போராட்டம் ஓவியம்

அரசுக்கு எதிராக போராடுவதை தீவிரவாத செயலாகக் கூற முடியாது – என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இரு மாணவர்கள் வழக்கில் உத்தரவு

கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டு, NIA-விடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டு மாணவர்களுக்கு 10 மாதங்களுக்கு பிணை வழங்கியுள்ள NIA சிறப்பு நீதிமன்றம், மாவோயிச இலக்கியங்களை வைத்திருப்பதாலோ, அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவதாலோ, தீவிரமான அரசியல் நம்பிக்கைகள் கொண்டிருப்பதாலோ ஒரு நபர் தீவிரவாத செயல்களுக்கு துணை போவதாக சொல்ல முடியாது என்று தெரிவித்திருக்கிறது. 

போதிய ஆதாரங்களை முன்வைக்கவில்லை என்று கூறி ஊபா (UAPA) வழக்கு பதியப்பட்ட இரு மாணவர்களுக்கு கொச்சியில் உள்ள NIA சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பண்தீரன்காவு மாவோயிஸ்ட் வழக்கு என்று அழைக்கப்பட்ட வழக்கு

ஆலன் சுஹைப் (Allan Shuaib (19)) மற்றும் துவாகா பாசல்(Thwaha Fasal (23)) ஆகிய இரு மாணவர்கள் சட்டம் மற்றும் ஊடகவியல் துறை படிப்பில் பயின்று வந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கோழிக்கோட்டில் கேரள அரசின் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இருவரும் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் ஆவர். 

காவல்துறையினர் இவர்கள் வீட்டினை சோதனையிடச் சென்றபோது மாவோயிச இலக்கியங்கள், புத்தகங்கள், ஆவணங்கள், சுவரொட்டிகள் துண்டறிக்கைகள் போன்றவை கிடைத்ததாகவும், அவற்றின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. சோதனையின்போது துவாகா பாசல் மாவோயிச ஆதரவு முழக்கங்களை எழுப்பியதாகவும் வழக்கு பதியப்பட்டது. 

பின்பு கடந்த 2019 டிசம்பர் மாதம் வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு(National Investigation Agency) வழக்கு மாற்றப்பட்டது. அதிலிருந்து அவ்விரு மாணவர்களும் நீதிமன்ற காவலிலேயே கடந்த 10 மாதங்களாக இருந்துள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் பலமுறை இவர்களின் பிணை நீதிமன்ற அமர்வுகளுக்கு சென்று மறுக்கப்பட்டுள்ளது.

பினராயி விஜயன் அரசுக்கு எழுந்த எதிர்ப்பு

அரசுக்கு எதிராக போராடுபவர்களை மாவோயிஸ்ட்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்தி கைது செய்வதற்கு காவல்துறைக்கு அதிகாரம் வழங்கியதாக பினராயி விஜயன் அரசிற்கு பல சிவில் சமூக அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் தளத்திலிருந்து கண்டனங்கள் எழுந்தன. இவ்வழக்கிற்குப் பின் கேரள கம்யூனிஸ்ட் கட்சி அவ்விரு மாணவர்களையும் கட்சியிலிருந்துயும் நீக்கியது. 

இந்த வழக்கு சி.பி.எம் கட்சிக்குள்ளும் இருவேறு கருத்துக்களை உருவாக்கியது. பினராயி விஜயன் இந்த மாணவர்கள் மாவோயிஸ்ட்கள் என்று சொன்னார். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், எம்.ஏ.பேபி, தாமஸ் ஐசக் ஆகிய தலைவர்கள் மாணவர்களுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர்.

புத்தகங்களையும், துண்டறிக்கைகளையும் ஆதாரங்களாகக் காட்டிய என்.ஐ.ஏ

செப்டம்பர் 9-ம் தேதி மாணவர்களின் பிணை குறித்ததான வழக்கு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்திற்கு (NIA Court) வந்தது. நீதிமன்றத்தில் 12 வகையான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் பெரும்பாலும் துண்டறிக்கைகள் மற்றும் புத்தகங்களே இடம்பெற்றிருந்தன. 

இந்த ஆதாரங்கள் அனைத்தும் பொதுத் தளங்களில் எளிமையாக கிடைக்கக்கூடியதும், பெரிய அளவிற்கு விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்ட ஆவணங்களே ஆகும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

அதிலும் குறிப்பாக மாதவ் காட்கில் குழு சமர்ப்பித்த சூழலியல் மற்றும் ஆதிவாசிகள் பாதுகாப்பு அறிக்கையில் உள்ள முடிவுகளை அமல்படுத்தக் கோரும் ஆவணங்கள், சோவியத் புரட்சி குறித்தான புத்தகம், மர்க்சிய மற்றும் இஸ்லாமிய சித்தாந்தங்களை விளக்கும் புத்தகங்கள், மாவோ, சேகுவாரா , காஷ்மீர் தலைவர் எஸ்.ஏ.எஸ்.கிலானி ஆகியோரின் புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற்றன. மேலும் ஊபா சட்டத்திற்கு எதிரான துண்டறிக்கைகள், குர்து இன மக்களுக்கு எதிரான துருக்கி அரசின் செயல்பாடுகளுக்கு எதிரான துண்டறிக்கைகள், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான துண்டறிக்கைகள் ஆகியவையும் சமர்ப்பிக்கப்பட்டன. 

அவர்களுக்கு மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாக காட்டுவதற்கு, அந்த மாணவர்கள் குர்து இன மக்களுக்கு ஆதரவாகவும், பணமதிப்பிழப்பு, காவல்துறை வன்முறைகளுக்கு எதிராகவும், ஜிஷா கொலை செய்யப்பட்டதற்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் கூட்டங்களில் கலந்துகொண்டு உள்ளதாக என்.ஐ.ஏ கூறியது. இதனோடு மாவோயிஸ்ட் கட்சியின் மத்திய குழு அறிக்கைகள், ஆவணங்கள் மற்றும் கொடிகள் ஆகியவற்றை மாணவர்களின் வீடுகளிலிருந்து கைப்பற்றியதாகவும் கூறியது.

ஆவணங்களில் முகாந்திரம் இல்லை என சொன்ன நீதிமன்றம்

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் எதுவும் தீவிரவாத வன்முறை செயல்களில் இரு நபர்களும் ஈடுபட்டதற்கான ஆதாரங்களாக இல்லை என்று கூறி என்.ஐ.ஏ-வின் குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ரத்து செய்தது. 

”இவை அனைத்தும் சமூக மற்றும் அரசியல் தளங்களில் விவாதிக்கப்படுகிற பிரச்சினைகள் தொடர்பானவைதான், மேலும் அனைத்து ஆர்ப்பாட்டங்களும் எந்தவொரு வன்முறையும் இல்லாமல் அமைதியான வழியில்தான் நடத்தப்பட்டுள்ளன.”

என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மாணவர்களிடமிருந்து மாவோயிஸ்ட் கட்சி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு பற்றி குறிப்பிடும்போது, 

”இந்த ஆவணங்கள் அனைத்தும் இணையத்தில் பொதுவெளியில் கிடைப்பதே…மக்களை அரசுக்கு எதிராக வன்முறையோடு போராடத் தூண்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சொல்வதற்கான எந்த முகாந்திரங்களும் இந்த ஆவணங்களில் இல்லை…மக்கள் CPI (மாவோயிஸ்ட்) இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும்படி அழைக்கப்படவில்லை. மாறாக அரசின் அநீதியான நடவடிக்கைகளாக இவர்கள் கருத்துவதனை எதிர்த்து போராடுவதற்கே அழைத்துள்ளனர். இவர்கள் குறிப்பிட்ட சம்பவங்கள் உண்மையிலேயே நியாயமானதா இல்லையா என்பது குறித்து எங்களுக்கு பிரச்சினையில்லை”

என்று என்.ஐ.ஏ நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

காஷ்மீரை ஆதரித்ததாக காட்டப்பட்ட ஆவணம்

குற்றம் சாட்டப்பட்ட ஃபாசல், CPI(மாவோயிஸ்ட்) கட்சியின் சார்பாக தயாரித்த ஆவணம் என்று ஒரே ஒரு ஆவணத்தை மட்டுமே என்.ஐ.ஏ சமர்பித்திருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. அந்த ஆவணம் ஒரு பதாகை ஆகும். “ஜம்மு-காஷ்மீரின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவைக் கோரியும், ஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை எதிர்க்கவும், இந்து பிராமண பாசிச அரசாங்கத்திற்கு எதிராகப் போராடவும்” சொல்லி அந்த பதாகை பொது இடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டது என்ற ஒரு ஆவணத்தை என்.ஐ.ஏ சமர்ப்பித்தது. 

இந்த பேனர் குறித்து கருத்து தெரிவித்த நீதிமன்றம்,

”இந்த பேனர்கள் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 மற்றும் 35(A) ஆகியவை இந்திய பாராளுமன்றத்தினால் நீக்கப்பட்டதற்குப் பின்பாக தயாரிக்கப்பட்டது தான் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இதைத் தவிர்த்து வேறு வழிகளில் இந்த நடவடிக்கைகளை பார்த்தால் தவறான முடிவுகளுக்கே நாம் வரக்கூடும்”

என்று கூறியுள்ளது.

போராடுவது அரசியல் சாசன உரிமை

”போராட்டம் செய்யும் உரிமை அரசியல் சாசனம் உறுதி செய்த உரிமையாகும்..அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முடிவுகளுக்கு எதிரான ஒரு போராட்டம், அது ஒரு தவறான காரணத்திற்காகவே இருந்தாலும், தேசத்துரோகம் என்றோ உள்நோக்கத்துடன் பிரிவினைக்கு ஆதரவாக செய்யப்பட்டது என்றோ கூற முடியாது.”

என்று நீதிபதி அனில் கே. பாஸ்கர் தெரிவித்தார்..

”மாணவர்களுக்கு எதிராக ஆதாரங்களாக அளிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில், அவை எதுவும் தடை செய்யப்பட்டவை இல்லை என்றும்,மேலும் அந்த ஆவணங்கள் இந்திய அரசு மீது வெறுப்புணர்வு அல்லது அவமதிப்பை உருவாக்கும் முயற்சி என்ற குற்றச்சாட்டினை நிறுவும் வகையிலும் இல்லை.”

என்றும் கூறியுள்ளது.

மாவோயிச புத்தகங்களை வைத்திருப்பது குற்றம் இல்லை என சொன்ன நீதிமன்றம்

”மாவோயிச இலக்கியங்களைப் படிப்பதோ, வர்க்கப் போராட்டம் குறித்து படிப்பதோ அல்லது மாவோயிசவாதியாக இருப்பதோ, அது நமது அரசியலமைப்பு சாசனத்துடன் ஒத்துப்போகவில்லை என்றாலும் கூட, அது ஒரு குற்றம் இல்லை. குற்றம் சாட்டப்பட்ட நபரிடமிருந்து வன்முறையைத் தூண்டுவதற்கான செயல்கள் இருந்தால் மட்டுமே ஒரு நபரின் அரசியல் நம்பிக்கைகள் பாதகமானதாகக் கருதப்பட முடியும்”

என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும்

”குற்றம்சாட்டப்பட்டுள்ள அந்த இரு மாணவர்களும் வலுவான அரசியல் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் என்பதும், அரசை விமர்சிக்கும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வந்ததும் தெரிய வருகிறது. ஆனால் இச்செயல்பாடுகளால் இவர்கள் மாவோயிஸ்ட் அமைப்பை சார்ந்தவர்கள் என்றோ, இவர்களை தடைசெய்யப்பட்ட அமைப்புகளே இயக்குகின்றன என்றோ கூறிவிட முடியாது”

என்றும் கூறியுள்ளது.

ஊபா சட்டத்தை ரத்து செய்து பிணை வழங்கிய நீதிமன்றம்

”குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொரு சர்ச்சைக்குரிய அரசியல் மற்றும் சமூக போராட்டங்களில் துடிப்பாக பங்கெடுத்த காரணத்தினால் இவர்கள் தீவிரவாத சித்தாந்தங்களுக்கு உட்பட்டு இருப்பதைப் போல தெரிகிறது. அதன் காரணமாக அவர்களுக்கு தடை செய்யப்பட்ட அமைப்புகளோடு தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என குற்றம்சாட்டும் தரப்பினர் எண்ணலாம். எனினும் இக்குற்றங்களை நிரூபிக்கும் வகையில் வழக்கு விசாரணைக் குழு போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. ஆதலால் மாணவர்கள் மீது போடப்பட்ட ஊபா சட்டம் ரத்து செய்யப்படுகிறது”

என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதே நேரத்தில் நீதிபதி பாஸ்கர்,

“இந்த நீதிமன்றம் மாணவர்கள் மீது கனிவான பார்வையுடன் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பிணை அவர்களின் அரசியல் நிலைப்பாட்டினை மறுஆய்வு செய்ய உதவும்”

என்றும் கூறினார்.

நன்றி : The Wire
ஓவியம்: பரிப்லாப் சக்ரபர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *