Black Panther Kabini

வைரலாகும் அரிய வகை கருஞ்சிறுத்தையின் புகைப்படம்

கர்நாடகாவின் கபினி பகுதியில் எடுக்கப்பட்ட கருஞ்சிறுத்தை (Black Panther) ஒன்றின் புகைப்படம் இணையதளத்தில் பிரபலமடைந்து வருகிறது. கருஞ்சிறுத்தை என்பது தனிவகை விலங்கினமல்ல. ஆசியா, ஆப்ரிக்காவின் சிறுத்தைகள் மற்றும் அமெரிக்காவின் ஜாகுவார்களின் இனத்தைச் சேர்ந்த நிறத்தில் மாறுபட்ட விலங்காகும். மெலனின் எனும் நிறமி உடலில் அதிக அளவில் இருப்பதால் இவை அடர்ந்த கருப்பு நிறத்தில் இருக்கின்றன. சூரிய ஒளி தரையில் உட்புக முடியாத நிலப்பகுதி வரை மூடியிருக்கும் அடர் காடுகளில்தான் கருஞ்சிறுத்தைகள் காணப்படுகின்றன.

கருஞ்சிறுத்தைகள் பெரும்பாலும் காண்பதற்கு அரிய ஒரு விலங்கினமாகும். மனிதர்கள் நுழைய முடியாத அடர்ந்த காடுகளில் இருப்பதால், கருஞ்சிறுத்தை ஒன்றினை புகைப்படம் எடுப்பது எளிதான காரியம் இல்லை. இயல்பாக சிறுத்தைகளின் உடலில் காணப்படும் புள்ளி கருஞ்சிறுத்தைகளிலும் காணப்படும். அவற்றை மிகவும் உற்றுப் பார்க்கும்போது மட்டுமே அப்புள்ளிகளைப் பார்க்க முடியும். இன்ஃப்ராரெட் வகை கேமராவை பயன்படுத்தும்போது மட்டுமே அப்புள்ளிகள் கண்ணுக்கு புலப்படும்.

ஷாஸ் ஜங்(Shaaz Jung) என்ற காட்டுயிர் புகைப்படக் கலைஞர் கபினி வனப் பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்றினை தன் காமிராவில் பிடித்திருப்பது இணையதளத்தில் தற்போது மிகவும் பரவலாகி வருகிறது. இந்தப் புகைப்படங்களை எடுப்பதற்கு ஒவ்வொரு நாளும் 10 மணிநேரம் 3 ஆண்டுகள் காடுகளில் சுற்றித் திரிந்ததாக ஷாஸ் ஜங் தெரிவித்துள்ளார். கருஞ்சிறுத்தை கம்பீரமாக நடந்து செல்வது போலவும், மரத்தின் பின்புறத்தில் இருந்து பதுங்கிப் பார்ப்பது போலவும், அதன் பழுப்பு நிறக் கண்கள் காமிராவினை உற்று நோக்குவதைப் போலவும், மரத்தின் கிளைகளில் நடந்து செல்வதைப் போலவும், நீரோடையில் தண்ணீர் அருந்துவதைப் போலவும் அவர் எடுத்திருக்கும் படங்கள் அனைவரையும் ஆச்சரியமடையவும், மெய்சிலிர்க்கவும் வைத்துள்ளன.

ஜங்கிள் புக் திரைப்படத்தில் காட்டிற்குள் தவிக்கும் மோக்லி என்ற சிறுவனுக்கு உதவும் ’பகீரா’ உருவத்தினை இந்த புகைப்படங்கள் நினைவுபடுத்துவதாய் இருக்கின்றன. இந்த கருஞ்சிறுத்தையின் புகைப்படத்தில் பகீரா-வைப் பார்ப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

அரசியல் அடையாளமாய் கருஞ்சிறுத்தை

காட்டில் கருப்பின் வீரத்தினை மையப்படுத்தும் அடையாளமாய் திகழும் கருஞ்சிறுத்தைகள் உலகத்தையே புரட்டிப் போட்ட அரசியலின் அடையாளமாகவும் விளங்குகின்றன. 1960களில் அமெரிக்காவில் கருப்பின மக்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராய் வீரியத்துடன் களமிறங்கிப் போராடிய சோசலிஸ்ட்களின் கட்சிக்கு கருஞ்சிறுத்தை கட்சி (Black Panther Party) என்று பெயரிடப்பட்டது. அன்றிலிருந்து கருஞ்சிறுத்தை என்ற அடையாளம் விடுதலையின் அடையாளமாய் மாறிப்போனது.

அடிமைப்பட்டுக் கிடந்த கருப்பின மக்களை கருஞ்சிறுத்தை கட்சி இணைக்க ஆரம்பித்தது . சட்டப்பூர்வமாக தனது கட்சியின் உறுப்பினர்களுக்கு காவல்துறையின் அடக்குமுறைகளை எதிர்த்து நிற்க துப்பாக்கிகளை வாங்கிக் கொடுத்தது.

  • எங்களுக்கு சுதந்திரம் வேண்டும். எங்கள் கறுப்பின சமூகத்தின் தலைவிதியை நாங்களே தீர்மானிக்க அதிகாரம் வேண்டும்
  • எங்கள் மக்களுக்கு முழு வேலைவாய்ப்பு வேண்டும்.
  • எங்கள் கருப்பின மக்களின் மீதான முதலாளிகளின் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க நாங்கள் விரும்புகிறோம்.
  • இந்த சீரழிந்த அமெரிக்க சமுதாயத்தின் உண்மையான தன்மையை அம்பலப்படுத்த எங்கள் மக்களுக்கு கல்வி வேண்டும்.

என்று பல்வேறு முழக்கங்களை முன்வைத்து புறப்பட்ட கருஞ்சிறுத்தை கட்சி அமெரிக்க கருப்பின மக்களை மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமுள்ள கருப்பின மக்களிடத்திலும் ஒருவகை எழுச்சியினை உருவாக்கியது.

விலங்கினங்களில் அரியவகை கருஞ்சிறுத்தைகளைப் போலவே, மால்கம் எக்ஸ்-ன் கொள்கைகளில் ஈர்ப்பு பெற்று அரிதாய் உருவாகிய கருஞ்சிறுத்தை கட்சி புரட்சியின் விதையை கருப்பின மக்கள் மத்தியில் தூவியது.

One Reply to “வைரலாகும் அரிய வகை கருஞ்சிறுத்தையின் புகைப்படம்”

  1. Informative article regarding both black panther and historical revolutionary politics behinde the black panther. When I read this I realised how for the blacks are suffering against white racis as like castisam in india. Really both are in a along battale against the hegemony….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *