அங்கி தாஸ்

பாஜகவுக்கு ஆதரவாக பேஸ்புக்கை இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அங்கி தாஸ் பதவி விலகினார்

பேஸ்புக் நிறுவனத்திற்கான இந்தியா மற்றும் கிழக்கு, மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான கொள்கை இயக்குனரான அங்கி தாஸ் கடந்த செவ்வாய்கிழமை தன் பதவிகளில் இருந்து விலகியுள்ளார். அங்கி தாஸ் பாஜகவிற்கு ஆதரவாக பேஸ்புக் நிறுவனத்தினை செயல்பட வைத்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அங்கி தாஸ் பொது சேவைகள் செய்ய இருப்பதால் தற்போது இந்த பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்திருப்பதாக பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியாவிற்கான இயக்குநர் அஜித் மோகன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜார்னல்’ (The Wall Street Journal) இதழ் அங்கி தாஸ் பாஜகவிற்கு ஆதரவாக பேஸ்புக்கின் கொள்கை முடிவுகளை மாற்றி வருவதாக பல முக்கிய விடயங்களை வெளியிட்டிருந்தது. மேலும் அவர் பேஸ்புக் நிறுவன ஊழியர்களின் குழுவில் தொடர்ச்சியாக பாஜகவிற்கு ஆதரவான பதிவுகளை மேற்கொண்டு வந்ததையும், பாஜகவினருக்கு ஃபேஸ்புக் மூலமாக தொழில்நுட்ப பயிற்சிகள் அளித்ததையும் வெளிக்கொண்டு வந்தது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெறுவதற்கு உதவியாக இருந்தது குறித்த குற்றச்சாட்டுகளை ஜெஃப் ஹார்விட்ஸ் மற்றும் நியூலி பர்னெல் ஆகியோர் வெளிக்கொண்டு வந்தனர்.

பாஜக தலைவர்களின் வெறுப்புப் பிரச்சாரங்களை நீக்கினாலோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலோ அது பேஸ்புக் நிறுவனத்தின் “வணிக வாய்ப்புகளை” இழக்கச் செய்யும் என்று ஊழியர்களை அங்கிதாஸ் எச்சரித்ததாக ஆகஸ்ட் 14-ம் தேதி ’வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ குற்றம் சாட்டியிருந்தது. இதுதொடர்பாக அங்கி தாஸ் நீக்கப்பட வேண்டும், ஃபேஸ்புக் இந்திய அலுவலகம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் இந்தியாவின் எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலரும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

ஆகஸ்ட் மாதத்தில் அங்கிதாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்தியாவில் உள்ள முஸ்லீம்களை “சீரழிவு சமூகம்” என பகிர்ந்து அது பிரச்சினையாக உருவெடுத்ததால் நிறுவனத்தில் பணிபுரியும் முஸ்லீம் ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டதாக buzz feed செய்தி நிறுவனம் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் பேஸ்புக் நிறுவன பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *