அய்யங்காளி

தென்னிந்திய சமூக மாற்றத்தின் கலகக்காரர் அய்யங்காளியை அறிவீர்களா?

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராளி அய்யங்காளி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு

திருவாங்கூர் சமஸ்தானத்தில் வெங்கனூர் அருகில் உள்ள பெருங்காட்டுவிளா என்னும் ஊரில், 1863-ம் ஆண்டு திருவிதாங்கூரில் அய்யன்-மாலா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர்தான் அய்யங்காளி.

கடவுள்களின் தேசம் என்று வர்ணிக்கப்படும் இன்றைய கேரளம் அல்ல அன்றைய திருவாங்கூர் சமஸ்தானம். சாதி ஆதிக்கமும், வர்ணாசிரம ஆதிக்கமும், நிலப்பிரபுத்துவமும் கோலோச்சிய மிகவும் பிற்போக்குத்தனமான தீண்டாமைக் கொடுமைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்ட நிலம் அது.

வயலில் உழும் ஏர்கலப்பையில் மாடுகளுக்குப் பதிலாக ஒடுக்கப்பட்ட மக்களைப் பூட்டி உழும் அளவுக்கு மோசமானதாக இருந்தது. பொது தெருக்கள், கோவில் சந்தை என அனைத்தும் மறுக்கப்பட்டவர்களாக ஒடுக்கப்பட்ட மக்கள் இருந்தனர்.

இந்த மனிதத் தன்மையற்ற பிற்போக்கு செயல்களை மாற்றும் போரில் முதல் அடியை எடுத்து வைத்தவர் மாவீரர் அய்யங்காளி.

அய்யங்காளி இரண்டு வெள்ளை மாடுகளை வாங்கி மாட்டு வண்டியாகப் பூட்டி மாடுகளின் கழுத்தில் மணியைக் கட்டி தனி ஆளாக வீதியில் ஓட்டினார். தினமும் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தெருக்களில் வெள்ளை வேட்டி கட்டி, தலைப்பாகையுடன் மாட்டு வண்டியை ஓட்டினார். மாட்டு வண்டியில் அனுமதி மறுக்கப்பட்ட தெருவில் பயணிப்பதுதான் அவரது முதல் போராட்டமே. துணிச்சலும் உடல் வலுவும் உள்ள அய்யங்காளி தெருக்களில் பயணித்ததைப் போல, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களால் செல்ல முடியவில்லை.

அதனால் மக்களை அழைத்துச் செல்லும் பணியை அய்யங்காளி முன்னெடுத்தார். புத்தன் சந்தை எனும் பொது சந்தைக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி, விடுதலை ஊர்வலம் என்ற பெயரிட்டு, எந்த தெருக்களில் நடக்க உரிமை மறுக்கப்பட்டதோ, அதே தெருக்களின் வழியாக அழைத்துச் சென்றார்.

இந்த ஊர்வலம் பாலராமபுரத்தில் சாலியர் தெருவில் சென்றபோது  மறைந்திருந்த ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களைத் தாக்கினர். இதனால் ஒடுக்கப்பட்ட மக்களும் பதில் தாக்குதலில் ஈடுட்டனர். 

இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள திருப்பி அடித்த முதல்நிகழ்வு இதுதான். வரலாற்றில் இது சாலியர் வீதிக் கலகம் என்று அறியப்படுகிறது.

சாலியர் வீதிக் கலகம் பற்றிய செய்திகள் மணக்காடு, கழக்கூட்டம், கன்னியாபுரம் என்று திருவாங்கூர்  சமஸ்தானம் முழுக்க பரவியதால், ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் உரிமைக்காக போராடத் துவங்கினர். விவசாய வேலைகளைப் புறக்கணித்து மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ஒடுக்கப்பட்ட மக்கள் போராடத் துவங்கினர். போராடிய மக்களை அச்சுறுத்த ஆதிக்க சாதியினர் தாக்குதலைத் தொடுத்தனர். அதன் விளைவு போராட்டத்தினை மேலும் வலுவடையச் செய்தது. 

அக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட புலையர் சமூக மக்களுக்கு அரசாங்க கல்வி நிலையங்களில் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால், போராட்டங்களோடு மட்டுமல்லாமல் 1904-ம் ஆண்டு அய்யங்காளியின் கல்வி நிலையம் ஒன்றை அமைத்தார். அய்யங்காளியின் சொந்த ஊரான வெங்கனூரில் அமைக்கப்பட்ட இந்த பள்ளிதான்  பட்டியல் வகுப்பினருக்காக முதன்முதலில் அமைக்கப்பட்ட கல்வி நிலையமாகும்.

அனைத்து தரப்பு ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களையும் ஒருங்கிணைத்து சாது ஜன பரிபாலன சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் 1907-ம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் தலைவராக அய்யங்காளியே தேர்ந்தெடுக்கப்பட்டார். விவசாயத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வேண்டும் என்றும், அந்த விடுமுறை நாளில் சங்க சேவையில் மக்கள் ஈடுபட வேண்டும் என்றும் கூறி அமைப்பாக்க முயற்சித்தார்.

இந்த சங்கம் முன்னெடுத்த முக்கியமான போராட்டமாக, 1912-ல் பட்டியல் வகுப்பு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நெடுமங்காடு சந்தையில் அய்யன்காளி நுழைந்தார். நீண்ட போராட்டத்திற்குப் பின் அனைவரும் சந்தையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

அரசுப் பணிகளில் ஒடுக்கப்பட்ட புலையர் சமூகத்தின் ஒதுக்கீட்டிற்காக 1916-ல் அய்யங்காளி போராடத் துவங்கினார். 1916-ல் இதற்காக சாது ஜன பரிபாலினி என்ற இதழை வெளியிட ஆரம்பித்தார். தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கியமான வைக்கம் போராட்டத்தில் அய்யங்காளியின் பங்கு முக்கியமானது. பழ.அதியமான்அவர்கள் ’வைக்கம் போராட்டம்’ எனும் நூலில்  அந்த போராட்டத்தினைப் போன்ற ஒரு போராட்டம் துவங்க காரணாமாக அங்கு வாழ்ந்தவர் அய்யங்காளி என்பார். வைக்கம் வெற்றி விழாவில் காந்தி அய்யங்காளியை அதனால்தான் பாராட்டினார்.

அய்யங்காளி 1940-ல் புலையர் மகாசபை என்ற அரசியல் அமைப்பை உருவாக்கினார். அது இன்றுவரை இயங்குகிறது. ஈழவர்களின் தலைவரான நாராயண குரு அவர்கள் அய்யங்காளியின் முதன்மை மாணவராவார்.

தென்னிந்தியாவில் நிகழ்ந்த சமூக மாற்றங்களுக்கான விதையை விதைத்தவர்களில் ஒருவரான அய்யங்காளி 1941 சூன் 18 அன்று மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *