இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்தியாவில் தற்போது மிக வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரசின் வகைகளில் இரு பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவித்தது. அதாவது E484Q மற்றும் L452R என அழைக்கப்படும் இரண்டு பிறழ்வுகளைக் கொண்ட ஒரு கொரோனா வைரஸ் மாறுபாட்டின் வகை நாட்டில் கண்டறியப்பட்டதாகக் கூறியது.
இரண்டு பிறழ்வுகள் ஒரே வைரசில்
பொதுவாக இத்தகைய பிறழ்வுகள் புதியவை அல்ல, இந்த பிறழ்வுகள் மற்ற வகைகளில் ஏற்பட்டிருப்பதைப் போல உலகெங்கிலும் நாம் காணக்கூடிய ஒன்று. ஆனால் இந்தியாவில் இந்த இரண்டு மரபணு பிறழ்வுகளும் ஒரே கொரோனா வைரஸ் வகையில் கண்டறியப்பட்டது தான் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது மற்ற வகைகளை போலல்லாமல் மிக தீவிரமாக தொற்று பரவலையும் உடலின் தற்காப்பு நோயெதிர்ப்பு ஆற்றலை மோசமாக பாதிப்பதாகவும் அறியப்படுகிறது.
இது இந்தியாவுடன் முடிந்து விடாது
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வகையின் மரபணு பிறழ்வு மிகுந்த கவலையளிப்பதாகவும், மேலும் இது மற்ற நாடுகளுக்கும் பரவக்கூடும் என்றும் ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷன் நிறுவனத்தின் டாக்டர் கவிதா படேல் (Dr. Kavita Patel, a non-resident fellow at the Brookings Institution) கூறுகிறார். மேலும் இது மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்று. இந்த பரவல் இந்தியாவுடன் மட்டுமே முடிந்துவிடாது என்று திங்களன்று சி.என்.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
இரண்டு வகைகளில் இதன் அச்சத்தை உணரலாம். முதலாவது இது இரட்டை பிறழ்வுகளைக் கொண்ட கொரோனா வைரஸ் வகையாதலால் மிகவும் அபாயகரமானது. இரண்டாவது, இதுவரை நாம் கண்டறிந்ததை ஒப்பீட்டளவில் கூறுவதானால் நுனியை மட்டுமே கண்டறிந்த பெரும் பனிப்பாறை போன்றது. எனவேதான் இது ஒட்டுமொத்தமாக ஆசியக் கண்டத்திற்கே மிகவும் அபாயகரமான ஒன்றாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்று அமெரிக்க முன்னாள் அதிபரான ஒபாமாவின் நிர்வாகத்தில் பணிபுரிந்த மருத்துவர் கவிதா படேல் கூறியிருக்கின்றார்.
நோய் எதிர்ப்பு மண்டலம் அறியும் முன்பே தாக்குகிறது
இந்தவகை பிறழ்வு கொண்ட வைரஸ் மனித உடலில் ஊடுருவியிருப்பதை உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் அறியும் முன்னமே தாக்குதலை தொடங்குவதால் இந்த வகை கொரோனா வைரஸ் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அவசர கால ஒப்புதல் அளித்துள்ள இந்தியா
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் -19 மாறுபாட்டின் இரட்டை பிறழ்வு ஏற்பட்ட புதிய கொரோனா வைரஸ் பற்றிய கவலையும் அதிகரித்து வருகிறது. இது வைரஸை மேலும் வீரியமிக்க தொற்றுநோயாகவும் மாற்றியிருக்கிறது. எனவே இந்த வாரம் இந்தியா அவசரகாலப் பயன்பாட்டிற்கான மூன்றாவது தடுப்பூசியான ரஷ்ய நாட்டின் ‘ஸ்புட்னிக்’ தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது.
அதிகரித்து வரும் இறப்பு விகிதம்
பிப்ரவரி முதல் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பெருந்தொற்று தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த நோய் பரவல் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் கிடைக்கக்கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை உள்ளிட்ட மருத்துவ சேவைகளின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய அழுத்தத்தை பற்றாக்குறையுடன் மருத்துவர்கள் எதிர்கொள்வதால் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது.
உதாரணமாக, குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவர் சங்கம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு 100% ஆக்ஸிஜன் வழங்கலை உறுதி செய்யுமாறு அரசாங்கத்திடம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் கோவிஷீல்ட் என அழைக்கப்படும் அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, அதன் உற்பத்தி திறன் மிகவும் அழுத்தமாக இருப்பதாக கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனை நிரம்பி வழிவதாகக் கூறியுள்ள நாக்பூர் மருத்துவமனை
நிலைமை மிக மோசமாயிருக்கிறதென்றும் தங்களது 900 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தற்போது நிரம்பி வழிகிறதாகவும் மேலும் சுமார் 60 நோயாளிகள் காத்திருப்பதாகவும் ஆனால் அவர்களுக்கு இடம் இல்லை என்றும் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அதிகாரி அவினாஷ் கவாண்டே (Avinash Gawande,Government Medical College and Hospital, Nagpur) கூறியிருக்கிறார். மகராஷ்டிரா மாநிலத்தின் மிகமுக்கிய வர்த்தக நகரம் நாக்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் உள்ளிட்ட பிற மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிலைமைகள் தொடர்ந்தால், இறப்பு எண்ணிக்கை உயரும் என்று அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவ அமைப்பின் தலைவர் குஜராத் மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
குழந்தைகளை பாதிக்கிறது
இந்த வைரஸ் மிக தீவிரமாகவும் அதிவேகமாக தொற்றுவதாகவும் கூறியிருக்கும் புதுதில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் குழந்தை மருத்துவர் தீரன் குப்தா (Dhiren Gupta, Paediatrician, Sir Ganga Ram Hospital in New Delhi) தங்களது மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சையில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தைகள் 35 பேர் சிகிச்சையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு கொரோனா வைரஸின் முதல் பரவலின்போது இதுபோன்று நடக்கவில்லை என்று கூறினார். நிலைமை குழப்பமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
ஒரு நாளில் 2 லட்சத்தைத் தாண்டிய தொற்று
இன்று காலை இந்தியாவின் சுகாதாரத்துறை கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 புதிய கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்தது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் 1,038 நோயாளிகள் தங்களது உயிரை இழந்துள்ளதாக பதிவுசெய்தது, மேலும் கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இதுவரை கொரோனா நோயாளிகள் 1,73,123 பேர் இறந்துள்ளனர்.
இரண்டாவது இடத்தில் இந்தியா
இந்தியாவின் மொத்த கொரோனா நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கையானது முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவிற்கு அடுத்த இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா பாதித்த நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் மெக்ஸிகோவிற்கு அடுத்த நான்காவது இடத்தில் இருக்கிறது.
மகாராஷ்டிராவில் 144 தடை
மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகியவை நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக உள்ளன. தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் 58,952 பேருக்கு புதிதாகவும் இதுவரை மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 35,78,160 ஆகவும், புதிதாக 278 நோயாளிகளின் இறப்புகளும் மொத்த இறப்பு எண்ணிக்கை 58,804 ஆகவும் உயர்ந்துள்ளன.
கொரோனா பரவலை தடுக்க மகாராஷ்டிரா அரசு பிரிவு 144-ஐப் பயன்படுத்தி ஐந்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒரு இடத்தில் கூடுவதை தடை செய்திருக்கிறது.
டெல்லி
டெல்லியில் கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் இதுவரை 7,67,438 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 17,282 புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் இரவு ஊரடங்கு
கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகா இந்த ஆண்டின் அதிகபட்ச கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை 11,265 என்று பதிவு செய்துள்ளது, இது மாநிலத்தின் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை 10.94 லட்சத்திற்கும் அதிகமானதாக உயர்த்தியுள்ளது. தற்போது பெங்களூரு உட்பட ஏழு மாவட்டங்களில் ஏப்ரல் 20-ம் தேதி வரை இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
CBSE 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து; 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12-ம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ஒத்திவைக்கவும், 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ரத்து செய்யவும் முடிவு செய்திருக்கிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தேர்வுகளை தள்ளி வைக்குமாறு எதிர்கட்சிகள் உட்பட பல தரப்பினர் கோரிக்கை எழுப்பியதால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் போடப்பட்டுள்ள 1 கோடியே 14 லட்சம் தடுப்பூசிகள்
அரசாங்க தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 33,13,848 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் மொத்த தடுப்பூசி பயனாளர்களின் எண்ணிக்கை 11,44,93,238 ஆக உயர்ந்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (I.C.M.R ) அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 13,84,549 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன, இதுவரை பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகள் 26,20,03,415 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் கிட்டத்தட்ட 130கோடி மக்களிடையே கண்டறிந்து எடுக்கப்பட்ட எண்களே. ஆனால் இதன் உண்மையான எண்கள் மிக அதிகமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கும்பமேளாவில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று
அண்மையில் நாடெங்கும் நடந்த உள்ளாட்சி மற்றும் மாநிலத் தேர்தல்கள் மற்றும் ஆங்காங்கே நிகழ்ந்த அரசியல் பேரணிகளையும், நாட்டின் வடக்கு நகரமான ஹரித்வாரில் நடந்துகொண்டிருக்கும் கும்பமேளாவில் கங்கை ஆற்றில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பேர்கள் குளிப்பதன் மூலம் இதன் பரவல் அதிகமாகக்கூடும் நுண்ணுயிரியல் நிபுணர் ஷாஹித் ஜமீல் (Shahid Jamil,Virologist) கூறியிருக்கிறார்.
தற்போது வட இந்தியாவில் ஹரித்வாரில் உள்ள கும்பமேளாவில் குழுமியுள்ள கோடிக்கணக்கான இந்து பக்தர்கள் பெரும்பாலும் முகமூடிகள் இல்லாமல் புனித கங்கை ஆற்றின் கரையில் திரண்டுள்ளது இந்த பெருந்தொற்று சூழலை மேலும் இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது. ஹரித்வாரில் வெறும் 48 மணி நேரத்தில் 1,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்திருக்கின்றனர்.
கும்பமேளா ஏற்பாட்டுக் குழுவின் பொறுப்பற்ற பேட்டி
இவ்வளவு கொரோனா பெருந்தொற்றுக்கு இடையிலும் தங்களது மதநம்பிக்கை எங்களுக்கு மிகப்பெரிய விஷயமென்றும் அந்த வலுவான நம்பிக்கையின் காரணமாகவே கங்கையில் நீராட இவ்வளவு பேர் இங்கு வந்துள்ளதாகவும், கங்கை மா (தாய்) கங்கை இந்த தொற்றுநோயிலிருந்து தங்களை காப்பாற்றும் என்று கும்பமேளா ஏற்பாட்டுக் குழுக்களில் ஒருவரான சித்தார்த் சக்ரபாணி என்பவர் AFB செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளதை பொறுப்பற்றதனமாகவே கருதவேண்டியிருக்கிறது.
சத்தீஸ்கர்
இதே நேரத்தில் கடந்த சில நாட்களாக சத்தீஸ்கர் ஒரு நாளைக்கு 10,000-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பதிவு செய்து வருவதால், மாநிலத்தில் உள்ள மருத்துவ உள்கட்டமைப்பு இவர்களை சமாளிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறது. ஏப்ரல் 13, செவ்வாய் அன்று மட்டும் 15,121 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இது சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை இல்லாத ஒரு நாளின் அதிகபட்ச நோயாளிகளின் எண்ணிக்கை ஆகும். இது இன்னும் வரும் நாட்களில் உயரக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.