Corona Death registration ICMR new rules

கொரோனா மரணங்களை பதிவு செய்திட ICMR வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள்

நிமோனியா, மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் மரணங்களில் அவை கொரோனாவால் ஏற்பட்டதா என்ற காரணத்தைக் குறிப்பிட்டு பதிவு செய்திட வேண்டும் என்கிற புதிய விதிமுறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமடைந்து வரும் நிலையில், அதன் காரணமாக மரணிப்போரின் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. இதுவரையில் இந்தியாவில் 70,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,293 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் இனிவரும் நாட்களில் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்ற நிலையில், இந்த நிலையிலிருந்து மீள்வதற்கு முறையான ஆய்வு தேவைப்படுகிறது.

இந்த ஆய்விற்காக கொரோனாவால் நிகழும் அனைத்து வகையான  மரணங்களின் வகைகளையும் சரியாக ஆவணப்படுத்த வேண்டியது தேவையாகும். கொரோனா தொற்று ஒருவருக்கு ஏற்பட்டு தீவிரமடையும்போது நிமோனியா, மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு விளைவுகளை உருவாக்குகிறது. எனவே நிமோனியா, மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் மரணங்களில் அவை கொரோனாவால் ஏற்பட்டதா என்ற காரணத்தைக் குறிப்பிட்டு பதிவு செய்திட வேண்டும் என்கிற இந்த புதிய விதிமுறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது.

புதிய விதிமுறைகள்

  1. ஒருவரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் தீர்மானிக்க முடியாதவையாக (Test inconclusive) இருந்தாலும், அவருக்கு அதற்கான அறிகுறிகள் இருந்து மரணிக்கும் பட்சத்தில், அவர் ”கொரோனா மரணமாக இருக்கலாம் (Probable COVID-19)” என்று பதிவு செய்திட வேண்டும்.
  2. ஒருவருக்கு பரிசோதனை முடிவுகள் வராத நிலையில், ஆனால் அறிகுறிகளுடன் இறந்திருந்தால் ”சந்தேகத்திற்குரிய கொரோனா மரணமாக(Suspected COVID-19)” பதிவு செய்திட வேண்டும்.
  3. ஒருவரின் பரிசோதனை முடிவுகள் நெகட்டிவாக இருந்து, ஆனால் அறிகுறிகளுடன் மரணிக்கும் பட்சத்தில் ”மருத்துவ-தொற்றியல் ரீதியாக கண்டறியப்பட்ட கொரோனா மரணமாக (clinically-epidemiologically diagnosed COVID-19)” பதிவு செய்திட வேண்டும்.

பாதிப்பின் அளவு, கொரோனாவுடன் இணைந்த பிற நோய்களின் நிலை (Present with comorbid conditions like heart disease, asthma, COPD, Type 2 diabetes), பாதிக்கப்பட்டவரின் வயது இவைதான் மரணத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன. எனவே இவற்றை முறையாக ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாக வகைப்படுத்தினால் தான் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முறையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும்.

எனவே பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு மரணம் எவ்வாறு நிகழ்கிறது என்பதை ஒவ்வொரு அறிகுறியாக, ஒவ்வொரு நிகழ்வாக வரிசைப்படுத்தி விவரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* மரணத்திற்கான உடனடிக் காரணம் (Immediate Cause),

* உடனடி காரணத்திற்கு முந்தைய காரணம் (Antecedent Cause),

* மரணத்திற்கான அடிப்படைக் காரணம் (underlying cause of death (UCOD) ),

* இறக்கும் முறை (Mode of Dying)

போன்றவற்றையும் பதிவு செய்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான நிமோனியா மரணங்களில் கோவிட்-19 தொற்றுதான் அடிப்படை காரணமாக (UCOD) இருக்கிறது. எனவே இம்மாதிரியான அனைத்து வகையான மரணங்களிலும் அதில் கொரோனா தொற்றின் விளைவு இருந்திருக்கிறதா என்பதனை பதிவு செய்திட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இவற்றைப் பதிவு செய்திட ICMR-NCDIR e-Mortality (e-Mor) என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

ICMR-ன் புதிய விதிமுறைக்கான ஆவணத்தை இங்கே தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *