ஹரியானாவில் செயல்படும் நிறுவனங்களினுடைய வேலைவாய்ப்புகளில் ஹரியானா மாநிலத்தவர்களுக்கு 75% கட்டாய வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென அம்மாநில அரசு அவசர சட்டத்தை உருவாக்க உள்ளது. தனியார் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், சேவை நிறுவனங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்டவற்றில் 50,000 ரூபாய்க்கு குறைவான ஊதியமுடைய வேலைவாய்ப்புகளில் ஹரியானா மாநில வாசிகளுக்கு 75% கட்டாய வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்காக இந்த அவசரச் சட்டம் இயற்றப்படவுள்ளது.
இந்த வாரம் 6-ம் தேதி கூடிய ஹரியானா அமைச்சரவைக் கூட்டத்தில் ஹரியானா மாநில வாசிகளுக்கான 75% வேலைவாய்ப்பு அவசரச் சட்டத்தினை உருவாக்குவது குறித்து முடிவெடுக்கப்பட்டது. வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்காக கொண்டுவரப்படும் இந்த அவசரச் சட்டம் “ஹரியானா மாநிலவாசிகளுக்கான வேலைவாய்ப்பு அவசரச் சட்டம் 2020” என அழைக்கப்படும். இதற்கான சட்ட வரைவு அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
இதுப்பற்றி கருத்து தெரிவித்த ஹரியானா மாநில துணை முதல்வர் துஷ்யந்த் செளதாலா,”இந்த வேலைவாய்ப்பு சட்டமானது புதிதாக தொடங்கப்படவுள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு இது பொருந்தாது” என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் தாயக மாநில வாசிகளுக்கான வேலைவாய்ப்புச் சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆந்திராவில் செயல்படும் தொழில் நிறுவனங்களில் ஆந்திரவாசிகளுக்கு 75% வேலைவாய்ப்பை வழங்குவதற்கான “தொழிற்சாலை, நிறுவனங்களில் உள்ளூர்வாசிகளுக்கான ஆந்திர பிரதேச வேலைவாய்ப்பு சட்டம் 2019”ஐ ஆந்திர அரசு இயற்றியது. நிலங்களையும், தங்களுடைய வாழ்வாதாரங்களையும் தொழிற் நிறுவனங்களுக்கு வழங்குகின்ற மக்களுக்கு அத்தொழில் நிறுவனங்களிலே வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டதாக ஆந்திர அரசு கூறியது.
தமிழ்நாட்டிலும் தொடர்ச்சியாக அரசு மற்றும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் “தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே” என்கிற கோரிக்கைகள் பல்வேறு அரசியல் கட்சியினரால் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசுப் பணியிடங்களில் வேற்று மாநிலத்தவர்களுக்கு, குறிப்பாக வட மாநிலத்தவர்களுக்கே அதிக இடங்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. ரயில்வே பணியிடங்களுக்கான இடங்களை நிரப்புதல், தபால் துறை தேர்வுகள், நெய்வேலி NLC பணியிடங்கள், ஆவடி ராணுவ தொழிற்சாலை பணியிடங்கள், ICF ரயில் பெட்டி தொழிற்சாலை பணியிடங்கள் என பலவற்றில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் மற்றும் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் இணைந்து போராட்டத்தினை நடத்தினர். மண்ணிண் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பு என்ற அடிப்படையில், இக்கோரிக்கைகள் ட்விட்டரிலும் ட்ரெண்ட் செய்யப்பட்டன. இந்த இணையதள ட்ரெண்டிங்கிற்கு ஆதரவாக திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி, உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். இதே போன்று அனைத்து தமிழ் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் ஆதரவினை தெரிவித்தனர்.
ஹரியானா மாநிலத்தில் எடுக்கப்படும் இம்முயற்சியைப் போல, தமிழ்நாட்டிலும் சட்டத்தினைக் கொண்டு வந்து மண்ணின் மைந்தர்களின் உரிமைகளை பாதுகாத்திட வேண்டும் என்கிறார்கள் தமிழ் அமைப்பினர்.