சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வேறொரு வழக்கில் ஆஜராகி இருந்த அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறித்து நீதிபதிகள் சில கேள்விகள் கேட்டனர்.
குறிப்பாக நீதிமன்றங்களில் பின்பற்றக்கூடிய நடைமுறைகள் தொடர்பாக சுகாதாரத் துறையின் அறிவுரைகள் ஏதேனும் உள்ளதா? என்று கேட்கப்பட்டது.
அரசு தலைமை வழக்கறிஞரின் பதில்

இந்த கேள்விக்கு விஜய் நாராயணன் பதிலளித்த போது, இந்தியாவில் கோரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று இரண்டாம் அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறி விட்டதாகவும், இந்த இரண்டாம் அலை தொற்று எவ்வாறு செயல்படுகிறது? எப்படி மாறுகிறது? என்பதை மருத்துவ நிபுணர்களால் கணிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் நிலை
தமிழ்நாட்டில் கொரோனா இதுவரை மொத்தமாக 9,54,948 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 7,819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 12,970 பேர் இறந்துள்ளனர். நேற்று ஒரு நாளில் 25 பேர் இறந்துள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 8,87,663 குணமடைந்துள்ளனர்.
சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 772 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை உட்பட 18 மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. கோவையில் 540 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 583 பேரும், தூத்துக்குடியில் 244 பேரும், திருப்பூரில் 225 பேரும், திருச்சியில் 216 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூரில் நேற்று ஒரே நாளில் 113 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலியில் 193 பேரும், தஞ்சையில் 158 பேரும், சேலத்தில் 175 பேரும், கிருஷ்ணகிரியில் 156 பேரும், மதுரையில் 199 பேரும், நாகப்பட்டினத்தில் 157 பேரும், திண்டுக்கல்லில் 112 பேரும், ஈரோட்டில் 153 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி பணியை முடுக்கி விட்டுள்ள அரசு
கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவிக் கொண்டிருப்பதால் தமிழக சுகாதாரத்துறை கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் என பல கட்டுபாடுகளை விதித்துள்ளது. ஒரு பக்கம் தடுப்பூசி செலுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள்
பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்த மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை ஏப்ரல் 8-ம் தேதி விதித்தது. வணிக வளாகங்கள், திரையரங்குகள், கோவில்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, வார விடுமுறைகளில் கடற்கரைகளுக்கு செல்லத் தடை, உணவகங்கள் மற்றும் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிப்பு, திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் குறைந்தபட்ச நபர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அதில் அடங்கும். இந்த புதிய கட்டுபாடுகள் ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நிலையிலும், கோரோனா பாதிப்புகள் குறைந்ததாக இல்லை.
கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனை
தமிழ்நாட்டில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை நடத்தவிருக்கிறார். தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை எட்டியிருப்பதால் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது. ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பின் நிலை
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,40,74,564 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,038 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளது.
நான்காவது இடத்தில் தமிழ்நாடு
இந்தியாவில் கொரோனா தொற்றில் முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. அங்கு இதுவரை 35,78,160 பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 58,952 பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கேரளா இதுவரை 11,89,175 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் 8,778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது இடத்தில் கர்நாடகா உள்ளது. அங்கு இதுவரை 10,94,912 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 11,265 பேருக்கு தொற்று பரவியுள்ளது. நான்காவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.