Tution centres

தனியார் டியூசன்களுக்கு செலவு செய்வது 25,000 கோடி! அறிக்கை

இந்திய குடும்பங்கள் ஒரு ஆண்டுக்கு தனியார் டியூசன் சென்டர்களுக்கு 25,000 கோடி செலவு செய்வதாக தேசிய புள்ளியியல் நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கைகளிலிருந்து தெரிய வருகிறது.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் நுழைவுத் தேர்வு போன்ற சிறப்பு தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களுக்கான கட்டணங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. மழலையர் வகுப்பில் துவங்கி 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் டியூசன் வகுப்புகளுக்காக 25,000 கோடி செலவு செய்யப்படுகிறது. 

இந்திய அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்கும் தொகை 59,845 கோடி. கிட்டத்தட்ட இந்த மதிப்பில் பாதி அளவுக்கான தொகை மக்களினால் தனியார் டியூசன் வகுப்புகளுக்கு செலவிடும் நிலை இருக்கிறது. 

தேசிய புள்ளியியல் நிறுவனத்தின் 2017-18ம் ஆண்டிற்கான கல்வி ஆய்வு அறிக்கையையும், பள்ளிகளில் பல்வேறு மட்டங்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்த ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் அறிக்கையையும் இணைத்துப் பார்த்ததில் இந்த மதிப்பு கிடைக்கப் பெறுகிறது. 

கல்வி அமைச்சகத்தின் அறிக்கை 1-ம் வகுப்புக்கு முந்தைய மழலையர் வகுப்புகளை உள்ளடக்கவில்லை. அப்படி இருந்தும் அதன் மதிப்பு 24,081 கோடியாக இருக்கிறது. 

ஒரு மாணவருக்கு சராசரியாக எவ்வளவு தொகை?

மேல்நிலைப் பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை (11,12ம் வகுப்பு) ஒரு வருடத்திற்கு ஒரு மாணவர் சராசரியாக டியூசன்களுக்கு செலவு செய்யும் தொகையானது 2,516 ரூபாயாக இருக்கிறது. 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான சராசரி டியூசன் செலவு என்பது 1,632 ஆக இருக்கிறது. சுமார் 30 சதவீத மாணவர்கள் 9 மற்றும் 10ம் வகுப்பில் டியூசன் வகுப்புகளுக்கு செல்கிறார்கள். ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான சராசரி டியூசன் செலவு 502 ரூபாயாகவும், இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான செலவு 845 ரூபாயாகவும் இருக்கிறது.

( நன்றி – டைம்ஸ் ஆஃப் இந்தியா)

வகுப்புசராசரி ஆண்டு டியூசன் செலவு
11, 122,516 ரூபாய்
9,101,632 ரூபாய்
6-8845 ரூபாய்
1-5502 ரூபாய்

புதிய தேசியக் கல்விக் கொள்கை ஏற்படுத்தப்போகும் விளைவு

தற்போது ஒன்றிய அமைச்சரவை அனுமதித்துள்ள புதிய கல்விக் கொள்கையானது, 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அளவிலான பொதுத்தேர்வினை கொண்டு வருகிறது. அப்படியென்றால் அந்த நிலையில் தனியார் டியூசன் மையங்களின் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும். அவற்றில் சேரும் மாணவர்கள் அதிக அளவில் சேர வேண்டிய அளவில் நிலை ஏற்படும். இவற்றின் காரணமாக பெற்றோர்கள் தனியார் டியூசன் சென்டர்களுக்காக செய்யப் போகும் செலவும் அதிகரிக்கும்.

மேலும் ஏற்கனவே மருத்துவப் படிப்பிற்கு மட்டும் அமலில் உள்ள நீட் தேர்வு மாதிரியான, தேசிய தகுதித் தேர்வினை அனைத்து கல்லூரி படிப்புகளுக்கும் கொண்டு வருகிறது. இதன் காரணமாக பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டுமென்றால் கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெறாமல் சேரமுடியாது எனும் நிலை உருவாக இருக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு நகரங்களிலும் முளைக்கப் போகும் தனியார் நுழைவுத் தேர்வு கோச்சிங் சென்டர்கள் எத்தனை கோடிகளை கொண்டு செல்லப்போகின்றன என்பது மிகப் பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. 

வியாபாரமாகப் போகும் கல்வி

பொதுக்கல்விக்கான செலவினை அதிகப்படுத்தி, அரசுப் பள்ளிகளின் தரத்தினை உயர்த்தாமல் எத்தனை மாற்றங்களை கல்விக் கொள்கைகளில் கொண்டுவந்தாலும் அது விழலுக்கு இறைத்த நீராகவே மாறும். பல வருடங்களுக்கு முன் அறிவித்த, கல்விக்கு  ஜி.டி.பி-ல் 6 சதவீதத்தை ஒதுக்குவதையே இன்னும் இந்திய அரசு தொடவில்லை.

இத்தனை ஆண்டுகள் கழித்து 6 சதவீதத்தை தொடுவதற்குத்தான் புதிய கல்விக் கொள்கை என்று சொல்கிறது. ஆனால் புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்தப்போகும் இந்த தனியார் கொள்ளைக்கு யார் பதில் சொல்வது? 

ஏற்கனவே பள்ளிகளுக்கு இந்தியாவில் பெற்றோர் செய்யும் செலவு என்பது 1.9 லட்சம் கோடியாக இருக்கிறது. 

இதனுடன் தனியார் டியூசன் செண்ட்ர்களும், நுழைவுத் தேர்வு கோச்சிங் செண்டர்களும் சேரும் போது இதன் மதிப்பு இன்னும் பெரும் எண்ணிக்கையில் உயரும். கல்வி என்பது பணம் சம்பாதிக்கும் மிகப் பெரும் சந்தையாக மாறுவதற்கு புதிய தேசிய கல்விக் கொள்கை வழியினை திறந்துவிடுவதாக இருக்கிறது. இந்த 1.9 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது அரசு செலவு செய்யும் 59,845 கோடி என்பது மூன்றில் ஒரு பங்கு கூட கிடையாது. 

கல்விக்கான நிதி ஒதுக்கீட்டினை மையப்படுத்தி விவாதத்தினை மேற்கொள்ளாமல், கல்வி முறையை மட்டும் வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப் போகிறோம் என்று சொல்வது, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கல்விக் கொள்ளைக்கே வழிவகுக்கும். இது ஏழை எளிய மக்கள் கல்வி பெறுவதனை தடுக்கும் என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *