கபீர் கலா மஞ்ச்

தொடரும் கைது; பீமா கொரோகான் வழக்கில் கபீர் கலா மஞ்ச் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கைது

புனே நகரத்தில் டிசம்பர் 31, 2017 அன்று நடைபெற்ற எல்கர் பரிஷத் (Elgar Parishad) நிகழ்வினை ஒருங்கிணைத்த 250 தலித் மற்றும் மனித உரிமை  அமைப்புகளில் ’கபீர் கலா மஞ்ச்’ அமைப்பும் ஒன்று. 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் ஏற்படுத்திய பாதிப்பின் அடிப்படையில் கவிதை, நாடகம் போன்ற கலை வடிவங்களில் அரசியலைப் பேசும் இடதுசாரி அடிப்படையிலான கலாச்சார அமைப்பாக மகாராஷ்டிராவில் கபீர் கலா மஞ்ச் என்ற இந்த அமைப்பு உருவானது. சாதியவாதம், விவசாயிகள் பிரச்சினை, மதவாதம் என பல பிரச்சினைகள் குறித்து பாடல் மற்றும் நாடக வடிவில் பரப்பி வருகிறது.

இந்த அமைப்பைச் சார்ந்த கைச்சோர் (Gaichor) மற்றும் சாகர் கோர்கே (Sagar Gorkhe) ஆகிய இருவரும் பீமா கொரேகான் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்பட்டு செப்டம்பர் 7-ம் தேதி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டனர். கபீர் கலா மஞ்ச் அமைப்பு மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புடைய அமைப்பு என்று தேசிய புலனாய்வு முகமை குற்றம் சாட்டியுள்ளது. 

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 10-ம் தேதி அதே அமைப்பைச் சார்ந்த ஜோதி ஜக்தாப் (Jyoti Jagtap) கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் சேர்த்து இதுவரை பீமா கொரேகான் வன்முறையை மையமாக வைத்து மனித உரிமை செயல்பாட்டாளர்கள், தலித் அறிவுஜீவிகள், இடதுசாரி சிந்தனையாளர்கள் என் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் பீமா கொரேகான் கலவரம் ஏற்படுவதற்கு காரணமாய் அமைந்த மிலிந்த் எக்போடே மற்றும் சம்பாஜி பிடே (Milind Ekbote and Sambhaji Bhide) ஆகிய இந்துத்துவா தலைவர்களின் வெறுப்புப் பிரச்சாரம் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், அதனை மாவோயிஸ்ட்களின் சதி என்று புனைந்து நாடு முழுவதுமுள்ள இடதுசாரி அறிவுஜீவிகளை குறிவைப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சாதி கலவரத்தை துண்டும் சதியாகவும், பிரதமர் மோடியை கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் கூறி சமூக செயல்பாட்டாளர்களும், தலித் அறிவுஜீவிகளும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

கைது செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன் முகநூலில் வீடியோ வெளியிட்ட கைச்சோர் மற்றும் கோர்கே ஆகிய இருவரும், இதற்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களுக்கு பீமா கொரேகான் கலவரத்தில் தொடர்புள்ளது என்று வாக்குமூலம் தரும்படி  NIA தங்களை மிரட்டுவதாக தெரிவித்துள்ளனர். 

இதேபோன்று 9 வருடங்களுக்கு முன் 2011-ம் ஆண்டு கபீர் கலா மஞ்ச் அமைப்பைச் சார்ந்தவர்கள் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டனர். 2013-ம் ஆண்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர். பின் 2017-ம் ஆண்டு அவர்கள் பிணையில் விடப்பட்ட இந்த சூழ்நிலையில் மீண்டும் பீமா கொரேகான் கலவரத்தை மையமாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *