சென்னை உயர் நீதிமன்றம் தமிழக குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் மறுகுடியமர்வு மற்றும் அவர்களது வாழ்வாதாரம் குறித்தும் அறிக்கை அளிக்கச் சொல்லி தமிழ்நாடு காவல்துறைத் தலைவர், சமூக நலத்துறை செயலாளர் மற்றும் கல்வித்துறை செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.
சரண்யா என்பவர் தன் தாய் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவின் மீது நடந்த விசாரணையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நகரில் இருந்து 20 கி.மீ தூரத்திற்கு மேலாக மக்களை வெளியேற்றுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
1997-ம் ஆண்டு 150 சதுர அடி கொண்ட மூன்றாயிரம் குடியிருப்புகளை கட்டியது தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம். அதை 3.2.2000 அன்று அன்றைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். அதுதான் கண்ணகி நகர். சென்னை மாநகரின் மையத்தில் இருக்கும் குடிசைவாழ் மக்களை மாநகரை விட்டு அப்புறப்படுத்தி, மாநகருக்கு வெளியே அனுப்பும் பகுதியாக விரிவடைந்து, இன்று 15 ஆயிரத்து 566 குடியிருப்புகளாக வளர்ந்து நிற்கிறது. சென்னை மாநகரிலிருந்து ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய நவீன தீண்டப்படா பகுதியாக விரிவடைந்து வருகிறது. புதிதாக 10 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் பழைய மாமல்லபுரம் சாலையில் (OMR) ‘செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு’ உள்ளது. இது சென்னை மாநகராட்சியின் 200-வது வார்டாக இருந்த போதிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், தோமையர் மலை (St Thomas mount ) ஒன்றிய எல்லைக்குள் உள்ளது. இங்கு சுமார் 6,700 குடும்பங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 1800 வீடுகளில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மீதம் உள்ளவற்றில் சென்னை மாநகரின் 23 குடிசைப் பகுதிகளிலிருந்து கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டவர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
சென்னையில் பல்வேறு பகுதிகளான சீனிவாசபுரம், நொச்சிக்குப்பம், தியாகராய நகர், நம்பிக்கை நகர், திடீர் நகர், சத்யா ஸ்டூடியோ அருகில், ஸ்டாலின் நகர், கோட்டூர்புரம், தனக்கோடிபுரம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ஓட்காட் குப்பம், ஓசூர் குப்பம், திருவான்மியூர் குப்பம், சூளைமேடு, பெசன்ட் நகர், அடையார், பட்டினப்பாக்கம், டுமீங் குப்பம், சத்யா நகர், பாரதியார் நகர் என பல பகுதிகளில் இருந்து இவர்கள் இங்கு குடியமர்த்தப்பட்டு இருகிறார்கள். இந்த பகுதிகளுக்கு உள்ளிட்ட எல்லா காவல் நிலையங்களில் இருந்தும் இந்த மக்களின் மீது கைது நடவடிக்கை அதிகமாக நடக்கிறது. அந்த பகுதிகளில் நடக்கும் குற்ற செயல்களுக்கும் இங்குள்ள இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.