எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு பதிவு
சோ.தர்மன் தமிழின் மிக முக்கியமான படைப்பிலக்கியவாதி. இவர் தமிழகத்தில் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகில் உள்ள உருளைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். 1953-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் நாள் சோலையப்பன்-பொன்னுத்தாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் தர்மராஜ் என்பதாகும்.
கரிசல் காட்டில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர்,அப்பகுதி மக்களின் வாழ்வியல், விவசாயத்தில் அவர்களுக்கு இருக்கும் மரபு அறிவு ஆகியவற்றைக் குறித்து ஆழமான அறிவுடையவர். தமிழக இலக்கியம் பல காத்திரமான படைப்பாளிகளைத் தந்திருக்கிறது. அதில் யாரும் பேசாத இன்னொரு வாழ்க்கையைப் பேசுபவர் சோ.தர்மன். பஞ்சாலை ஒன்றில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். விவசாயமும் எழுத்துமாக வாழ்கிறார்.
1980-ம் ஆண்டு இவரது முதல் சிறுகதை வெளிவந்தது. இப்பொழுது நான்கு நாவல்கள், ஒரு ஆய்வு நூல் உட்பட 12 வெளியீடுகள் கொண்டுவந்துள்ளார். அதில் இவரது சூல் நாவல் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது முதல் நாவலான கூகை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் ஆங்கிலத்திலும், மூங்கா என்ற பெயரில் மலையாளத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
தனது புனைவுகள் வழியாக தமிழ் நிலத்தின் பூர்வ குடிகளின் வாழ்வியலை படைத்த தர்மன் வில்லிசை கலைஞர் பிச்சைக்குட்டி குறித்து ஒரு ஆய்வு நூலையும் எழுதியுள்ளார்.
தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல், மனோன்மணியம் சுந்தரனார் விருது, சுஜாதா விருது, சாகித்ய அகாதமி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
தமிழ் மரபையும், அதன் பெருமைகளையும் ஆவணமாக்கும் இவரது எழுத்துகள் அடிப்படையில் திராவிட இயக்க எதிர்ப்பு மற்றும் நவீன மாற்றங்கள் மீது ஒவ்வாமை கொண்டதாக இருக்கிறது என்பது இவர் மீதான முக்கியமான விமர்சனமாகும்.