ஜோதிஸ்ரீ துர்கா

“Iam Sorry Iam Tired” இன்று ஒரே நாளில் நீட் தேர்வு பலியிட்ட மூன்று தமிழக மாணவர்கள்..4 ஆண்டுகளில் 14 மாணவர்கள்.

நீட்  தேர்வு அச்சம் காரணமாக மதுரையில் ஜோதிஸ்ரீ துர்கா என்கிற மாணவியும், தர்மபுரியில் ஆதித்யா என்ற மாணவனும், திருச்செங்கோட்டில் மோதிலால் என்ற மாணவனும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்று ஒரே நாளில் மூன்று மாணவர்களை நீட் தேர்வின் காரணமாக தமிழ்நாடு இழந்து நிற்கிறது.

கடந்த மாதம் கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ, கடந்த வாரம் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், இன்று ஜோதிஸ்ரீ துர்கா, ஆதித்யா, மோதிலால் என்று நீட் தேர்வு பலியிடும் பிஞ்சுகளின் துயரப் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.

ஜோதிஸ்ரீ தற்கொலை செய்து கொள்வதற்கு எழுதி வைத்திருக்கும் கடிதம் அனைவரின் மனதையும் உலுக்கியிருக்கிறது.

அப்பா, அம்மா, சகோதரன், சகோதரி, தன்னை மகள் போல வளர்த்த அத்தை, மாமா, தாத்தா, பாட்டி மற்றும் ஆசிரியர்கள் எல்லோரிடமும் வணக்கம் தெரிவித்தும் மன்னிப்பு கேட்டும், யாரும் தன்னால் கலங்க வேண்டாம் என்றும் கடிதம் எழுதி வைத்துள்ளார் ஜோதிஸ்ரீ. 

தோழிகள் பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களிடமும் மனம் வருந்த வேண்டாம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த நீட் தேர்வு கொடுக்கும் அச்சத்தையும் மன அழுத்தத்தையும் தாங்க முடியவில்லை என்று கடிதத்தினை முடித்துள்ளார். 

ஜோதிஸ்ரீ துர்காவின் உருக்கமான கடிதம்

”நீங்கள் என்னை பெரிய ஆளாக மாற்ற முயற்சி செய்கிறீர்கள். அது உங்கள் தவறல்ல. உங்களையும் நான் குறை சொல்லவில்லை. அப்பா, அம்மாவை நேசிப்பது போல நண்பர்களையும் அதிகமாக நேசிக்கிறேன். எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்த அப்பாவும், என் மீது அதிக அன்பு காட்டிய அம்மாவும் என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் என் மீது அதிக எதிர்பார்ப்பை வைத்திருக்கிறீர்கள்.

நானும் நீட் தேர்விற்கு நன்றாக தயார் செய்து இருக்கிறேன். ஆனாலும் பயமாக இருக்கிறது. ஒருவேளை மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைக்காவிட்டால் நாம் அனைவரும் எடுத்த முயற்சிகள் வீணாகிவிடும்.

எனவே என்னை அனைவரும் மன்னித்து விடுங்கள். 

அன்புள்ள அப்பா அறிவது, நீங்கள் இதய நோயாளி. அதனால் மனம் கலங்காதீர்கள். உங்கள் உடல்நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். இரவு நீண்ட நேரம் பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.

எப்பவும் எனக்கு நீங்கள் தேர்வு செய்த ஆடைகள்தான் ரொம்ப பொருத்தமாக இருக்கும். அதை எப்போதும் நினைத்து பெருமை கொள்வேன். உங்கள் உடல்நிலையை பேணுங்கள். தம்பி ஸ்ரீதரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். உலகத்திலேயே நீங்கள் தான் சிறந்த தந்தை.

எனவே உங்கள் உடல் நிலையை அதிக அக்கறை எடுத்து செயல்படுங்கள். இரவில் நீண்ட நேரம் செல்போன் பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். மறக்காமல் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எப்பவும்போல நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம். எனது தங்க சங்கிலியை நீங்கள் அணிந்து கொள்ளுங்கள்.

நான் உங்களிடம் நிறைய சொல்ல வேண்டும் என நினைத்தேன். ஆனாலும் நேரம் இல்லை. தம்பி ஸ்ரீதர் உன்னை நான் அதிகம் நேசிக்கிறேன். ஆனால் நான் உன்னை இழந்து விட்டேன். அதற்காக நீ என்னை மன்னித்து விடு.

அப்பா, அம்மா மீது பாசமாக நடந்து கொள். அவர்களை நன்றாக பார்த்துக்கொள். அவர்களுக்கு நீ மட்டும்தான் இருக்கிறாய். எனவே கவலைப்படாதே. நீ கவலைப்பட்டால் அப்பா, அம்மாவும் சோகமாகி விடுவார்கள்.

நீயும் பெரியவனாகி உயர்கல்வி படிக்கப் போகிறாய். நன்றாகப் படி. ரொம்ப நேரம் செல்போனில் கேம் விளையாடாதே. அப்படி கேம் விளையாடினால் அதற்கு அடிமையாகி விடுவாய். அப்பாவும், அம்மாவும் உன்னைத் தான் நம்பி இருக்கிறார்கள். எனவே அவர்களை ஏமாற்றி விடாதே. எப்போதும் மகிழ்ச்சியாக இரு. எனது இந்த முடிவுக்கு எனது பெற்றோரும், உறவினர்களும் கலங்க வேண்டாம்.

இந்த கடிதத்தை நான் எழுதி வைத்துள்ளேன். கடிதத்தை பார்த்தவர்கள் எனது பெற்றோரிடம் கொடுக்கவும். 

நீங்க என் மேல நிறைய எதிர்பார்ப்பு வச்சிருக்கீங்க. என்னை மன்னிக்கவும். ஒரு வேளை எனக்கு சீட் காலேஜ்ல கிடைக்கலனா எனக்காக நீங்க பட்ட கஷ்டம் எல்லாம் வீணா போயிடும்.

Iam Sorry Iam Tired.” 

என்று அனைவருக்கும் கண்ணீர் வரவைக்கும் உருக்கமாக கடிதத்தினை முடித்திருக்கிறார் ஜோதிஸ்ரீ.

ஜோதிஸ்ரீ-ன் கடிதம்

ஜோதிஸ்ரீ துர்காவின் மன வலியைப் பேசும் கடித வரிகளான #IamSorryIamTired என்பது நீட் தேர்வுக்கு எதிரான முழக்கமாக சமூக ஊடகங்ககளில் மக்களால் ட்ரென்ட் செய்யப்படுகிறது.

நீட் தேர்வு ஏற்படுத்திய மன அழுத்தத்தின் காரணமாக மட்டும் இந்த ஆண்டு சுபஸ்ரீ, விக்னேஷ், ஜோதிஸ்ரீ துர்கா, ஆதித்யா என்று இதுவரை நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

2017-ம் ஆண்டு அனிதாவில் தொடங்கிய மரணம் 

2017-ல் நீட் தேர்விற்கு எதிராக சட்டப் போராட்டம், அரசிடம் கோரிக்கைகள் என்று நீண்ட போராட்டத்தை நடத்தி வெற்றி பெற முடியாததால் இறுதியாக தன் உயிரை மாய்த்து கொண்டார் அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த அனிதா. அனிதாவின் மரணம் நீட் தேர்விற்கு எதிராக தமிழகத்தையே போராடச் செய்தது. ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.  

2018-ம் ஆண்டு நான்கு மாணவர்கள்

அதன் பின் விழுப்புரம் மாவட்டம் – செஞ்சியை அடுத்த பெரவளூர் பிரதீபா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். திருச்சி திருவள்ளூர் அவென்யூ பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ, சென்னை சேலையூரைச் சேர்ந்த ஏஞ்சலின் சுருதி, புதுச்சேரியைச் சேர்ந்த சிவசங்கரி என்று மருத்துவராய் வந்திருக்க வேண்டிய நான்கு மாணவச் செல்வங்கள் 2018-ம் ஆண்டு நீட் தேர்வின் காரணமாக தங்கள் உயிரை மாய்த்து கொண்டனர். 

2019-ம் ஆண்டு நான்கு மாணவர்கள்

2019-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீ, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கூனிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மோனிஷா, தஞ்சை மாவட்டம் – பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஸ்யா, பெரம்பலூரைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா என நான்கு மாணவர்கள் நீட் காரணமாக உயிரிழந்தனர். 

இந்த ஆண்டு இதுவரை 5 மாணவர்கள்..எப்போது நிறுத்தப்படும் நீட் மரணங்கள்?

இந்த ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த இரவிச்சந்திரன் என்பவரது மகள் சுபஸ்ரீ மனஉளைச்சல் ஏற்பட்டு கடந்த ஆகஸ்டு 18-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து கடந்த வாரம் அரியலூர் விக்னேஷ், இந்த வாரம் ஜோதிஸ்ரீ துர்கா, தர்மபுரி ஆதித்யா மற்றும் திருச்செங்கோடு மோதிலால் என நீட் உயிர் பலிகள் நீண்டு கொண்டே செல்கிறது.  

7 மாநில அரசுகள் நீட் தேர்வு வேண்டாம் என்று சொன்ன போதும் பாஜக அரசு கேட்கவில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்திலும் மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயமாக நடத்துவோம் என்று பாஜக அரசு அறிவித்தது. உச்சநீதிமன்றமும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும் திட்டமிட்டபடி செப்டம்பர் 13 அன்று நீட் தேர்வை நடத்துவதற்குத் தடை இல்லை என்று தீர்ப்பு அளித்து விட்டதும் இந்த உயிர் இழப்புகளுக்கு காரணங்களாக நிற்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *