கோமுகி அணை

எடப்பாடியின் புதிய கைகான் வளைவு திட்டத்தினால் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் சந்திக்க உள்ள சிக்கல்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கோமுகி ஆறு, மலையின் அடிவாரத்தில் உள்ள கோமுகி அணைக்கு வந்து சேர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மலைப் பகுதிகளிலும், சமவெளிப் பகுதிகளிலும், கடலூர் மாவட்டத்திலும் என பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வசதி தருவதோடு, குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நீர் ஆதாரமான கைகான் வளைவு நீராதாரத்தை திருப்பிவிடக் கூடிய வகையில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதிய கைகான் வளைவுத் திட்டத்தினை உருவாக்கியுள்ளார். இத்திட்டத்தின் மூலம் கைகான் நீராதாரமானது சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கரியக்கோயில் நீர்த் தேக்கத்திற்கு சென்றடையும். 

இப்படி மாற்றி அமைப்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் மணிமுத்தாறு பாசன பரப்பு ஆகியவை தனது நீராதாரத்தை இழந்து விடும் சிக்கல் இருக்கிறது.

இது குறித்து நீர்வள ஆதார இயக்கத்தின் முத்துமணி அவர்கள் மெட்ராஸ் ரேடிகல்ஸ்-சிடம் பேசியது: 

”கடலூர் மாவட்டத்தின் முக்கியமான நீராதாரமான மணிமுத்தாறு வரலாற்று சிறப்புமிக்க ஆறுகளில் ஒன்றாகும். கல்வராயன் மலையில் பல்வேறு சிற்றோடைகளாக உற்பத்தியாகி கோமுகி ஆறாக மலையடிவாரத்திற்கு வந்து சேருகிறது. அப்படி வந்து சேரும் இடத்தில் கோமுகி அணை 1966-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையிலிருந்து கோமுகி ஆற்றில் திறந்து விடப்படும் நீர் கடலூர் மாவட்டம் நல்லுர் கிராமத்தில் மணிமுத்தாற்றோடு இணைகிறது.

இந்த இரண்டு ஆறுகளும் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் 46 கிராமங்களில் உள்ள 5,680 ஏக்கர் நிலங்களுக்கும், புதிய ஆயக்கட்டு பகுதியில் 7 கிராமங்களில் உள்ள 5,000 ஏக்கர் விளை நிலங்களுக்கும் பாசனத்திற்கான நீரை வழங்குகிறது.

இந்த அணை கட்டப்படாத ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆற்று நீரை விருத்தாசலம் பகுதி மக்கள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஏரி மற்றும் குளங்களில் தேக்கி வைத்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

இரண்டு மாவட்டங்களின் 52 கிராமங்களுக்கான ஒரே நீர் ஆதாரம்

கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் கோமுகி அணையினால் 52 கிராமங்களும், அவற்றின் 10,680 ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

இந்த பகுதிக்கு இரண்டு ஆறுகள் மட்டுமே ஒரே ஆதாரமாக உள்ளது. குடிநீருக்கும், பாசனத்திற்கும் இதைத் தவிர வேறு வழிகள் ஏதும் இல்லை.

கோமுகி மற்றும் மணிமுத்தாற்றில் தண்ணீர் வந்து பத்து ஆண்டுகளாகிறது. இதனால் இங்குள்ள ஏரிகளும் வறண்டு, நிலத்தடி நீரும் சிக்கலாக இருக்கிறது. இதேநிலை நீடித்தால் கோமுகி அணை நீரை நம்பியிருக்கும் இப்பகுதிகள் முழுவதுமே தண்ணீர் பஞ்சம் நிறைந்த பகுதிகளாக மாறிவிடும்.

பல கி.மீ தூரம் நடந்து தண்ணீர் கொண்டுவரும் கல்வராயன் மலையின் மலைவாழ் மக்கள்

புதிய கைகான் வளைவுத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படப் போகிறது?

ஏற்கனவே நிலைமை இப்படி இருக்கையில் இப்போது புதிய சிக்கல் ஒன்றை அரசு உருவாக்கியிருக்கிறது. கல்வராயன் மலையில் கள்ளக்குறிச்சி மாவட்டப் பகுதியில் உற்பத்தியாகும் கோமுகி ஆறானது சேலம் மாட்டத்தில் 10 கிலோ மீட்டரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 35 கிலோ மீட்டரும், 29 மலை கிராமங்கள் மற்றும் காடுகள் வழியாகவும் பயணிக்கிறது. இந்த மலை கிராம மக்களின் குடிநீர், பாசனம் மற்றும் காடுகள், அவற்றிலுள்ள விலங்குகள் என அனைத்து பயன்பாட்டிற்கும் இந்த ஆறே ஒரே நீராதாரமாக விளங்கி வருகிறது.

இப்பகுதிகளில் மனிதர்கள் வாழ்வதற்கு முன்பிருந்தே பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இயற்கையாக உருவாகிய கோமுகி மற்றும் மணிமுத்தாறு இரண்டு ஆறுகளும் அவைகள் செல்லும் பகுதிகளுக்கு இன்றுவரை உயிராதாரமாக விளங்கி வருகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு ஆறுகளையும் முற்றாக மலடாக்கும் கைகான் வளைவு திட்டத்தை அரசு தற்போது அவசர அவசரமாக செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

புதிய கைகான் வளைவு திட்டத்தினை எதிர்த்து நடைபெற்ற போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கோமுகியாறு அங்கிருந்து தென்மேற்கு திசையில் பயணித்து சேலம் மாவட்டம் கைகான் வளைவு என்ற இடத்தில் கிழக்கு நோக்கி வளைந்து, மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்ட மலைகளில் பயணித்து மலையடிவாரத்தில் உள்ள கோமுகி அணைக்கு வந்து சேருகிறது.

சேலம் மாவட்டம் கைகான் வளைவில் கோமுகி ஆற்றிலிருந்து 500 மீட்டர் கால்வாயை மேற்கு திசையில் தோண்டி சேலம் மாவட்டம் கல்வராயன் மலையடிவாரத்தில் உள்ள கரிக்கோயில் நீர்த்தேக்கத்திற்கு செல்கிற காட்டோடையில் இணைத்து விட்டால், அதன் பிறகு தண்ணீர் கோமுகி அணைக்கு வந்து சேராது.

ஏனென்றால் கைகான் வளைவு என்ற இடத்தில் கோமுகி ஆறு மலை உச்சியிலும், கரிக்கோயில் நீர் தேக்கத்திற்கு செல்லும் ஓடையோ மலையடிவாரத்தில் சரிவாகவும் செல்கிறது. இதனால் ஏற்கனவே பாசனம் பெரும் பகுதி நீரின்றி வறண்டு போகும்”

என்று முத்துமணி குற்றம் சாட்டுகிறார்.

முதன்மைப் படம்: கோமுகி அணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *