கொடியன்குளம்

கொடியன்குளம் பிரச்சினையும், கோமதிநாயகம் கமிஷன் அறிக்கையும் – பேரா.அ.மார்க்ஸ் தரும் விளக்கம்

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் 1990-களில் நடைபெற்ற கொடியன்குளம் கலவரம் குறித்தும், அதையொட்டி நடைபெற்ற சாதிய தாக்குதல்கள் குறித்தும் பல்வேறு தேடலை உருவாக்கியிருக்கிறது.

கொடியன்குளம் சம்பவம் நடைபெற்றபோது உண்மை அறியும் குழுவாகச் சென்று அச்சம்பவம் குறித்த தகவல்களை வெளியிட்ட குழுவில் பங்கேற்றிருந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் அது குறித்த சில விவரங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பி.யூ.சி.எல் அமைப்பு உருவாக்கிய குழுவில் தான் சென்றதாகவும், பல விடயங்கள் துல்லியமாக தனக்கு நினைவில் இல்லை என்றும், எனினும் நினைவுகளைச் சுரண்டி சில தகவல்களை பதிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

பேராசிரியர் அ.மார்க்ஸ்

கொடியன்குளத்தில் நடந்தது என்ன?

ஜெயலலிதா தலைமையில் இருந்த அதிமுக ஆட்சியின் போதுதான் அந்த சாதி வன்முறைகள் நடந்தேறின. மூன்று கட்டங்களாக அது நடந்தது.

1. வன்முறை தொடங்கியது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவகிரி கிராமம். ஜூலை 30, 1995 அன்று அது நடந்தது.

2. அடுத்து அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம் சிங்காதகுறிச்சி எனும் இடத்தில் நடந்த சாதிய வன்முறை. ஆக 31, 1995 இல் இது நடந்தது.

3. மூன்றாவதுதான் கொடியன்குளம். தேதி ஆகஸ்ட் 31, 1995. முதல் இரண்டு சாதியக் கலவரங்களுக்கும் இதற்கும் உள்ள ஒரு வேறுபாடு என்னவெனில் முன்னது இரண்டும் இரு சாதிகளுக்குள் நடந்த மோதல்கள். பங்குபெற்ற முக்கிய சாதிகள் தேவர்கள் மற்றும் தேவேந்திரகுல வேளாளர்கள்.

இந்த மூன்றாவது வன்முறை என்பது கொடியன்குளம் எனும் முழுக்க முழுக்க தலித் மக்களே இருந்த அந்தக் கிராமத்தில் ஒளிந்திருந்ததாகச் சொல்லப்படும் கொலைக் குற்றத்தில் தேடப்பட்ட சில குற்றவாளிகளைத் தேடச் சென்ற சுமார் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு மேற்கொண்ட கொடும் வன்முறை.

மொத்தத்தில் சுமார் 18 பேர் கலவரத்தில் கொல்லப்பட்டதாக நினைவு.

கொடியன்குளத்தில் காவல்துறை தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள்

திருநெல்வேலி தேவர்கள் அதிகமுள்ள பகுதி. தூத்துக்குடி ஒப்பீட்டளவில் தேவேந்திரர்கள் அதிகம் உள்ள பகுதி. கொடியன்குளம் முழுக்க முழுக்க தேவேந்திரர்கள் உள்ள கிராமம். அது மட்டுமல்ல அங்கு இருந்த தேவேந்திரர்கள் ஓரளவு வசதியானவர்கள். அந்த வகையில் அங்கு அந்த வன்முறையை அரங்கேற்றிய காவல்துறை கொடும் வன்மத்துடன் அப்பகுதி மக்களின் சொத்துக்களை அழித்தது.

டெலிவிஷன் கருவிகள், டிராக்டர்கள், இருசக்கர வாகனங்கள் பெரிய அளவில் அழிக்கப்பட்டன. எல்லாவற்றையும் விடப் பெருங்கொடுமை அங்கிருந்த கிணறுகளில் எல்லாம் டீசல், பெட்ரோல் முதலியவற்றை ஊற்றி குடிக்க தண்ணீர் இல்லாமலும் செய்யப்பட்டது என அப்போது ஃப்ரண்ட்லைன் இதழில் அது தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரை குறிப்பிட்டது. இத்தனையும் சாதி வெறியுடன் காவல்துறையால் நிறைவேற்றப்பட்ட அத்துமீறல்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.

கொடியங்குளம் பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்கள் பேசும் ஆவணப்படம்

காஞ்சனை ரீல் மற்றும் தலித் முரசு இணைந்து 2001-ம் ஆண்டு Untouchable Country என்ற ஆவணப்படத்திற்காக கொடியன்குளத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் எடுக்கப்பட்ட பேட்டிகள்.

நன்றி – காஞ்சனை ரீல் & தலித் முரசு

கோமதிநாயகம் கமிஷன் அறிக்கை: வெந்த புண்ணில் ஒரு வேல்

தொடர்ந்து அ.மார்க்ஸ் அவர்கள் தனது பதிவில் கொடியன்குளம் சம்பவம் தொடர்பான கோமதிநாயகம் கமிஷன் அறிக்கை குறித்து எழுதியுள்ளார். தற்போது பணி ஓய்வு பெற்றுள்ள திரு.வைகுந்த் அன்று தன் போலீஸ் படை கொடியன்குளத்தில் செய்த அநீதிகளை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார். அப்போதிருந்த ஒரு DSP ரேங்க் அதிகாரியைத் தான் தனியே கூப்பிட்டு விசாரித்ததாகவும் அவர் முழுக்க முழுக்க தேவேந்திர மக்கள் வசித்த கிராமமான கொடியன்குளத்தில் அந்த நான்கு மணி நேரம் காவல்துறை செய்த அத்துமீறல்களை அப்படியே ஒத்துக்கொண்டதையும் பதிவு செய்கிறார். 

வைகுந்தின் கருத்தைக் கேட்ட ஜெயா அவரது ஆலோசனையின்படி கொடியன்குளம் கிராமத்தில் போலீஸ் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு அளிக்க 17 லட்சம் ரூபாய் அறிவித்ததோடு, கலவரத்தில் சம்பந்தப்பட்ட இரு சாதியினரும் அல்லாத மூன்று அமைச்சர்களை அப்பகுதிக்கு அனுப்பவும் செய்தார். மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்த கொடியன்குளம் மக்களுக்கு இவை எந்த ஆறுதலையும் அளிக்கவில்லை. அவர்கள் இவற்றைக் கண்டுகொள்ளவில்லை.

தேவேந்திர குல மக்களை இது வெகுவாக பாதித்திருந்ததும், நாங்கள் உண்மை அறியச் சென்றபோது கொடியன்குளம் கிராமமே வெறிச்சோடிக் கிடந்ததும் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. நண்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதுபோல அப்பகுதியில் தேவேந்திரர்கள் எல்லோரும் குறிப்பிட்ட அளவு வசதியானவர்கள். அதுவும் ஆதிக்கத்தில் இருந்தோர்க்கு எரிச்சல்தான். கொடியன்குள தாக்குதலில் காவல்துறையினர் மிகப் பெரிய அளவில் டி.வி, இரு சக்கர வாகனங்கள், வீடுகள் ஆகியவற்றை நாசம் செய்ததன் பின்னணி இதுதான்.

ஜெயா அரசு இது தொடர்பாக அமைத்திருந்த முன்னாள் மாவட்ட நீதிபதி கோமதிநாயகம் குழுவை தேவேந்திர மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கோமதிநாயகம் அது குறித்தெல்லாம் கவலைப்படாமல் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவான ஒரு மிக மோசமான அறிக்கையை அளித்தார். கொடியன்குளத்தில் நடந்தவை சாதி அடிப்படையிலான மோதல்கள் அல்ல என்றது அவரது அறிக்கை. அது மட்டுமல்ல கற்பனை செய்ய இயலாத அளவிற்கு இன்னொரு கொடும் பரிந்துரையையும் அது அளித்தது. சாதி அடிப்படையில் அளிக்கப்படும் உதவிகள், உரிமைகள் எல்லாவற்றையும் ரத்துசெய்ய வேண்டும் என்பதுதான் அது. ஜெயலலிதா அரசு இந்த அறிக்கையை வெளியிடவில்லை. ஆனால் அந்த அறிக்கை சொன்னவற்றில் அது சாதி அடிப்படையிலான மோதல் அல்ல என்பதை மட்டும் ஏற்றுக் கொண்டது.

1996 மாநிலத் தேர்தலில் தமிழக மக்கள் அதிமுக-விற்கு நல்ல பாடம் ஒன்றைக் கற்பித்தனர். அக்கட்சி தோற்கடிக்கப்பட்டு கருணாநிதி தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக இப்பகுதியில் கொடியன்குளம் பிரச்சினையைப் பெரிய அளவில் பயன்படுத்திக் கொண்டது. கொடியன்குளம் பிரச்சினையில் ஜெயலலிதா அரசின் போக்கைக் கடுமையாக விமர்சித்தது.

1996 முதல் ஆட்சியில் இருந்தபோதும் திமுகவும் அடுத்த இரண்டாண்டுகள் வரை கோமதிநாயகம் அறிக்கையை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் நவம்பர் 23, 1999 அன்று அவ்வறிக்கை வெளியிடப்பட்ட போது அதில் இருந்த சர்ச்சைக்குரிய வாசகமான, “இந்த மோதலை ஒரு ’சாதிக் கலவரம்’ எனச் சொல்வது பொருத்தமற்றது (misnomer)” என்பதைப் பதிவு செய்து கமிஷனின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டது. இதைச் சுட்டிக்காட்டும் Frontline இதழ், “1995-ல் இக்கலவரம் நடந்தபோது இதே திமுக இந்த கொடியன்குளம் போலீஸ் (அத்துமீறல்) நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்ததோடு 1996 தேர்தலில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி பெற்றது” என்பதைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் களத்தில் ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு நிலைபாடு. ஆம் எல்லாம் இப்படித்தான் நடந்துவிடுகிறது.

அரசுகள் அரசுகள்தான் . ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது அரிதுதான்.

இவ்வாறு முடிக்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *