு 4 கோடி ரூபாய் தேசிய பசுமை தீர்பாயத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

நிலக்கரி, எண்ணெய் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஓடைகள்

மத்திய பொதுத்துறை நிறுவனமான NTECL புதிய நிலக்கரி சாம்பல் கொட்டும் இடத்தை உருவாக்குவதற்காக 203 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதுடன், குருவிமேடு கால்வாய் போன்ற முக்கியமான ஓடைகளையும் ஆக்கிரமித்துள்ளது. 

மான் கால்வாயை BPCL ஆக்கிரமித்து, காயல் பகுதிக்குள் அமைந்திருந்த 100 ஏக்கர் பரப்புள்ள நிலத்தில் பெட்ரோலிய எண்ணெய் சேமிப்பு வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறது.  

அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக ஆக்கிரமிப்பு

காட்டுப்பள்ளி துறைமுகத்தை எட்டு மடங்கு விரிவாக்கம் செய்வது என்று அதானி துறைமுகம் திட்டமிடுகிறது. இதற்கு மட்டும் 2 ஆயிரம் ஏக்கர் கடல் பரப்பை மண் கொட்டி மூடப்போகிறார்கள். அத்துடன் சேர்த்து, எண்ணூர்-பழவேற்காடு சதுப்புநிலத்தில் 1000 ஏக்கரை ஆக்கிரமிக்கப் போகிறார்கள்.

கொசஸ்தலை ஆற்றின் சதுப்பு நிலப்பரப்பை ஆக்கிரமிப்பது ஆபத்தை விளைவிக்கும் என்று அறிக்கை எச்சரித்தது. அடையாறும் கூவமும் சேர்ந்து கொண்டுவரும் நீரைப்போல இரண்டு மடங்கு நீரை கொசஸ்தலையாறு கொண்டுவருகிறது. 

“அடையாற்றின் பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டதால், 2015-ல் சென்னை பெருவெள்ளத்திற்கு ஆளானது என்றால், கொசஸ்தலையாற்றின் வெள்ளம் இப்பிராந்தியத்தையே முடக்கிப்போட்டுவிடும்.” என்று எண்ணூர் கழிவெளி பாதுகாப்புப் பிரச்சாரம் இயக்கத்தின் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய எண்ணூர் பகுதி மீனவர் ரவீந்திரன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.

மீனவர் ரவீந்திரன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் ஆகியோர் பத்திரிக்கையாளர் சந்திப்பில்

கொசஸ்தலை ஆற்றின் பரப்பை அழிவிற்குள்ளாக்கும் திட்டங்களை நிறுத்த கோரிக்கை

“மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்து விளைவித்து மக்களை அபாயத்தில் தள்ளும் காமராஜர் துறைமுகம் போன்ற கம்பெனிகளுக்கு ஆதரவு அளிப்பதும், கொண்டாடுவதும் பொறுப்பற்ற செயல்,”  என்று அவர்கள் குறிப்பிட்டனர். 

“தொழில்மயமாக்கம் நடைபெற வேண்டும் என்றால், அதனை நிலத்தில் செய்யலாமே? நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை செய்யாதிருக்கலாமே?” என்று கேள்வியெழுப்பியதுடன், ”கொசஸ்தலை ஆற்றின் பரப்பில் தொழில்மயமாக்குவதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும், அதற்கு மாறாக மிச்சமிருக்கும் சதுப்பு நிலப்பரப்பை ‘பருவநிலை’ சரணாலயமாக அறிவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.

பத்திரிக்கையாளர் சந்திபில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள்

கொசஸ்தலை ஆற்றின் பரப்பை தொழில்மயமாக்குவதை கைவிடவேண்டும் என்றும், மிச்சமிருக்கும் சதுப்பு நிலப்பரப்பை ‘பருவநிலை’ சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்றும் பேராசிரியர் ஜனாகராஜன், முன்னாள் நீதியரசர் ஹரிபரந்தாமன் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *