10-ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ (15 வயது) பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலத்த தீக்காயங்களுடன் மாணவி ஜெயஸ்ரீ கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக கட்சிப் பிரமுகர்கள் முருகன் மற்றும் கலியபெருமாள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜெயபாலின் வீட்டில் இருந்து புகை வரவே அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். வீட்டில் தனியே இருந்த ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீ கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் முழுதும் நெருப்பு பரவி எரிந்து கொண்டிருந்துள்ளார். பலத்த தீக்காயங்களுடன் ஜெயஸ்ரீ மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடுமையான தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய ஜெயஸ்ரீ, இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
உயிருக்குப் போராடிய சமயத்தில் தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்தவர்கள் யார்யார் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். “அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் முருகனும், கலியபெருமாளும் (யாசகன்) தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக” ஜெயஸ்ரீ தன் வாக்குமூலத்தில் குறிப்பிட்டதையடுத்து, இருவரையும் காவல்துறை கைது செய்திருக்கிறது.
ஜெயஸ்ரீயின் படுகொலை குறித்து அவரது தாய் ஊடகவியலாளர்களிடத்தில்,” குடும்ப முன்விரோதத்தின் அடிப்படையில் கடந்த 6 வருடமாக கொலையாளிகள் எங்கள் குடும்பத்திடம் தொடர்ந்து பிரச்சனை செய்து வருகின்றனர். அவர்களது அரசியல் செல்வாக்கு காரணமாக எங்களால் அவர்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெயஸ்ரீ எரிக்கப்பட்ட முன்தினம் கூட கடையில் இருந்த என் மகன் ஜெயராஜை தாக்கி காது செவிள் கிழியும் அளவுக்கு பலத்த காயத்தை ஏற்படுத்தினர். நேற்று நாங்கள் வீட்டில் யாரும் இல்லாததால், தனியாக இருந்த எங்கள் மகள் ஜெயஸ்ரீயை கை, காலைக் கட்டி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்கள். என் மகளுக்கு நீதி வேண்டும்” என கூறினார்.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக சமூகம் மொத்தமே முடங்கிப் போயுள்ள சமயத்திலும் முடங்கிடாத ஆதிக்க வன்மம் படுகொலையொன்றை நிகழ்த்தியிருக்கிறது.
கடந்த 2016ம் ஆண்டு முதல் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை மற்றும் தாக்குதல்கள் மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளன. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் கடந்த ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையின் விவரங்கள் பின்வரும் அதிர்ச்சியான தரவுகளை அளிக்கின்றன.
குற்றங்கள்/ ஆண்டு | 2016 | 2017 | 2018 | 2019(மே 31-ம் தேதி வரை) |
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு | 336 | 294 | 341 | 151 |
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் | 854 | 744 | 814 | 343 |
பெண்கள் மீதான துன்புறுத்தல்கள் | 6246 | 6108 | 6382 | 2767 |
பெண்கள் கடத்தல் | 1020 | 860 | 907 | 356 |
பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு | 1161 | 1154 | 1461 | 700 |
பெண் குழந்தைகள் மீதான இதர தாக்குதல்கள் | 414 | 433 | 581 | 275 |
குழந்தைகள் கொலை | 87 | 65 | 3 | 22 |
ஜெயஸ்ரீ கொல்லப்பட்டது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொள்ளாட்சி பாலியல் குற்றத்தில் சம்மந்தப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவியுள்ள நிலையில், விழுப்புரத்திலும் அந்த நிலை ஏற்படக் கூடாது என தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”கைது செய்யப்பட்டவர்கள் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதால், காவல்துறையினர் அவர்களை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்வதற்குத் துணைபோய் விடுவார்களோ என்கிற கவலையும் உடன் எழுகிறது. வழக்கமாக நடைமுறையில் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றுவதுதானே காவல்துறையினரின் முதன்மையான கடமையாக உள்ளது. ஒருவேளை அச்சிறுமி வாக்குமூலத்தில் அவ்வாறு கூறமுடியாமல் போயிருந்தால் குற்றவாளிகளைக் கைதுசெய்வது நடந்திருக்குமா என்பதே கேள்விக்குறி தான்! எனவே, எக்காரணத்தை முன்னிட்டும் காவல்துறையினர் ஆளுங்கட்சியினரின் அழுத்தத்துக்கு ஆளாகிவிடாமல், அவர்களை ஜாமீனில் வெளிவிடாமல், “சிறார் நீதி சட்டம் 2015இன்” கீழ், சிறப்பு-விரைவு நீதிமன்றத்தில் இவ்வழக்கை நடத்தி, விரைந்து கடுமையாகத் தண்டிக்க ஆவன செய்யவேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்,”ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என்ற அதிகார மமதையே கொலையாளிகளை இப்படுபாதக செயலை செய்ய அடிப்படைக் காரணமாய் அமைந்திருக்கிறது. கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்று அறிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,”2018 மார்ச் மாதத்தில் கோவை பன்னிமடையில் 6 வயது சிறுமி பாலியல் படுகொலை, அதே வருடம் செப்டம்பர் மாதம் தேனி அல்லிநகரத்தில் 12 வயது சிறுமி ராகவி படுகொலை, அக்டோபரில் சேலத்தில் சிறுமி ராஜேஸ்வரி கழுத்தறுத்துக் கொலை, 2020 சனவரி மாதம் விருதுநகரில் 8 வயது சிறுமி பாலியல் படுகொலை, 2014ல் சேலம் வாழப்பாடியில் சிறுமி பூங்கொடி படுகொலை” என தொடர்ச்சியாக பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் படுகொலைகள் நடந்து வருவதை குறிப்பிட்டு ”அரசு இது குறித்து சிறப்பு கவனமெடுப்பதில்லை எனவும், சமூக ஒழுங்கில்லாத அரசின் மது விற்பனையும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு காரனாமாக அமைவது மட்டுமின்றி சிறுமி ராஜேஷ்வரியின் பாலியல் படுகொலையை கண்டித்து பேசியதற்காக வழக்குப் பதிந்து அரசு மறைமுகமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் படுகொலை குற்றங்களுக்கு துணை போவதாக” குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை அடுக்குமாடி குடியிருப்பொன்றில் மாற்றுத்திறனுடைய 11 வயது சிறுமியை 17 நபர்கள் ஒருவருட காலம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு மற்றும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் என அடுத்தடுத்த பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
சமூகத்தில் நிலவுகின்ற சாதிய ஆதிக்கமும், இயல்பாகவே குடும்ப அமைப்பு முறையில் நிலவுகின்ற ஆணாதிக்கமும், கட்சி/ சாதிய அமைப்புகள் தருகின்ற அதிகார மமதையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு காரணமாக அமைகின்றன. கட்டுப்பாடில்லாத, வரன்முறையற்ற குடிப்பழக்கம் ஆதிக்க, அதிகார மனநிலையின் குற்றச் செயலை அதிகரிக்கிறது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளையும், குற்றங்களையும் அரசு உடனடிக் கவனமெடுத்து களைய வேண்டிய அவசியத்தையே சமீப கால மிருகத்தனமான நிகழ்வுகள் காட்டுகின்றன. அதையே அரசியல் கட்சியினர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் எழுப்பும் குரல்களும் முன்னிறுத்துகிறது.