மோடி புதிய கல்விக் கொள்கை மாநாடு

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பே வரவில்லையா? மோடி சொல்வது உண்மையா?

புதிய தேசிய கல்விக் கொள்கை வந்த பிறகு அதற்கு எங்கிருந்தும் எதிர்ப்பு வரவில்லை என்றும், பல ஆண்டுகளாக மக்கள் கல்வியில் எதிர்பார்த்து காத்திருந்த மாற்றத்தினை காணத் துவங்கி விட்டார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். ஆகஸ்ட் 7, 2020 மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகமும், யூ.ஜி.சி-யும் இணைந்து நடத்திய கல்வியாளர்களின் மாநாட்டில் அவர் புதிய தேசிய கல்விக் கொள்கை இந்தியாவின் கல்வியில் மிகப்பெரும் தரத்தினைக் கொண்டுவர இருப்பதாகவும் பேசி உள்ளார்.

அந்த மாநாட்டில் மோடி புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றி பல விடயங்களைப் பேசி இருந்தாலும், இந்த கொள்கையில் பாகுபாடுகள் இருப்பதாகவோ, குறைகள் இருப்பதாகவோ எந்த எதிர்ப்பும் வரவில்லை என அவர் சொல்வதில் உண்மை இருக்கிறதா? 

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு

முதலில் பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல் தவிர்த்து விட்டு தன்னிச்சையாக இந்த கொள்கைக்கு அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக ஜூலை 30 அன்றே காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேற்குவங்கத்தின் எதிர்ப்பு

மேற்கு வங்க மாநிலத்தின் கல்வி அமைச்சரான பார்த்தா சாட்டர்ஜி, ”இந்த கல்விக் கொள்கை மேற்குலக மாதிரியின் காபி பேஸ்ட் வடிவம்” என்று இக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேற்குவங்க அரசாங்கம் விரைவில் இந்த கல்விக் கொள்கை குறித்து 10-12 விவரங்கள் அடங்கிய கடிதம் ஒன்றினை ஒன்றிய அரசுக்கு அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கல்விக் கொள்கை பாராளுமன்றத்திலும் நிறைவேற்றப்படவில்லை, மாநிலங்களின் அனுமதி பற்றியும் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும் கண்டனம் தெரிவித்துள்ளது மேற்குவங்க அரசு.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இக்கல்விக் கொள்கை அதிகாரத்தினை மையப்படுத்தலை நோக்கியும், கல்வியை மதவாதமயமாக்குதலை நோக்கியும், வியாபாரமயமாக்குதலை நோக்கியும் (centralisation, communalisation and commercialisation) உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இது எதிர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இக்கொள்கை குறித்து வந்த பல மாநிலங்களின் எதிர்ப்பை மீறி ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்து மோடி அரசு இதனை நிறைவேற்றியிருப்பதாக தெரிவித்துள்ளார். இக்கொள்கையின் வரைவு குறித்து கல்வியாளர்கள், நிபுணர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அறிவுஜீவிகள் அனுப்பிய எந்த கருத்துகளும் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். 

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் பெயரினை கல்வி அமைச்சகம் என்று மாற்றியதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ எதிர்ப்பு தெரிவித்து, அதற்கு பாராளுமன்றத்தில் விவாதத்தினை கோரியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம்

டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் (DUTA), உயர்கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி(Autonomy) அதிகாரத்தினை வழங்குவதனை எதிர்த்துள்ளது. கல்வியை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வணிகமாக ஒப்படைப்பதற்கு சமமாகும் என்றும் தெரிவித்துள்ளது. 

டெல்லி துணை முதல்வர்

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, புதிய கல்விக் கொள்கை ”அதீதமாக ஒழுங்கப்பட்ட மற்றும் மோசமாக நிதியளிக்கப்பட்ட” ஒரு மாதிரியாகும் என்று தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு

தமிழ்நாட்டிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, SDPI கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் தேசிய கல்விக் கொள்கை 2020-னை கடுமையாக எதிர்த்துள்ளனர். 

தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கை 2019 வரைவினை எதிர்த்து மாநிலம் முழுவதும் ஏராளமான போராட்டங்களை அரசியல் அமைப்புகளும், கல்வியாளர்களும் இணைந்து நடத்தியிருக்கின்றனர். 

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சருக்கு எழுதியுள்ள விரிவான கடிதத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளார். 

“ தற்போதைய கல்விக் கொள்கை குறித்த மத்திய அரசின் ஒருதலைப்பட்சமான முடிவானது, இந்திய ஒன்றியத்தின் அடிப்படையான கூட்டாட்சித் தத்துவத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. 

இந்தத் தேசிய கல்விக் கொள்கை, மாநிலங்களுக்கான அதிகாரங்களின் மதிப்பைக் குறைத்து, நாட்டில் சமூக நீதி, சமத்துவத்திற்குக் கூடுதல் தடைகளை உருவாக்குவதன் மூலம், கல்வியைப் பெறுதல், உள்நுழையும் வாய்ப்பு மற்றும் தரம் ஆகிய இதுவரை அடைந்த முன்னேற்றங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

மும்மொழிக் கொள்கை குழந்தைகள் மீது கடுமையான சுமையை ஏற்றுவது மட்டுமின்றி, வெவ்வேறு மாநிலங்களில் உள்ளவர்கள் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியாத ஓர் அடையாளத்தையும் திணிக்கிறது.

தேசிய கல்விக் கொள்கையில் சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவினர் தரமான கல்வியைப் பெறுவதற்குரிய சமவாய்ப்பை உறுதி செய்வதற்குத் தேவையான வழிமுறைகள் தவிர்க்கப்படுவது நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்திற்கும், ஒட்டுமொத்தமாக நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கையாகும்.

தேசிய கல்விக் கொள்கையில் தொழிற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, குலக்கல்வி முறையை ஊக்குவிக்கும் மற்றொரு வழியாகும். இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுத் தொடக்கத்திலேயே தோல்வியடைந்ததால், அது ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை, கிராமப்புற மாணவர்களைக் கல்வி பெறவிடாமல் வெளியேற்றுவதுடன், சாதி அடிப்படையிலான பரம்பரைத் தொழில்கள் மற்றும் சாதிப் படிநிலைகளை வலுப்படுத்தும்.” 

இவ்வாறு தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.

வைகோ எம்.பி

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கரோனா துயரச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பாஜக அரசு, ஆர்எஸ்எஸ் சனாதான சக்திகளின் நீண்டகாலத் திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முனைந்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

வேற்றுமையில் ஒற்றுமை கொண்டுள்ள இந்தியாவை, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே பண்பாடு என்று ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து, ஆரிய சனாதான ஒற்றைப் பண்பாட்டைத் திணிப்பதற்கு பாஜக ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் ‘ஒரே நாடு; ஒரே கல்வி முறை’ என்கிற கோட்பாடு ஆகும். இதனைச் செயல்படுத்தவே புதிய கல்விக்கொள்கை வரையறுக்கப்பட்டு இருக்கிறது.

மாநில உரிமைகளைப் பறித்து, கூட்டாட்சிக் கோட்பாட்டைச் சிதைக்கும் புதிய கல்விக் கொள்கையை மாநிலங்கள் ஏற்க வேண்டுமா?

பல்வேறு மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள இந்திய நாட்டில், தேசிய இனங்களின் அடையாளத்தை அழித்து ஒரே நாடு; ஒரே பாடத்திட்டம் என்று திணிப்பதை எப்படி சகிக்க முடியும்?”

என்று தெரிவித்துள்ளார்.

தொல்.திருமாவளவன் எம்.பி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அனைவருக்கும் கல்வி என்பதற்கு மாறாக ஒரு சிலருக்கு மட்டுமே கல்வி என்ற வர்ணாசிரமக் கோட்பாட்டை மீண்டும் புகுத்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் ஆகும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

எந்தவொரு வளர்ச்சியடைந்த நாட்டிலும் மும்மொழிக் கொள்கை என்பது பின்பற்றப்படவில்லை.ஒரு மொழிக் கொள்கை, இருமொழிக் கொள்கை மட்டுமே இருக்கின்றன.

இந்நிலையில், இந்தியையும், சமஸ்கிருதத்தையும் பிறர் மீது திணிக்க முயல்வது ஏற்புடையதல்ல. குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் இந்தித் திணிப்பை ஒருக்காலும் ஏற்கமாட்டார்கள்.

மருத்துவப் படிப்பைப் போலவே எல்லா விதமான பட்டப் படிப்புகளுக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வைக் கொண்டு வருவது பெரும்பாலானவர்களை உயர் கல்வி பெறாமல் தடுப்பதற்குத் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள சூழ்ச்சியே தவிர வேறு அல்ல.

இதுகுறித்து தமிழகத்தின் ஒன்றுபட்ட கருத்தை மத்திய அரசுக்குத் தெரிவிக்கும் விதமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு தமிழக முதல்வரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்”

என்று தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் எம்.பி

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாணவர்கள் புதிய மொழியை கற்றுக்கொள்ள வசதியாக மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மூன்றாவது மொழியை விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம் என்று மத்திய அரசு கூறினாலும் கூட, அது தொடர்பான மத்திய அரசின் விதிகளில் சமஸ்கிருதத்திற்கு தான் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதனால், மும்மொழிக் கொள்கை என்பது சமஸ்கிருதத் திணிப்பாகவே அமையும்.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைகளுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு பல்வேறு காரணங்களைக் கூறி ஏற்கெனவே கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், நுழைவுத் தேர்வு என்பது அவர்களை உயர்கல்வியில் நுழையவிடாத தேர்வாக அமைந்துவிடும். இத்திட்டத்தைக் கண்டிப்பாகக் கைவிட வேண்டும்.

உயர் கல்விக்கான ஒழுங்குமுறைகள் பெரும்பாலும் தனியாருக்குச் சாதகமானவையாக இருப்பதால், உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைத்து விட்டு, அரசு விலகிக் கொள்ளுமோ? என்ற ஐயம் ஏற்படுகிறது. இந்த ஐயத்தை மத்திய அரசு போக்க வேண்டும்.”

என்றும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மும்மொழித் திட்டத்தினை தமிழ்நாடு ஏற்காது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 

”தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இரு மொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழிக் கொள்கை இடம் பெற்று இருந்தாலும், தமிழக அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அதிமுக உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக்கொள்ள பிரதமரை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”

என்று தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்புகள் இல்லை என்பதா?

இத்தனை தரப்புகளிலிருந்து எதிர்ப்புகளும், கடுமையான கண்டனங்களும் வந்து கொண்டிருக்கும்போது, எந்த எதிர்ப்பும் இல்லை என்று நாட்டின் பிரதமர் சொல்வது எப்படி சரியாக இருக்க முடியும்? எனவே அவருக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுக்கும் எத்தனை எதிர்ப்புகள் வந்திருக்கின்றன என்பதை நினைவூட்ட வேண்டியது நம் கடமை அல்லவா!

தாய்மொழி பயிற்று மொழியா?

மேலும் தாய்மொழியினை பயிற்று மொழியாக கொண்டு வந்திருப்பது மிக முக்கியமான சீர்திருத்தம் என்றும் மோடி தெரிவித்துள்ளார். வீட்டில் என்ன மொழியில் பேசுகிறார்களோ அதே மொழியில் பயிலும் போது குழந்தைகள் வேகமாக கற்றுக் கொள்கிறார்கள் என்றும், அதற்காகத்தான் ஐந்தாம் வகுப்பு வரையில் தாய்மொழியில் பயிற்றுவிக்க அனுமதி அளிக்கபட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தாய்மொழியே 5-ம் வகுப்பு வரை பயிற்று மொழியாக அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர் சொல்லும் தகவல் முழுமையான உண்மையா என்றால் இல்லை என்பதே பதில். எங்கெல்லாம் சாத்தியமோ அங்கு தாய்மொழியில் பயிற்றுவிக்கலாம் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே அது ஏற்கனவே இருக்கிற நடைமுறைதான். புதிதாக ஒன்றும் இல்லை. இது குறித்து ஏற்கனவே நமது மெட்ராஸ் ரேடிகல்ஸ் தளத்தில் எழுதியிருக்கிறோம். 

அதன் இணைப்பு இங்கே: 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை கொண்டுவருகிறதா புதிய கல்விக் கொள்கை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *