டிஜிபப் டிஜிட்டல் மீடியா

இந்தியாவின் டிஜிட்டல் ஊடகங்களுக்கான பிரத்யேக சங்கம் உருவாக்கம்; 11 முக்கிய டிஜிட்டல் ஊடகங்கள் கைகோர்ப்பு

டிஜிட்டல் ஊடகங்கள் இணைந்து ‘டிஜிபப்  நியூஸ் இந்தியா பவுண்டேசன்’ (DIGIPUB News India Foundation) என்கிற பெயரில் தற்போது ஒருங்கிணைந்த ஒரு சங்கத்தை உருவாக்கி உள்ளனர்.

“உலகத்தரம் வாய்ந்த, சுயாதீனமான மற்றும் ஊடகத்துறையின் மிக உயர்ந்த தரங்களை நிலைநிறுத்தும் ஒரு வலுவான டிஜிட்டல் செய்தி சூழலை கட்டமைப்பதற்கான சிறந்த நடைமுறைகளை பிரதிநிதித்துவப்படுத்தவும், பெருக்கவும், உருவாக்கிடவும் ‘டிஜிபப்  நியூஸ் இந்தியா பவுண்டேசன்’ உருவாக்கப்பட்டுள்ளது” என அச்சங்கத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 டிஜிட்டல் ஊடகங்கள்

ஆல்ட் நியூஸ் (Alt News), ஆர்ட்டிகிள் 14 (Article 14), பூம்லைவ் (Boomlive), கோப்ராபோஸ்ட் (Cobrapost), எச்.டபிள்யூ நியூஸ் (HW News), நியூஸ் கிளிக் (NewsClick), நியூஸ்லாண்டரி (NewsLaundry), ஸ்க்ரோல் (Scroll), நியூஸ் மினிட் (The News Minute) , தி குயின்ட் (The Quint) மற்றும் தி வயர் (The Wire) ஆகிய 11 டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள் இணைந்து இச்சங்கத்தை உருவாக்கி உள்ளனர்.

இச்சங்கத்தில் இணைய தற்போது இந்தியாவில் இயங்கும் டிஜிட்டல் செய்தி நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே உறுப்பினர் சேர்க்கை   அனுமதிக்கப்படுகிறது. மேலும் டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றும் சுயாதீன மற்றும் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர்களும் உறுப்பினர்களாக இணைய அனுமதிக்கப்படுகிறார்கள். 

என்ன சொல்கிறார்கள் இந்த அமைப்பினர்?

“செய்தி நிறுவனங்கள் மட்டுமே டிஜிட்டல் செய்திகளை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் அல்லது குரல் கொடுக்க வேண்டும் என்று சங்கம் நம்பவில்லை. இந்த அமைப்பை பலப்படுத்த சுயாதீன ஊடகவியலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது ஒரு முக்கிய கடமையாகும்” என்று ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர்கள் குறித்து இச்சங்கத்தின் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

தி நியூஸ் மினிட் செய்தி நிறுவனத்தின் நிறுவனர் தான்யா ராஜேந்திரன் சங்கத்தின் முதல் தலைவராகவும் மற்றும் நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் பிரபிர் புர்காயஸ்தா இணைத் தலைவராகவும், குவின்ட் செய்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரீத்து கபூர் மற்றும் நியூஸ்லாண்டரி செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனர் அபிநந்தன் சேகிரி ஆகியோர் பொதுச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

“நம்பகமான தகவல்களை வழங்குவதற்கும், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் டிஜிட்டல் ஊடக நிறுவனங்களின் முக்கியத்துவம் தற்போது பெருகிவரும் சூழலில், செய்தி நிறுவனங்களின் இந்த ஒருங்கிணைந்த முன்னெடுப்பானது டிஜிட்டல் ஊடக அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மேலும் இன்று செய்தி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை தீர்க்க  உதவும்” என்று நியூஸ் மினிட் செய்தி நிறுவனர் தான்யா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

“பத்திரிகைத் துறையில் சுயாதீன செய்தி தொடர்பாளர்களே வலுவான, அச்சமற்ற முறையில் செய்திகளை சேகரிப்பதில் முன்னணியில் உள்ளனர், அதனால் இவர்களே  பெரும்பாலான அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். ஆதலால் அவர்களின் குரலைக் வெளிப்படுத்தும் இது போன்ற ஒரு சங்கம் இருப்பது முக்கியம். அது சுயாதீன பத்திரிகையாளர்களின் நலன்களையும் தேவைகளையும் பாதுகாக்கும்” என குயின்ட் செய்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரித்து கபூர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தொலைக்காட்சி செய்தி சேனல்கள் மற்றும் செய்தித்தாள்களை சுய ஒழுங்குபடுத்துவதற்கு முறையே செய்தி ஒளிபரப்பு சங்கம்(News Broadcasting Association) மற்றும் இந்திய பத்திரிகை சங்கம்( Press council of India) ஆகியவை உள்ளன. ஆனால் டிஜிட்டல்  ஊடக அமைப்புகளை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தும் அதுபோன்றதொரு அமைப்பு தற்போது வரை இல்லை. அந்த வெற்றிடத்தை DIGIPUB நிரப்பும் என நம்பப்படுகிறது.

அதிகரிக்கும் ஊடகவியலாளர்களின் மீதான தாக்குதல்

2014 முதல் 2019-ம் ஆண்டு வரை ஊடகவியலாளர்கள் மீது 200-க்கும் மேற்பட்ட கொடூரமான தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

2014 முதல் 2019 வரை 40 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் தாக்குதல் நடத்திய ஒருவர்கூட நீதிமன்றங்களால் குற்றவாளிகள் என உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கொலை செய்தவர்களின் பெரும்பாலானோரின் பின்புலங்களைப் பார்க்கும்போது அவர்கள் பாதுகாப்புப் படைகளைச் சார்ந்தவர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள், மதப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள், வலதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர் மாஃபியாக்களாக உள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டில் நடைபெற்ற CAA எதிர்ப்பு போராட்டத்தில் டிசம்பர் 11 முதல் டிசம்பர் 21 வரையிலான 10 நாட்களில் கிட்டத்தட்ட 14  ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தாக்கப்பட்ட 14 ஊடகவியலாளர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம் சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *