உலகத்திலேயே மருத்துவத்திற்கு மிகக் குறைவாக செலவு செய்யும் 4 வது நாடாக இந்தியா இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் ஆக்ஸ்ஃபாம்(Oxfam) நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு நாடும் தனது நாட்டு மக்களின் சுகாதாரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பது பற்றிய தரவரிசைப் பட்டியலும் அந்த ஆய்வில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா உலக அளவில் 155-வது இடத்தில் இருக்கிறது. கேட்பதற்கே அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? Commitment to Reducing Inequality Index 2020 என்ற பெயரில் அந்த நிறுவனம் நடத்திய ஆய்வின் வழியாகத்தான் இந்த விவரங்கள் வெளிவந்துள்ளன.
பட்ஜெட்டில் 4% சதவீதம் மட்டுமே சுகாதாரத்திற்கு
இந்தியா மிகப்பெரிய வல்லரசு நாடாக வளர்ந்து கொண்டிருப்பதாக நாம் எண்ணிக் கொண்டிருக்கும் பிம்பத்தினை உடைக்கும் வகையில் இந்த தகவல்கள் அமைந்துள்ளன. இந்தியா தனது பட்ஜெட்டில் வெறும் 4% சதவீதத்தினை மட்டுமே மக்களின் சுகாதாரத்திற்காக செலவு செய்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாடு தனது பட்ஜெட்டில் 23.6% சதவீதத்தினை சுகாதாரத்திற்காக செலவு செய்கிறது.
ஒரு நாட்டின் ஆண்டு பட்ஜெட்டில் 15% சதவீதம் மருத்துவத் துறைக்கு செலவு செய்ய வேண்டும் என்று உலக அளவில் பரிந்துரைக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு ஆப்ரிக்க யூனியன் நாடுகள் உலக சுகாதார நிறுவனத்தில் முன்வைத்த ’அபுஜா பிரகடனம்’ எனும் தீர்மானத்தில் சுகாதாரத்திற்கு பட்ஜெட்டில் 15% சதவீதத்தினை எட்டவேண்டும் எனும் இலக்கை நிர்ணயித்தன. ஆனால் அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இன்னும் அதில் நான்கில் ஒரு பங்கு என்ற அளவில் தான் இந்தியாவின் நிலை இருக்கிறது.
மக்கள் தொகையில் பாதி பேருக்கு மட்டுமே சுகாதார வசதி
இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேருக்கு மட்டுமே மருத்துவ வசதிகள் கிடைப்பதாகவும், அந்த பாதியிலும் 70% சதவீதம் பேர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு சொந்தமாக உழைத்தே செலவு செய்ய வேண்டியிருக்கிறது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. பொது மருத்துவம் என்பது மிகக் குறைவான சதவீதத்தினருக்கே கிடைப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
2017-ம் ஆண்டு உலக வங்கி வெளியிட்ட தரவரிசையில் சுகாதாரத்தில் இந்தியா கடைசியிலிருந்து 13வது இடத்தில் இருந்தது. தற்போது இந்த அறிக்கை இந்தியா இன்னும் பின்னோக்கி சென்றிருப்பதைக் காட்டுகிறது.
ஏழை நாடான புருண்டியின் சதவீதத்தில் மூன்றில் ஒரு பங்கே இந்தியா ஒதுக்குகிறது
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி, உலகத்தின் இரண்டாவது ஏழை நாடாக இருக்கும் புருண்டி என்கிற நாடு, தனது பட்ஜெட்டிலிருந்து மருத்துவத் துறைக்கு ஒதுக்கும் சதவீதத்தில், மூன்றில் ஒரு பங்குதான் இந்தியா செலவு செய்வது அதிர்ச்சிக்குரிய விடயமே.
தெற்காசியா முழுவதும் இந்தியாவைப் போன்ற நிலைதான் என்றாலும், பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகள் கூட தங்கள் பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு இந்தியாவை விட சற்று அதிகம் ஒதுக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவை கையாள்வதில் தோற்றதற்கு இதுவே காரணம்
இப்படிப்பட்ட காரணத்தினால்தான் இந்தியாவினால் கொரோனா பரவலை சரியாக அணுக முடியவில்லை என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. பக்ரைன், இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் தற்போது உலகத்தின் கொரோனா பெருந்தோற்றின் மோசமான அனுபவத்தினை அனுபவித்து வருகிறார்கள். இந்த மூன்று நாடுகளுமே சுகாதாரத் துறைக்கு செலவு செய்வதில் பின்தங்கியுள்ளன. பணக்காரர்களுக்கும், சாமானிய மக்களுக்கும் இடையில் மிகப்பெரிய பொருளாதார சமமின்மை உள்ள நாடுகளாகவும் இந்த நாடுகள் இருக்கின்றன.
தொழிலாளர் பாதுகாப்பில் கடைசியிலிருந்து 8 வது இடம்
தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமை சார்ந்த விடயங்களில் இந்தியா கடைசியிலிருந்து 8-வது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் வெறும் 10% சதவீத தொழிலாளர்கள் மட்டுமே பாதுகாப்பான பணியிட சூழல்களையும், சமூகப் பாதுகாப்பையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். 71% தொழிலாளர்கள் எந்த எழுதப்பட்ட ஒப்பந்தமும் இன்றிதான் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.
கொரோனா சூழலை காரணம் காட்டி இந்தியாவில் சில மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கான வேலை நேர அளவினை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தியதனையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. தொழிலாளர் பாதுகாப்பினை பொறுத்தமட்டில் இந்தியா தரவரிசைப் பட்டியலில் 151வது இடத்தில் இருக்கிறது.
மக்களின் கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளுக்கு அரசாங்கம் செலவு செய்யும் அளவு குறித்தான தரவரிசையில் இந்தியா 141வது இடத்தில் இருக்கிறது.
பொருளாதார சமமின்மையை சரிசெய்வதில் பாகிஸ்தானை விட பிந்தங்கியுள்ள இந்தியா
மொத்தமாக எல்லாவற்றையும் ஒப்பிட்டு பார்க்கும் போது மக்களுக்கிடையிலான பொருளாதார சமமின்மையை சரி செய்வதில் இந்தியா 129-வது இடத்தில் இருக்கிறது. இந்த தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு ஒரு படி முன்னே 128-வது இடத்திலும், வங்காளதேசம் 109வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 113வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Oxfam நிறுவனம் இந்த ஆய்வினை பொதுசேவைகள், வரி, தொழிலாளர் நலன் என்று மூன்று வகையாக பிரித்து நடத்தியது. பொதுசேவைகள் எனும் வகைக்குள் கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் அடக்கம்.
நாடு | பொது சேவைகள் தரவரிசை | வரி தரவரிசை | தொழிலாளர் தரவரிசை | ஒட்டுமொத்த தரவரிசை |
இந்தியா | 141 | 19 | 151 | 129 |
பாகிஸ்தான் | 148 | 71 | 116 | 128 |
வங்காளதேசம் | 142 | 32 | 109 | 113 |
பூடான் | 124 | 130 | 141 | 146 |