வரலாறு எங்கிலும் நடந்த இனப்படுகொலைகள், ஒரே நாளில் திடீரென நடந்தேறியவையல்ல. அதற்கான திட்டமிடலும், பெரும்பான்மை மக்கள் மத்தியிலான ஒப்புதலும் பன்னெடுங்காலமாக ஆளும் வர்க்கத்தின் உதவியுடன் கட்டமைக்கப்பட்ட பின்பே கோரமான இனப்படுகொலை அறங்கேறியிருக்கின்றது. ஒரே சமூகத்தில் வாழும் சிறுபான்மையின மக்களை எதிரிகளாக சித்தரிக்கும், புறந்தள்ளப்பட்ட அங்கீகரிக்கப்படாத கோட்பாடுகள், சமூக பொருளாதார மாற்றங்கள் காரணமாக, எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வாக, ஆளும் வர்க்கத்தின் பக்கம் நின்று தன்னை முன்னிறுத்தி பெரும்பான்மை மக்களின் ஒப்புதலைப் பெறும்போது, அது பாசிசமாக உருவெடுக்கிறது. எதிரிகளாக சித்தரிக்கப்படும் சிறுபான்மையின மக்களை கொஞ்சம் கொஞ்சமாக சமூகத்தில் இருந்து விலக்குவதில் இருந்து பாசிசம் தனது செயல்பாட்டைத் தொடங்குகிறது.
நாஜிக்களும், இந்துத்துவ பிரச்சாரமும்
1933-ல் ஆட்சிக் கட்டிலில் ஏறிய ஹிட்லர், அடுத்த நாளே யூதர்களை கொல்லத் தொடங்கவில்லை. முதலாம் உலகப் போரின் தோல்விக்கு காரணம் யூதர்களும் கம்யூனிஸ்டுகளும் என்ற பிரச்சாரத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்த பின், யூதர்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்கும் சட்டம் இயற்றப்பட்டது. யூதர்களின் வணிக நிறுவனங்களும் கடைகளும் குறிவைக்கப்பட்டன. அடிமாட்டு விலைக்கு அதை விற்கும் நிலைக்கு யூதர்கள் தள்ளப்பட்டனர். அரசு பள்ளிகளில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. தியேட்டர்களுக்கு சென்று படம் பார்பதற்கும், சில தெருக்களில் நடப்பதற்கும் கூட அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இப்படி படிப்படியாக யூதர்களை ஜெர்மனியின் சமூக வாழ்வில் இருந்து விலக்கிய பிறகு கடைசியாக தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு நகரங்களின் ஒரு பகுதியில் யூதர்கள் அடைக்கப்பட்டு, இறுதியில் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
நாஜிக்களுக்கு எப்படி யூதர்களோ, அதே போல் ஆர்.எஸ்.எஸ்-க்கு இஸ்லாமியர்கள். இந்தியாவில் எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு “ஜிகாத்” என்ற அடைமொழியைக் கொடுத்து ஒட்டுமொத்த பழியையும் ஆர்.எஸ்.எஸ்-ம், பா.ஜ.க சார்பு ஊடகங்களும் இஸ்லாமியர்கள் மீது போட்டு விடுகின்றன. கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் கூட, அதை கட்டுப்படுத்துவதில் காட்டிய ஆர்வத்தைக் காட்டிலும் , தப்லிகி ஜமாத் மாநாட்டை மையமாக வைத்து இஸ்லாமியர்கள் மீது பழி போடுவதிலேயே ஹிந்துத்துவ சக்திகளும், ஊடகங்களும் குறியாக இருந்தன. அதற்கு அவர்கள் கண்டுபிடித்த வார்த்தைதான் ”கொரோனா ஜிகாத்”. இந்தியாவில் கொரோனாவை பரப்பவே இந்த மாநாடு நடத்தப்பட்டது என்ற வகையில் பெரும் பிரச்சாரம் நடைபெற்றது.
யூ.பி.எஸ்.சி ஜிகாத் எனும் வெறுப்பு பரப்புரை
அந்த வரிசையில் ஆர்.எஸ்.எஸ் கையிலெடுத்திருக்கும் அடுத்த பிரச்சாரம் தான் “UPSC ஜிகாத்”. UPSC தேர்வுகளில் அதிக அளவில் இஸ்லாமியர்கள் தேர்ச்சி அடைகிறார்கள், அப்படித் தேர்ச்சி அடைவதன் மூலம் அவர்கள் அரசுப் பதவிகளை திட்டமிட்டு கைப்பற்ற முயல்கிறார்கள் என்ற பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவ சார்பு செய்தி நிறுவனமான சுதர்ஷன் டி.வி மூலம் தொடங்கியிருக்கிறது. 2019-ம் ஆண்டு நடந்த UPSC தேர்வுகளில் மக்கள் தொகையில் 13% க்கும் மேலாக இருக்கும் இஸ்லாமியர்கள், வெறும் 5%, அதாவது 42 பேர் மட்டுமே தேர்வாகியிருக்கிறார்கள். ஆனால் அதேசமயம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள உயர்சாதியினருக்கான இடஒதுக்கீட்டில் (EWS) 78 பேர் தேர்வாகியுள்ளனர். இதைத் தவிர பொதுப்பிரிவில் தேர்ச்சி பெற்ற 304 பேரிலும் உயர் சாதியினரே அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. உண்மை நிலை இப்படி இருக்க, 5% இஸ்லாமியர்கள் தேர்ச்சிபெற்றதைத் தான் ஜிகாத் என்று சித்தரிக்கிறது இந்த ஆர்.எஸ்.எஸ். ஊடகம்.
தொடர்ச்சியாக வெறுப்பை பரப்பும் சுதர்ஷன் தொலைக்காட்சி
இந்த தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியரான சுரேஷ் சவ்ஹன்கே ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-ல் பதவிகள் வகித்தவர். இதற்கு முன்னேயும் பல முறை இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரங்களையும், போலிச் செய்திகளையும் இந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. மோடி தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டை விட்டே போகப் போவதாக ஷாருக்கான் கூறினார் என்றும், உத்திரப்பிரதேச காவல்துறைக்கு எதிராக மசூதியில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது என்றும் சுதர்ஷன் தொலைக்காட்சியில் வந்த போலிப் பிரச்சாரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

2017-ம் ஆண்டு மதக்கலவரத்தை தூண்டும் வகையில் செய்தி வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டார். 2019-ம் ஆண்டு இதேபோல, மலபார் கோட் நிறுவனத்திற்கு எதிராக போலியான செய்தி வெளியிட்டதற்காக கோழிக்கோடு நீதிமன்றம் சுரேஷ் சவ்ஹன்கேவுக்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
சுதர்ஷன் தொலைக்காட்சி வெளியிட்ட “UPSC ஜிகாத்” நிகழ்ச்சி முன்னோட்டத்திற்கு Indian Police Service (Central) Association உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தில்லி உயர் நீதிமன்றம் இந்த நிகழ்சியை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது. ஆனால் ஆதே சமயம் உச்ச நீதிமன்றம் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை ஏதும் இல்லை என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஒளிபரப்படவிருந்த இந்த நிகழ்ச்சி தற்போதைக்கு இந்த தடையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஊடகக் கட்டுப்பாட்டில் இரட்டை நிலைப்பாடு
இப்படி பல கண்டனங்கள் எழவே தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் சுதர்ஷன் தொலைக்காட்சியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதே அமைச்சகம்தான் தில்லி கலவரத்தின் போது ஆர்.எஸ்.எஸ் பற்றியும், கலவரத்தை காவல்துறை வேடிக்கை பார்ப்பதாகவும் செய்தி வெளியிட்டதற்காக மீடியா ஒன் மற்றும் ஏசியாநெட் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை 48 மணிநேரம் தடை செய்தது. ஆனால் இசுலாமியர்கள் மீது தொடர்ந்து வெறுப்பைக் கக்கும் இது போன்ற ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றால் இசுலாமியர்களை நாடற்றவர்களாக்க முயலும் இந்த ஆர்.எஸ்.எஸ் அரசின் கீழ் நடக்கும் இது போன்ற பிரச்சாரங்கள், சமூக வாழ்வின் எல்லா அங்கங்களில் இருந்தும் இஸ்லாமியர்களை நீக்குவதற்கான மன ஓட்டத்தை பொதுபுத்தியில் திணிக்கும் வேலையை செய்கின்றன. இப்படிப்பட்ட ஆபத்தான பரப்புரைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அனைவரின் முன்பும் உள்ள கடமையாக இருக்கிறது.
Reference:
- https://www.hindustantimes.com/education/upsc-civil-services-final-result-2019-ias-first-preference-for-upsc-topper/story-Uw1LpCa6bvASEXvERzxTgO.html
- https://theprint.in/india/governance/5-muslims-among-new-civil-services-recruits-only-one-in-top-100/474488/
- https://thewire.in/communalism/sudarshan-news-tv-ips-association-upsc-muslims-jihad
முதன்மைப் படம்: இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் துப்பாக்கியுடன் புகைப்படத்தில் நிற்கும் சுதர்ஷன் தொலைக்காட்சி தலைமை ஆசிரியர் சுரேஷ் சவ்ஹன்கே